வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

March 6, 2015

நியூட்ரீனோ (Neutrino) என்னும் பிசாசு - பகுதி 2



ஒளியின் வேகம் வெற்றிடமொன்றில் 299 792 458 மீட்டர்/செக்கன் என்பதாகும். அதாவது கிட்டத்தட்ட மூன்று இலட்சம் கிலோமீட்டர்கள் ஒரு செக்கனில் செல்லும். ஒளியின் இந்த வேகம் வெற்றிடங்களில் மாறிலி. நமது பேரண்டத்தில் உள்ள அனைத்தையும் விட அதிவேகமாகப் பயணம் செய்யக் கூடியது ஒளிதான் என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்திருந்தார்கள். ஐன்ஸ்டைன் இதில் திடமாகவே இருந்தார். ஆனால் சமீபத்தில் இத்தாலியில் ஆராய்ச்சியொன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விஞ்ஞானிகள் கூறிய கருத்து அறிவியல் உலகையே ஒரு நிமிடம் ஆடிப்போக வைத்தது. இதுவரை நம்பிவந்த கணித, இயற்பியல் சமன்பாடுகளை உடைக்க இருந்தது. அதற்கு மூலகாரணமாக இருந்தது எது தெரியுமா? நியூட்ரீனோ.


ஆம்! நியூட்ரீனோ ஒளியைவிட சற்றே அதிக வேகத்தில் பயணம் செய்கிறது என்ற அறிக்கையைச் சமர்ப்பித்தனர் இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானிகள். அதிக வேகமென்றால், ரொம்பவும் அதிக வேகமெல்லாம் கிடையாது. 60 நானோ செக்கன்கள் அதிகமாகப் பயணிக்கிறது என்று கணித்தனர். அதுவே அனைவரையும் திகைக்க வைத்தது. ஒளியைவிட ஒரு நானோ செக்கன் அதிகமாகக்கூட எதுவும் பயணிக்க முடியாது என்பதுதான் நம்மால் எடுக்கப்பட்ட முடிந்த முடிவு. அதை உடைத்தது நியூட்ரீனோ என்றார்கள்.


ஆனால், அதன்பின்னர் மீண்டும் மீண்டும் அதே பரிசோதனைகளைச் செய்து பார்த்தபோது, ஒளியைவிட குறைவான வேகத்திலேயே நியூட்ரீனோ பயணித்தது. அதனால், முன்னர் தங்களுக்கு கிடைத்த அறிக்கைகளில் தவறு இருக்கலாமோவென்று சந்தேகம் கொள்கின்றனர். எது எப்படியோ, ஒளியுடன் சவால்விடக் கூடிய ஒரேயொரு துகளாக நியூட்ரீனோ விளங்குகிறது.


நியூட்ரீனோ என்றால் என்ன என்பதை நீங்கள் இப்போது தெரிந்து கொள்ள வேண்டும். உனகில் உள்ள தனிமங்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவையென்று உங்களுக்குத் தெரியும். அணுக்களே மேலும் பிரிக்க முடியாத மிகச்சிறிய துகளென்று முன்னர் நம்பப்பட்டு வந்தது. பின்னர் அணுவின் அணுக்கரு பிளக்கப்பட்டு, அதனுள் மேலும் பலவகையாக துகள்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை உபஅணுத்துகள்கள் (Subatomic Particle) என்கிறார்கள். நியூட்ரீனோவும் உபஅணுத்துகள்களில் ஒன்றுதான்.


நியூட்ரீனோவுக்கு மின்னேற்றம் கிடையாது, எடை கிடையாது, வலிமையற்றை அணுசக்தியைத் (weak nuclear force)
தவிர, வேறு எந்த விசையினாலும் ஈர்க்கப்படாதது. ஒவ்வொரு நொடிக்கும் 50 ட்ரில்லியன் நியூட்ரீனோக்கள் நம் உடலினூடாகச் சென்றுகொண்டேயிருக்கின்றன. அவ்வளவு நியூட்ரீனோக்கள் நம் உடலினோடாக ஒவ்வொரு கணத்திலும் ஊடுருவிச் சென்றும் நம்மால் அதை உணர முடியவில்லையென்றால், அது எப்படிப்பட்டது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். எதையும் ஊடுருவிச் செல்லக் கூடிய அளவு சிறியது நியூட்ரீனோ. அதை எந்தப் பாத்திரத்திலும் சேர்த்து வைத்திருக்க முடியாது. கைப்பற்றவும் முடியாது.


ஆனால் அவற்றை கண்டுபிடிக்க ஆராய்ச்சி மையமொன்றை தமிழ் நாட்டில் அமைக்க இருக்கிறார்கள்.


எப்படி?


- தொடரும்




No comments:

Post a Comment