வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

May 11, 2015

வெரோனிக்காவின் முக்காடு - (பகுதி 7)



சமீபத்தில் 'எனக்குள் ஒருவன்' என்றொரு படம் பார்த்தேன். அதில் சித்தார்த் இரண்டு விதமான வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழுக்குப் புதுமையானதொரு கதையைச் சொல்லும் படமது. அந்தக் கதையின் கரு இதுதான். ஏழையாக, அழகில்லாமல் இருக்கும் ஒருவன், தான் காணும் கனவில் அழகிய, பணக்காரனாக வருகிறான். நிஜத்தில் இருப்பதை விட, என்னவாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறானோ, அப்படியெல்லாம் கனவில் வருகிறான். ஒரே மனிதன் இருவேறு தளங்களில், வெவ்வேறு மனிதனாகக் காட்சி தருகிறான். ஆனால், படத்தின் முடிவில்தான் தெரிகிறது, நடந்தவை எல்லாமே தலைகீழானவையென்று. நிழல் நிஜமாகவும், நிஜம் நிழலாகவும் முடிவில் மாறிவிடுகிறது. ரொம்பக் குழப்புகிறேனா? படத்தை இதுவரை நீங்கள் பார்த்திருக்காவிட்டால், ஒருமுறை பார்த்துவிடுங்கள். நான் சொல்ல வருவது அப்போது புரியும். அதுசரி, அந்தப் படத்தைப்பற்றி இங்கு எதற்குச் சொல்கிறேனென்றுதானே யோசிக்கிறீர்கள். சொல்கிறேன். லியர்னாடோ டா வின்சி நிஜமான 'மொனா லிசா' ஓவியத்தைக் கி.பி.1503ம் ஆண்டளவுகளில் வரைந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள். இந்த மொனா லிசா ஓவியம் தற்சமயம் பாரிஸில் இருக்கும் 'லூவ்ரெ' (Louvre) கண்காட்சியகத்தில் இருக்கிறது. அதனால் நிஜமென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மொனா லிசா ஓவியத்தை 'லூவ்ரெ மொன லிசா' என்று இனிச் சொல்லிக் கொள்வோம். இதுவரை உலகமெங்கும் தனியாளாக நின்று வெற்றி முழக்கம் செய்துகொண்டிருந்த 'லூவ்ரெ மொனா லிசா'விற்குப் போட்டியாக முளைத்தது ஒரு புது 'மொனா லிசா'. உலகமே அதிசயத்தில் துள்ளிக் குதித்தது. ஏற்கனவே, 'டா வின்சி' ஒரு மர்ம மனிதராக ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டு வருவதோடு, அவரின் பல ஓவியங்களும் மர்மங்கள் நிறைந்தவையென்று பார்க்கப்பட்டுவரும் வேளையில், இப்படியொரு புதுத் திருப்பத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. அச்சு அசலாக இரண்டும் ஒரே மொனா லிசாவாக இருந்ததால், ஒருவேளை அது மொனா லிசா என்னும் பெண்ணின் இரட்டைப் பிறவியாக இருக்கலாமென்றும் சந்தேகப்பட்டார்கள். அப்புறம் இது மொனா லிசா என்னும் பெண்ணின் இரட்டைப் பிறவியல்ல, மொனா லிசா ஓவியத்தின் இரட்டை என்ற முடிவுக்கு வந்தார்கள். இப்படியொரு இரட்டை (Twin) மொனா லிசா ஓவியத்துக்கு இருப்பதை யாரும் அதுவரைஅறிந்திருக்கவில்லை. இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பலருக்குக் கூட இந்தச் செய்தி புதிதாகத்தான் இருக்குமென நம்புகிறேன். 




லூவ்ரெ மொனா லிசாவின் இரட்டை மொனா லிசா என்று சொலப்படும் ஓவியம், சில நூற்றாண்டு காலமாக யாரும் தீண்டாத ஓவியமாக, ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரிலிருக்கும் தேசியக் கண்காட்சிச்சாலையில் (The Prado, Spain's national museum) இருந்து வந்திருக்கிறது. 16ம் நூற்றாண்டிலும், 17ம் நூற்றாண்டிலும் டா வின்சியின் ஓவியங்களைப் பலர் நகலாக வரைந்திருக்கிறார்கள். அவற்றில் மொனா லிசாவின் ஓவியத்தையும் நகலெடுத்துப் பல ஓவியங்கள் இருக்கின்றன. நிஜமான ஓவியம் இருக்கும்போது, நகல்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் எப்போதும் குறைவாகவே இருக்கும். அந்த நகல்களும் திறமையான ஓவியர்களாலேயே வரையப்பட்டிருக்கும். அதுமட்டுமில்லாமல், அவை முந்நூறு, நானூறு ஆண்டுகள் பழமையானவை. ஆனாலும் அவை நகலென்பதாலேயே அதிகக் கவனம் கொடுக்கப்படாமல் வைக்கப்படுகின்றன. மொனா லிசாவின் நகல் ஓவியங்களை, பிராடோ தேசியக் கண்காட்சிச்சாலையில், தனியாகப் பாதுகாத்து வந்தனர். மிகச்சமீபத்தில், நவீனத் தொழில்நுட்பங்களின் மூலம் அந்த ஓவியங்கள் அனைத்தையும் எடுத்து ஆராய்ச்சி செய்தனர். பழைய ஓவியங்களுக்கு 'எக்ஸ் கதிர்' (X Ray), 'புற ஊதாக்கதிர்' (Ultra Violet), 'அகச்சிவப்புக் கதிர்' (Infrared) ஆகிய கதிர்களைச் செலுத்தி ஆராயும் முறை தற்சமயத்தில் வழக்கத்தில் உள்ளது. இந்தக் கதிர்ச் சோதனைகளால் ஒவ்வொரு மொனோ லிசா நகல்களையும் ஆராய்ந்து பார்த்தனர். அவற்றில் இருந்த ஒரு மொனா லிசா ஓவியத்தில், மொனா லிசாவின் உருவம் மட்டும் தெளிவாகத் தெரிய, உருவத்தைச் சுற்றியுள்ள பின்னணியில் கருப்பு நிறம் பூசப்பட்டிருந்தது. கருப்புநிறப் பின்னணி பூசப்பட்டிருந்தது ஏனோ வித்தியாசமான உணர்வைக் கொடுக்க, அதை நன்றாக ஆராய்ந்து பர்த்தார்கள். அப்போதுதான் அந்த ஆச்சரியம் நடந்தது. அந்த ஓவியத்தின் மீது எக்ஸ் கதிர்களைச் செலுத்திப் பார்த்தபோது மிரண்டே போனார்கள். அதுவரை காணத்தவறிய ஒரு காட்சியை அவர்கள் அங்கே கண்டனர். 





அந்த மொனா லிசா ஓவியத்தில் எக்ஸ் கதிர்கள் பட்டவுடன், கருப்பு நிறத்துக்குக் கீழே வேறொரு அழகான வர்ணமயமான பின்னணி அந்த ஓவியத்தில் வரையப்பட்டிருந்தது தெரிந்தது. அந்தப் பின்னணிக் காட்சியைச் சரியாகக் கவனித்தபோது, நிஜமான லூவ்ரெ மொனா லிசா ஓவியத்தின் பின்னணி எதுவோ, அச்சு அசலாக அந்தப் பின்னணி அங்கே இருந்தது. என்ன நடக்கிறதென்றே புரியவில்லை அந்த ஓவியத்தை ஆராய்ச்சி செய்தவர்களுக்கு. அதாவது ஒரு அழகான ஓவியத்தின் மேல் பகுதிக்குக் கருப்பு வர்ணத்தை வேண்டுமென்றே தீட்டி உருமறைப்புச் செய்திருக்கிறார்கள். நிஜ ஓவியத்தைப் போலவேயிருக்கும் இந்த ஓவியம், யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அந்தக் கருப்பு வர்ணம் பூசப்பட்டிருந்தது. யார் அப்படிச் செய்திருந்தார்களென்பது பற்றிய எந்தக் குறிப்பும் வரலாற்றில் காணப்படவில்லை. கி.பி.1660ம் ஆண்டளவுகளில் அந்தக் கருப்பு வர்ணம் பூசப்பட்டிருக்கலாம். இதில் இன்னுமொரு ஆச்சரியமும் இருந்தது. அந்தக் கருப்பு வர்ணத்தை மெதுவாக சுரண்டி நீக்க முயற்சித்தபோது, அது இலகுவாகவே அந்த ஓவியத்திலிருந்து நீங்கியது. அப்புறம் என்ன. அந்தக் கருப்பு நிறம் மொத்தமாக நீக்கப்பட்டது. நீக்கிவிட்டுப் பார்த்தவர்களுக்கு தங்கள் கண்களையே நம்பமுடியவில்லை. லூவ்ரெ மொனா லிசாவை அப்படியே உரித்து வைத்ததுபோல இன்னுமொரு மொனா லிசா அங்கே காணப்பட்டாள். ஒருவேளை இதுவும் ஏனைய மொன லிசாக்களைப்போல நகல் ஓவியமாக இருக்குமோவென்ற ரீதியில் ஆராய்ந்து பார்த்தபோது, அந்த ஓவியம் லூவ்ரெ மொனா லிசாவின் நகலல்ல என்று இலகுவாகப் புரிந்து போனது. இரண்டு ஓவியங்களிலும் இருந்தது ஒரே மொனா லிசாதானென்றாலும் அவை வரையப்பட்டிருந்த பார்வைக் கோணங்களில் சற்றே மாற்றமிருந்ததைக் கண்டுபிடித்தார்கள். ஏனைய நகல்கள் அனைத்திலும் மொனா லிசாவின் பின்னணிக் காட்சிகள் வெவ்வேறான விதங்களில், மழுப்பப்பட்டவையாக இருந்தன. ஆனால் இந்த மொனா லிசாவில் இரண்டு பின்னணிக் காட்சிகளும் ஒன்றுபோல இருந்தன. இரண்டு மொனா லிசாக்களின் காலங்களை ஆராய்ந்து பார்த்தபோது, கிடைத்த பதில் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தது.




இரண்டு மொனா லிசா ஓவியங்களையும் பலவித ஆராய்ச்சிகளுக்குட்படுத்திப் பார்த்தபோது, இரண்டு ஓவியங்களுமே ஒரே காலத்தில், அதுவும் ஒரே நேரத்தில் வரையப்பட்டதாகத் தெரிய வந்தது. அதாவது, லியர்னாடோ டா வின்சியே இரண்டு படங்களையும் ஒரே சமயத்தில் வரைந்திருக்க வேண்டும். இல்லையென்றால், லியர்னாடோ டா வின்சி, மொனா லிசாவை மாடலாக இருக்கும்படி வைத்து, அந்த ஓவியத்தை வரைந்து கொண்டிருந்தபோது, டா வின்சியைப் போலவே ஓவியம் வரைவதில் திறமையுள்ள வேறொருவர், அருகில் நின்றுகொண்டு இரண்டாவது ஓவியத்தை வரைந்திருக்க வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். "லியர்னாடோ டா வின்சியே ஒரு ஓவியத்தை வரைந்த பின்னர், இரண்டொரு நாட்கள் கழித்து, முதலாவது ஓவியத்தைப் பார்த்து இரண்டாவது ஓவியத்தை வரைந்திருக்கலாம்தானே!". இப்படி ஒரு சந்தேகம் அனைவருக்கும் வருவது இயல்புதான். 'அது எப்படி இரண்டு ஓவியங்களையும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் இருவர் அருகருகேயிருந்து வரைந்திருக்கிறார்கள்' என்ற முடிவுக்கு வந்தார்கள்? ஓவியங்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்ததற்குப் பெரிய காரணம் இருந்தது. அதுவும் ஆச்சரியமான ஒரு காரணம்தான்.




தொடர்வதற்கு முன்னர் ஒன்று. மொனா லிசா ஓவியங்களில் இப்போது இரண்டு ஓவியங்களைப்பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இரண்டு ஓவியங்களையும் குறிப்பிடுவதற்கான பெயர்களை நாம் முடிவு செய்து கொள்ளவேண்டும். நிஜமான மொனா லிசா என்று கருதப்படும் ஓவியத்தை, 'லூவ்ரெ மொனா லிசா' என்று சொல்வார்களென முன்னர் சொன்னேனல்லவா? அதுபோல, இந்த இரண்டாவது மொனா லிசா ஓவியத்தை 'பிராடோ மொனா லிசா' (Prado Mona Lisa) என்று அழைக்கிறார்கள். நாங்களும் இனி அப்படியே அழைத்துக் கொள்ளலாம். இனி விசயத்துக்கு வருகிறேன். இரண்டு ஓவியங்களும் ஒரே நேரத்தில் வரையப்பட்டன என்பதற்கான சான்றுகள் ஆராய்ச்சியாளர்களுக்கு எப்படிக் கிடைத்தன தெரியுமா? லூவ்ரெ மொனா லிசா ஓவியத்தை டா வின்சி வரையும்போது, எந்த எந்த இடங்களை அழித்து மீண்டும் திருத்தங்கள் செய்திருந்தாரோ, அதே இடங்களில் பிராடோ மொனா லிசா ஓவியத்திலும் அழித்துத் திருத்திய மாற்றங்கள் இருந்தன. அதாவது ஓவியம் வரையும்போது ஏற்படும் தவறுகளை அழித்துவிட்டு மீண்டும் திருத்தி வரையும்போது, அங்கு ஆழமான அடையாளங்களும், ஓவியங்களில் பயன்படுத்தும் மை அதிகளவில் ஒன்றுக்குமேல் ஒன்றாகப் பூசப்பட்டிருக்குமல்லவா? இவையனைத்தும் இரண்டு ஓவியங்களிலும் ஒன்றுபோல இருந்தன. லூவ்ரெ மொனா லிசாவில் அப்படிப் பல இடங்களில் டா வின்சி திருத்தங்களைச் செய்திருந்தார். அதேயளவு இடங்களில் பிராடோ மொனா லிசாவிலும் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன. இதுவொரு சாதாரண நிகழ்வு கிடையாது. தற்செயலாக அமையக் கூடிய நிகழ்வாகவும் இருக்க முடியாது. ஒரே இடத்திலிருந்து இருவர் ஒரே ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கும்போது, அதில் தலைமையாக இருந்து வரைபவருக்கு ஏற்படும் அதிருப்தியினால் மாற்றங்கள் செய்யும்போது, அவரது சிஷ்யரானவரும் அந்த மாற்றங்களைச் செய்து வரைந்திருக்க வேண்டுமென்று உறுதியாகச் சொல்ல முடிந்தது. அத்துடன் அந்த இரண்டாவது மொனா லிசா ஓவியத்தை வரைந்தவர் நிச்சயமாக டா வின்சியின் சிஷ்யர்களில் ஒருவராகத்தான் இருக்க முடியுமென்ற முடிவுக்கும் வந்தார்கள். நீங்கள் பார்க்கும் அந்த பிராடோ மொனா லிசாவை நன்றாக உற்றுப் பாருங்கள். டா வின்சியே வரைந்ததாகச் சொல்லப்படும் நிஜ லூவ்ரெ மொனா லிசாவை விட, மிக அழகான தோற்றத்தில் அந்தப் பிராடோ மொனா லிசா ஜொலிப்பது தெரியும். அது மட்டுமில்லாமல், அந்த மொனா லிசாவின் உடையின் மேல் போர்த்தியிருக்கும் மெல்லிய பட்டுத் துணியினூடாக ஆடைகள் தெரிவதைத் தத்ரூபமாக வரைந்திருப்பது தெரியும். டா வின்சியைப் போலவே கைதேர்ந்த ஓவியர் ஒருவராலேயே அப்படி வரைந்திருக்க முடியும். அல்லது டா வின்சியால் மிகக்கவனமெடுத்துப் பயிற்றுவிக்கப்பட்ட ஒருவராலேயே அப்படியொரு ஓவியத்தை வரைந்திருக்க முடியும். காரணம் நிஜ மொனா லிசா ஓவியத்தை விட, இது மிகவும் அழகாகவும், இளமையாகவும் வரையப்பட்டிருக்கிறது என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மைதான். 




டா வின்சியின் சிஷ்யர்களில் ஒருவர்தான் அந்த ஓவியத்தை வரைந்திருக்க முடியுமென்ற முடிவுக்கு வந்தால், அது அவரின் இரண்டு சிஷ்யர்களில் ஒருவராகத்தான் இருக்கும். அந்த இருவரில் ஒருவரை உங்களுக்கு ஏற்கனவே தெரியும். முன்னர் அவரைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன். அவர்தான் டா வின்சியின் காதலரான 'அந்த்ரேயா சலை' (Andrea Salai) என்பவர். அவர் இல்லாத பட்சத்தில் டா வின்சியின் பிரதான சிஷ்யரான ஃபிரான்செஸ்கோ மெல்ஷி' (Francesco Melzi) ஆகவும் இருக்கலாம். திறமையின் அடிப்படையில் பார்த்தால் மெல்ஷி வரைந்திருக்கவே சாத்தியம் அதிகம் உண்டு. ஆனால், டா வின்சியின் அந்தரங்க ஓவியங்களை, அவருடன் இருந்து வரையக் கூடியவரென்று பார்த்தால் சலையாக இருக்கும் சாத்தியம் உண்டு. இரு ஓவியங்களும் மிக அருகருகே இருந்தவாறே வரையப்பட்டிருக்க வேண்டும். அதற்குக் காரணம் இரண்டு ஓவியங்களும் வரையப்பட்டிருக்கும் பார்வைக் கோணம் (Angle of view) என்று சொன்னேனல்லவா? அந்தப் பார்வைக் கோண வித்தியாசத்தைக்கூட ஆராய்ச்சியாளர்கள் அளந்திருக்கிறார்கள். மிகச்சரியாக 2.7 அங்குலம் இடைவெளிகளிலுள்ள பார்வைக் கோணங்களில் அந்த இருவரும் நின்றுகொண்டு மொனா லிசாவை வரைந்திருக்கின்றனர். இதற்கு இன்னுமொரு முக்கிய ஆதாரம் இரண்டு படங்களிலும் காணப்படுகின்றது. மொனா லிசா உட்கார்ந்திருக்கும் நாற்காலியின் மேற்பகுதியின் ஒரு பக்கம், சொற்ப அளவில் பிராடோ மொனா லிசா ஓவியத்தில் தெரிகிறது. ஆனால், லூவ்ரெ மொனா லிசா ஓவியத்தில் அந்த நாற்காலியின் அடையாளம் தெரியவில்லை. இதிலிருந்து, லூவ்ரெ ஓவியத்தை வரைந்தவர் மொனா லிசாவுக்கு நேர் எதிரே நின்று வரைந்திருக்கிறாரென்றும், பிராடோ ஓவியத்தை வரைந்தவர் சற்று இடப்பக்கம் நின்றபடி வரைந்திருக்கிறாரெனவும் தெரிய வருகிறது. இந்த இடத்தில்தான் சிலருக்கு முக்கியமானதொரு சந்தேகம் தோன்றுகிறது. 


லியர்னாடோ டா வின்சி இடது கைப்பழக்கமுள்ளவர் என்பதை முன்னர் சொல்லியிருந்தேனல்லவா? அப்படியென்றால், இடது பக்கம் நின்று வரைந்தவராக லியர்னாடோ டா வின்சியாகவல்லவா இருக்கவேண்டும். இடது பக்கம் வரையும் பலகை இருக்கும்போது, அதை இடக்கையால் வரைவதுதானே இலகுவாக இருக்கும். அப்படிப் பார்க்கும்போது, நாம் தற்சமயம் நிஜமென்று நினைத்துக் கொண்டிருக்கும் லூவ்ரெ மொனா லிசா ஓவியத்தை டா வின்சியின் சிஷ்யன் வரைந்திருக்க வேண்டும். பிராடோ மொனா லிசா ஓவியத்தை டா வின்சி வரைந்திருக்க வேண்டும். உண்மை ஏன் இப்படியும் இருக்கக் கூடாது? சரியாகப் பார்த்தால், அழகாகவும், ஜொலிப்பாகவும், இளமையாகவும், தெளிவாகவும் இருப்பது பிராடோ ஓவியம்தான். அப்படிப் பார்க்கையில் அதை டா வின்சி வரைந்திருக்கத்தான் சாத்தியம் அதிகம். இதுவரை நிஜத்தை நிழலென்றும், நிழலை நிஜமென்றும் நாம் நம்பி வருகின்றோமா? இப்போது இந்தப் பகுதியின் ஆரம்பத்தில் 'எனக்குள் ஒருவன்' படத்தைப் பற்றி நான் ஏன் சொன்னேனென்று உங்களுக்குப் புரிந்திருக்கும். எது எப்படியிருந்தாலும், இரண்டு ஓவியங்களிலும் டா வின்சியின் ஆளுமை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவரைக்கும் மகிழ்ச்சிதான். இதை மீளப்பரிசோதனை செய்யும் அளவுக்கு லுவ்ரெ மொனா லிசா ஓவியம் இல்லை. மேலதிகமான பரிசோதனைகளுக்கு அதை உட்படுத்தும்போது கெட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஏற்கனவே அந்த ஓவியம் மிகவும் பழுதடைந்த நிலையிலேயேதான் காணப்படுகிறது. அதனால் அதுவே டா வின்சி வரைந்த நிஜ ஓவியமென்று நம்பிவிடுவதில் நம் யாருக்கும் பிரசனை இல்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்த இரண்டு மொனா லிசா ஓவியங்களையும் டா வின்சி ஒரு முக்கிய தேவையைக் கருதியே இரண்டுவிதமான பார்வைக் கோணங்களில் வரைந்தெடுத்திருக்கிறாரென்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது தலையே சுற்றுவது போல இருக்கும். மிகச்சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்தை, டா வின்சி அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறாரென்று, தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்படி டா வின்சி முயற்சி செய்து பார்த்தது என்ன தெரியுமா? மனித வரலாற்றிலேயே முதன்முதலாக முப்பரிமாணத் தோற்றத்தைத் (3 Dimension) தரக்கூடிய ஓவியத்தை டா வின்சி வரைந்திருக்கிறார் என்பதுதான் அது.


- தொடரும்