வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

May 30, 2016

ஏலியனைத் தேடி ஒரு அதிசயப் பயணம் (Breakthrough Starshot)

ஏலியன்களைப் பற்றி நான் அதிகமாக எழுதுகிறேன் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இல்லாத ஒன்றைப்பற்றியதான மூடநம்பிக்கையைப் பலரின் மனதில் வளர்த்து வருகிறேன் என்றும் சிலர் சொல்வதுண்டு. ஒருசிலர் ஒருபடி மேலே போய், ஏலியன்களைப் பற்றி எழுதுவதைக் கேலியாகப் பேசுவதுமுண்டு. ஏலியன்கள் என்னும் கான்செப்ட் நாம் பேய்களைப் பற்றியும், பகுத்தறிவாததுக்கு ஒவ்வாத சிலவற்றைப் பேசுவது போல அல்ல. ஏலியன்கள் என்பவை முழுமையான அறிவியல் சம்மந்தப்பட்டவை. பல ஆண்டுகளாக மாபெரும் விஞ்ஞானிகள் அண்டத்தின் ஒவ்வொரு அங்குலமாக, ‘அவர்கள் இருக்கிறார்களா?’ என்று தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்காக பில்லியன் பில்லியனாக டாலர்கள் ஆராய்சிகளுக்கென்று கொட்டப்படுக்கொண்டே இருக்கின்றன. ‘இல்லாத ஒன்றை வகைதொகையற்ற பணத்தைச் செலவுசெய்து அறிஞர்கள் தேடுவார்களா?’ அவர்களுக்கு அதற்கான நம்பிக்கை இருக்கும்போது, அதன் சிறிய பகுதியைத்தான் நான் உங்களுக்கு கொடுத்துவருகிறேன். இனிச் சமீபத்தில் நடந்த மிகப்பெரிய ஏலியன் சம்மந்தமான சம்பவத்தைப் பார்க்கலாம். உலகில் எப்படியெல்லாம் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அவைபற்றி எந்தத் தகவலும் தெரியாமல், தேவையற்றவற்றைப் பேசிக்கொண்டு நம் காலலங்களைக் கழித்துக்கொண்டிருக்கிறோம். நான் சொல்லப்போகும் இந்தத் தகவலுடன், உங்களுக்கு மிகவும் தெரிந்த, உங்களோடு எப்போதும் சம்மந்தப்பட்ட ஒருவரும் இணைந்திருக்கிறார். அவர் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள்.


ஸ்டீபன் ஹாக்கிங் ஏலியன்கள்பற்றிப் பல சமயங்களில் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்னர், 'ஏலியன்களைத் தேடும் முஅற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம். அது பூமிக்கு பெரும் ஆபத்தாகிவிடும்' என்று எச்சரிக்கை விடுத்தார். 'நாம் ஏலியன்களைத் தேடி, நாம் வளமானதொரு பூமியில் வாழ்கிறோமென்று மனிதர்களைவிடப் புத்திசாலிகளான ஏலியன்களுக்குத் தெரியப்படுத்தினால், அவர்கள், நம் பூமியை ஆக்கிரமித்துவிடுவார்கள்' என்றார். 'நம் பூமியை வந்து ஆக்கிரமித்துக் கொள்ளுங்கள்' என்று ஏலியன்களுக்கு நாமே அழைப்பிதழ் கொடுப்பது முட்டாள்தனம் என்றார். ஆனால், அதே ஸ்டீபன் ஹாக்கிங் ஏலியன்களைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டிருக்கிறார். அதுவும் எப்படி? படியுங்கள்.


ரஷ்யாவின் பில்லியனரான 'ஜூரி மில்னெர்' (Juri Milner) என்பவரும், ஸ்டீபன் ஹாக்கிங்கும் இணைந்து ஏலியன்களைக் கண்டுபிடிக்கும் திட்டமொன்றை உருவாக்கியிருக்கிறார். 100 மில்லியன் டாலர்கள் ஆரம்ப முதலீட்டில் இந்தத் திட்டம் உருவாக்கப்படுகிறது. ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவுடன் கோடீஸ்வரரான மில்னெரின் கோடிகளும் சேர்ந்து திட்டம் உருவாக்கப்படுகிறது. ஏலியன்களைத் தேடும் இந்தத் திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி (12.04.2016) உலகிற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.




ஒரு ஸ்டாம்பின் அளவுகொண்ட மிகச்சிறிய விண்கலங்கள் பலவற்றை உருவாக்கி, அவை அனைத்தையும் 'அல்பா செண்டாரி' (Alpha centauri) நட்சத்திரங்களை நோக்கி அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான தொகையில் அனுப்பப்பட இருக்கும் மிகச்சிறிய விண்கலங்கள் ஒளியின் வேகத்தின் 20% அளவில் வேகத்துடன் பயணம் செய்யக் கூடியதாக உருவாக்கப்படுகின்றன. அவற்றை ‘நானோ விண்கலங்கள்’ என்கிறார்கள். அந்த விண்கலங்கள், அல்பா செண்டாரி நட்சத்திரத்தின் சுற்று வட்டாரத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட இருபது வருடங்கள் எடுக்கும். அல்பா செண்டாரி என்பது மூன்று நட்சத்திரங்களைக் கொண்டது. அல்பா செண்டாரி A, அல்பா செண்டாரி B, அல்பா செண்டாரி C என்று அவைகளுக்குப் பெயரிடப்பட்டிருக்கின்றது. அவை பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கின்றன. அல்பா செண்டாரி நட்சத்திரங்களுக்கு அண்மையில் உள்ள கோள்களில் ஏலியன்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இந்த 4.2 ஒளியாண்டு தூரத்தை, ஒளியின் 20 சதவீதமளவிலான வேகத்தில் அடைவதற்குக் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் தேவைப்படும். 9.46 பில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் அல்பா செண்டாரி நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்தப் பயணத்திற்கு ஆரம்பத்தில் 100 மில்லியன் டாலர்கள் முதலிட்டாலும், திட்டம் முழுமையடைய மொத்தமாக ஐந்து பில்லியன் டாலர்கள் வரை செலவாகலாம் என்று கணித்துள்ளார்கள். இந்தச் சமயத்தில்தான் உங்கள் நண்பர் இதற்குள் தன் பங்களிப்பும் இருக்க வேண்டுமென்று விரும்பி, திட்டத்தினுள் நுழைகிறார். அந்த நண்பர் வேறு யாருமல்ல, பேஸ்புக் நிறுவணரான மார்க் ஸுக்கர்பேர்க்.


மில்னெரும், ஸ்டீபன் ஹாக்கிங்கும் இணைந்து அமைத்த திட்டத்திற்கு முதலீடு செய்வதற்கு பேஸ்புக் நிறுவனரான மார்க் ஸுக்கர்பேர்க்கும் கைகோர்த்துள்ளார். மார்க் ஸுக்கர்பேர்க்கும் இவர்களுடன் இணைந்ததால், இந்தத் திட்டம் மிகவும் பிரமாண்டமான வடிவத்தையெடுக்குமென விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இப்படி, ஏலியனைத் தேடி பில்லியன்களில் பணத்தை இறைத்து திட்டமிடுகிறவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. உலக மகா விஞ்ஞானிகளும், கோடீஸ்வரர்களும். அவர்களே ஏலியன்கள் இருக்கின்றன என்று சொல்லும்போது, நாம் இல்லையென்று சொல்வது நியாயமா?


பூமியில் இருக்கும் நமக்கு மிக அருகில் காணப்படுபவை 'அல்பா செண்டாரி' நட்சத்திரங்கள். இவை மொத்தமாக மூன்று நட்சத்திரங்களாகும். அதில், 'அல்பா செண்டாரி A' நட்சத்திரமும், 'அல்பா செண்டாரி B' நட்சத்திரமும் இரட்டை நட்சத்திரங்களாகும். இரட்டை நட்சத்திரங்களை ‘பைனரி ஸ்டார்ஸ்’ (Binary Stars) என்பார்கள். இவையிரண்டும் இரட்டைப் பிறவிகள் போல, ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கின்றன. இவை இப்படிச் சுற்றிவர எடுக்கும் காலம் 79.91 வருடங்கள். இந்த இரண்டு நட்சத்திரங்கள் சுற்றிக்கொள்ளும் நீள்வட்டப்பாதையின் மையப்புள்ளியிலிருந்து பூமியானது 4.36 ஒளிவருடங்கள் தூரத்தில் இருக்கின்றது. ஆனால், இந்த நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரமான, 'அல்பா செண்டாரி C' நட்சத்திரமே பூமிக்கு மிக அருகில் இருக்கிறது. அது இருப்பது 4.24 ஒளியாண்டுகள் தூரத்தில். 'அல்பா செண்டாரி C' நட்சத்திரத்தை 'புராக்‌ஷிமா செண்டாரி' (Proxima Centauri) என்னும் விசேசப் பெயருடனும் அழைப்பார்கள். இது ஒரு 'சிவப்புக் குள்ள' நட்சத்திரமாகும் (Red Dwarf). ஏனைய நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது, மிகவும் ஒளி குறைந்த நட்சத்திரம் இது. A,B நட்சத்திரங்களிலிருந்து 0.24 ஒளியாண்டுகள் தூரத்தில் 'புராக்‌ஷிமா செண்டாரி' இருக்கிறது.


அல்பா செண்டாரியின் மூன்று நட்சத்திரங்களுக்கும் அருகாமையில், நம் பூமியை ஒத்த பல வெளிக்கோள்கள் (Exoplanets) இருப்பதைக் 'கெப்ளர்' தொலைநோக்கிக் கருவி கண்டுபிடித்திருக்கிறது. அவற்றில் குறிப்பாக, 'அல்பா செண்டாரி B' நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கோளான, 'அல்பா செண்டாரி Bb' என்னும் பெயரிடப்பட்ட கோள் ஒன்றில், ஏலியன்கள் வாழலாம் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் திடமாக நம்புகின்றனர். சரியாகக் கவனியுங்கள் 'அல்பா செண்டாரி Bb' என்பது ஒரு நட்சத்திரம் அல்ல. அது ஒரு கோள். 'அல்பா செண்டாரி B' நட்சத்திரமானது சூரியனைவிடச் சற்றுச் சிறியது. கிட்டத்தட்ட சூரியனைப் போன்றது என்றும் சொல்லலாம். அதைச் சுற்றிவரும், 'அல்பா செண்டாரி Bb' என்னும் கோளும் கிட்டத்தட்டப் பூமியைப் போலவே அமைந்திருக்கின்றது. இந்தச் சாத்தியங்களை வைத்து, அந்தக் கோளில் ஏலியன்கள் வசிக்கலாம் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள். இந்தக் கோளையும், ஏனைய கோள்களையும் குறிவைத்தே, ஸ்டீபன் ஹாக்கிங், யூரி மில்னெர், மார்க் சுக்கர்பேர்க் ஆகிய மூவரின் கூட்டணி, ஏலியனைத் தேடும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது.


இன்று, அதி நவீனமாக அமைக்கப்பட்ட விண்வெளி ராக்கெட்டுகளில், வேகமாகச் செல்லக் கூடிய ராக்கெட்டில் பயணம் செய்கிறோம் என்று வைத்துக் கொண்டால், 'அல்பா செண்டாரி' நட்சத்திரங்களை அந்த ராக்கெட் அடைவதற்கு 30,000 வருடங்கள் எடுக்கும். அதாவது நானூறு தலைமுறைகள் இந்த இடைக் காலத்தில் உருவாகியிருக்கும். அதனால், நம் காலத்திலேயே அங்கு செல்ல வேண்டும் என்பதற்காகப் புதுத் திட்டமொன்றை, ஸ்டீபன் ஹாக்கிங் குழுவினர் உருவாக்கியிருக்கிறார்கள். எடையிலும், அளவிலும் மிகவும் குறைந்த, நானோ வின்கலங்களை (Nanocraft) அவர்கள் அமைக்கத் தீர்மானித்திருக்கின்றனர். அவை ஒளிக்கற்றைகளின் (Light beam) அழுத்தத்தினால் மிகைவேகத்துடன் செல்லக் கூடியவாறு உருவாக்கப்பட இருக்கின்றன. ஆயிரக் கணக்கான நானோ விண்கலங்களை அனுப்பி, அவை 20 வருடங்களில் அல்பா செண்டாரியைச் சென்றடைய வைக்கப் போகிறார்கள். அந்த விண்கலங்களில் புகைப்படக் கருவிகளும், தொலைத்தொடர்புக் கருவிகளும், அரிய விஞ்ஞான சாதனங்களும் பொருத்தப்பட்டிருக்கும். இருபதாண்டுகளில், 'அல்பா செண்டாரி' நட்சத்திரங்களை அவை சென்றடைந்ததும், அங்கிருந்து பெறும் தகவல்களைப் பூமிக்கு அனுப்பி வைக்க ஆரம்பிக்கும். அந்தத் தகவல்கள் பூமியை வந்தடைவதற்கு மேலும் நான்கு வருடங்களெடுக்கும். காரணம், நான்கு ஒளியாண்டுகள் தூரம் இடையில் இருப்பதே! மொத்தமாக இருபத்தியைந்து வருடத் திட்டமிது. இன்னும் இரண்டு வருடங்களில் ஆரம்பமாக இருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு 'Breakthrough Starshot' என்று பெயரிட்டுள்ளார்கள்.


இந்தத் திட்டம் வெற்றியளித்து, ஏலியன்கள் இருக்கின்றன என்றோ அலது இல்லையென்றோ 25 வருடங்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டால், இதை எழுதும் நானோ, ஸ்டீபன் ஹாக்கிங்கோ, மில்னெரோ உயிருடன் இருப்போமோ தெரியவில்லை. ஆனாலும், இதைப்படிக்கும் உங்களில் பலர் நிச்சயம் உயிருடன் இருப்பீர்கள். அப்போது இந்த ராஜ்சிவாவை ஒருதரம் நினைத்துக் கொள்ளுங்கள்.

-ராஜ்சிவா-


9 comments:

  1. தொடரட்டும் தாங்கள் பணி

    ReplyDelete
  2. தொடரட்டும் தாங்கள் பணி

    ReplyDelete
  3. அறிவியலை அறிந்து கொள்ள உங்களின் எழுத்து நடை அருமையாக இருக்கின்றது.வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. thotarnthu ezhuathungal anna...!

    ReplyDelete
  5. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. Stephen hawking தான் இப்போ இல்லயே..இப்போது இந்த திட்டம் இருக்கிறதா?

    ReplyDelete