வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

March 14, 2015

ஹாய் கமலி…..!

பிப்பிரவரி மாதம் முதல் வாரத்தில் நான் ”ஜன்னல்” இதழுக்காக எழுதிய சிறுகதை ”ஹாய் கமலி....!” வாசகர்கள் வாசிப்பிர்க்காக.......



நான் இன்றைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதை மகிழ்ச்சியென்று சொல்ல முடியாது. இதற்குமேல் இதைத் தொடர முடியாதென்ற கட்டாயத்தில் எடுத்துவிட்ட முடிவால் உண்டான, ஒரு இறுக்கம் குலைந்த நிலையென்று சொல்லலாம். ஆம்! திலீபனிடம் எப்படியும் இன்று நான் கேட்டுவிட வேண்டும். பதினைந்து வருடங்களாக என் மனதுக்குள் பூட்டிவைத்துக் காத்திருக்கும் உணர்ச்சிகளுக்கு, ஒரு பதிலைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு காலமும் எதையும் கேட்காமல், எதுவுமே சொல்லாமல் காலத்தைக் கழித்தது போதும். இன்று நானே அவனிடம் மனம் திறந்து பேசிவிட வேண்டும். முன்னர் திலீபன் என்னருகில் இல்லாத நேரங்களிலெல்லாம் தனிமையில்தான் நான் அதிகம் இருந்திருக்கிறேன். என்னுடனேதான் நான் பேசிக்கொண்டிருப்பேன். ஆனால், இப்பொது என் பேச்சைக் கேட்க நீங்கள் இருக்கிறீர்கள். இதுவரை உங்களுடன் என்னென்னவோவெல்லாம் பேசியிருக்கிறேன். ஆனால், என்னைப் பற்றி மட்டும் பேசியதில்லை. அதை எனக்கே எனக்கான இரகசியமாய்ப் பொத்திப் பாதுகாத்து வைத்திருந்தேன். இப்போது, உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. என்னை, என் உணர்வை மிகச் சரியாக உங்களால் புரிந்துகொள்ள முடியுமென்ற நம்பிக்கை அது. இனி, என்னைப் பற்றி உங்களிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல் சொல்லலாம். 'நான் திலீபனிடம் என்ன கேட்டுவிடப் போகிறேன், நான் ஏன் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்னும் கேள்விகளுக்குப் பதிலை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். அதற்கு முன்னர் திலீபன் யாரென்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டும்.


என் பெற்றோர்கள் சொந்த நாட்டில் வாழமுடியாத சூழ்நிலையில், ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னரே தாங்கள் ஜேர்மனி வந்ததாக என் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். வடக்கு ஜேர்மனியிலுள்ள சிறு கிராமமொன்றில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய என் பெற்றோர் முப்பது வருடங்களாக வேறெங்கும் குடிபெயராமல் அங்கேயே வசித்து வருகிறார்கள். அந்தக் கிராமத்துக்கும், அவர்களுக்குமான தொடர்பு, ஏதோவொரு வகையில் தாய்மண் பாசம்போலப் பிரிக்க முடியாததாகிவிட்டது. ஜேர்மனியில் வேறு எத்தனையோ நகரங்கள் இருந்த போதும், எந்த நகரத்துக்கும் குடிபெயராமல் அந்தக் கிராமத்திலேயே அவர்கள் வாழ்ந்து வந்ததற்குக் காரணமும் இருந்தது. பெயருக்குத்தான் அது கிராமம். நகரத்துக்குரிய அனைத்து வசதிகளையும் கொண்ட அழகிய சொர்க்கமது. பனித்துளி படிந்த புல்வெளி, எங்கும் படர்ந்திருக்கும் அழகு பூமியது. வெள்ளைக் குதிரைகளில், ஜேர்மன் தேவதைகள் அந்தப் புல்வெளிகளூடாகப் பாய்ந்து செல்வதைப் பார்ப்பதே அதிஷ்டம்தான். ஐரோப்பாவிலேயே குதிரைக்குப் பெயர்போன இடம் எங்கள் கிராமம்தான். ஒலிம்பிக் போட்டிகளுக்குக் குதிரைகள் தயாராவது இங்குதான். வருடா வருடம் உலகலாவிய குதிரைக்கான போட்டிகள் நடைபெறுவதும் இங்குதான். இங்கிருக்கும் ஒவ்வொரு குதிரையின் விலையும் யானை விலை பெறும். சாதாரண யானையல்ல, தேவேந்திரனின் ஐராவதம் என்ன விலையோ அந்த விலை. இலட்சம் யூரோக்களுக்குக் குதிரை என்பது மிகச் சாதாரணம். மில்லியன் டாலர்களுக்கு குதிரைகள் இங்கே விலை போயிருக்கின்றன. குதிரைகள் வளர்க்கும் பண்ணைகள் வரிசையாக உள்ள கிராமம். ஆகமொத்ததில் பணக்கார ஜேர்மனியர்கள் வாழும் அழகிய கிராமம். பார்த்தீர்களா? நான் என் கதை சொல்ல வந்து குதிரையின் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.


எங்கள் கிராமத்தில் எங்கள் தாய்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் வேறு பல குடும்பங்களும் இருக்கின்றன. எங்கள் வீட்டிற்கு இரண்டு வீடுகள் தள்ளியுள்ள வீட்டில்தான் திலீபன் வாழ்ந்து வருகிறான். திலீபனின் பெற்றோரும், என் பெற்றோரும் ஒன்றாகவே ஜேர்மனிக்கு வந்ததால், இன்றுவரை ஒன்றாக, ஒரு கிராமத்தில் நட்புடன் பிரியாமல் வாழ்ந்து வருவதாகச் சொல்வார்கள். திலீபனும், நானும் இங்குதான் பிறந்தோம். என்னைவிடச் சிலமாதங்கள் முந்திப் பிறந்தவன் அவன். எனக்கு இப்போ இருபத்தியாறு வயதாகிறது. சிறுவயதிலிருந்து திலீபனுடனேயே சேர்ந்து விளையாடுவேன். எப்போதும், எங்கேயும் திலீபன்தான். என்னை விட்டுவிட்டுத் திலீபன் எங்கும் சென்றதில்லை. இருவர் படித்த பாடசாலையும் ஒன்றாகவே இருந்ததால், தூக்கம் தவிர்ந்து நாம் பிரிந்திருக்கும் சமயம் இல்லையென்றே சொல்லலாம். என்னைச் செல்லமாகக் 'கமலி' என்றுதான் திலீபன் அழைப்பான். என்பெயரை அவன் 'கமலி' என்று உச்சரிக்கும் போதெல்லாம், உள்ளங்க்காலிருந்து தலைவரை மின்சாரம் பாய்வதுபோல உணர்வேன். இவையெல்லாம் என் பதினான்கு வயது வரைமட்டும்தான். அதற்குப் பின்னர் எல்லாமே மாறத்தொடங்கியது.


என் உடலில் பருவமாற்றங்கள் படிப்படியாகத் தங்கள் கட்டமைப்புத் தொழிலை ஆரம்பிக்கத் தொடங்கின. என்னில் ஏற்பட்ட மாற்றங்கள் திலீபனிடமிருந்து மெதுமெதுவாய் என்னைப் பிரிக்கத் தொடங்கியது. ஆனால் திலீபனிடமிருந்து பிரிவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. நான் திலீபனுடன் பழக விரும்புவது என் பெற்றோர்களுக்கும் பெரும் மனவேதனையைக் கொடுத்தது. என் பெற்றோர்கள் தங்களுக்குள் என்னைப் பற்றிப் பேசிக் கவலைப்படுவதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அப்பாவுடன் அழுதபடி பேசிக்கொண்டிருக்கும் அம்மா, நான் வருவதைக் கண்டதும் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சிரித்தபடி என்னை வரவேற்கும்போது, அந்த முகம் எனக்குப் பல கதைகளைச் சொல்லும். படிப்படியாக நிஜங்களைப் புரிய ஆரம்பித்தேன். திலீபனின் பெற்றொர்களும் நான் அவனுடன் பழகுவதை விரும்பவில்லை என்பதை மெல்லத் தெரிந்து கொண்டேன். திலீபன் கூட என்னை விட்டு ஒதுங்குவது போலவே தெரிந்தது. இருவரும் ஒரே பாடசாலையில் அப்போதும் படித்து வந்ததால், அவனால் என்னுடன் பேசாமல் இருக்க முடிந்ததில்லை. ஆனால் அவன் பேச்சில் முன்னர் இருந்த அந்தப் பழைய திலிபனைத் தொலைத்துவிட்டிருந்தான். வாலிபனாய் மாறிவிட்டிருந்த அந்த அழகிய திலீபனை என்னால் முன்னைவிட அதிகமாய் விரும்பாமல் இருக்க முடியவில்லை. வாழ்ந்தால் திலீபனுடன் மட்டும்தான் என்று முடிவெடுக்கும்படி அவனை மனதுக்குள் ஆராதிக்கவே தொடங்கினேன். என் ஒவ்வொரு செல்லிலும் திலீபனின் நினைவுகள் நிறையத் தொடங்கின. காதல் என்னும் உணர்வைத் திலீபன் என்னும் ஆண்மகன் மூலமாக முழுமையாக உணரத் தொடங்கினேன். ஆனால், என் காதலை நான் அவனிடம் சொல்லிவிடவில்லை. என் மனப்பெட்டியினுள் பத்திரமாய் அதைப் பூட்டியே வைத்திருந்தேன். திலீபன் தன் நண்பர்களுடன் அதிக நேரங்களைச் செலவிட ஆரம்பித்தான். மெல்ல மெல்ல என்னைத் தவிர்க்கவும் தொடங்கினான். அந்த நிகழ்ச்சி நடக்கும் வரை இது தொடர்ந்தது.


பாடசாலையின் மூலம் எங்கள் வகுப்பு மாணவர்கள், நீச்சல் குளத்துக்கு அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். நீச்சல்குளம் இருக்கும் கட்டடம் பாடசாலைக்கு மிக அருகிலேயே இருந்தது. பலவிதமான நீச்சல் போட்டிகள் நடைபெறும் நீச்சல் குளங்களையுடைய கட்டடமது. அருகருகே பத்துக்கும் மேற்பட்ட நீச்சல் குளங்கள் அந்தக் கட்டடத்தினுள் இருக்கின்றன. ஒவ்வொரு நீச்சல் குளமும் ஒவ்வொரு வகை. சிறுவருக்கானது, 'டைவ்' செய்வதற்கேற்ப ஆழமானது, ஆழமற்றது, சூடானது, குளிரானது எனப் பலவித நீச்சல் குளங்கள் அங்கிருக்கின்றன. வழமையாகப் பாடசாலையிலிருந்து வந்து போகும் நீச்சல் குளமென்பதால், யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. மாணவர்கள் ஒவ்வொருவரும் தமக்கு விரும்பிய இடங்களில் குளிக்க ஆரம்பித்தார்கள். போட்டிக்கு நீந்துபவர்கள் ஒருபுறமும், 'டைவ்' செய்ய விரும்புபவர்கள் ஒருபுறமுமென பிரிந்து சென்றார்கள். திலீபன் தனியாக ஒரு நீச்சல் குளத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். நானும் அவனைப் பின் தொடர்ந்தேன். அவன் அந்த நீச்சல் குளத்தின் மறுகரையை அடைந்து, பாய்வதற்கான பலகையில் ஏறி நின்று கொண்டான். அவன் பாயும் அழகை ரசிப்பதற்காக அங்கிருக்கும் இருக்கையில் நான் அமர்ந்து கொண்டேன். நான் இருப்பதை திலீபன் காணவில்லை. ஒவ்வொரு நீச்சல் குளத்திற்கும் பாதுகாப்புக்குப் பொறுப்பாளராக ஒருவர் எப்போதும் நின்றுகொண்டிருப்பார். நாங்கள் நின்ற நீச்சல் குளத்தில் நின்றுகொண்டிருந்த பாதுகாவலரிடம் சென்ற மாணவியொருத்தி தனக்கு இடுப்புக்குக் கட்டும் பட்டி தேவையெனக் கேட்க, அதை எடுத்துவர அவர் தன் அறையை நோக்கிச் சென்றார். அந்தச் சமயத்தில் திலீபனும் நீச்சல் குளத்தில், தலை கீழ்நோக்கிய நிலையில் 'டைவ்' அடித்தான். மிகவும் அழகானதொரு பாய்ச்சல். தண்ணீர் பக்கங்களில் சிதறித் தெறிக்காமல், கூரான அம்புபோலப் பாய்ந்த பாய்ச்சல். சில நொடிகள் சென்றன, கீழே சென்ற திலீபன் மேலே வரவில்லை. என்னுடைய உள்ளுணர்வு எனக்கு எதையோ சொல்லியது. அடுத்த கணமே நான் நீச்சல் குளத்தினுள் பாய்ந்தேன். நீச்சல் குளத்தின் அடியில் திலீபன் ஏதோவொரு விபரீதமான நிலையில் அசைந்தபடி கிடந்தான். ஆபத்து என்னவென்று உடனே புரிந்தது. அவன் தலை முடியைப் பிடித்தபடி மேல்நோக்கி இழுத்து வந்தேன். என் பதட்டம் கண்டு தொடர்ச்சியாகப் பலர் குளத்தில் பாய்ந்தனர். திலீபனை மெல்லத் தரையில் கிடத்தினர். ஏதோவொரு காரணத்திற்காக, அந்த நீச்சல் குளத்தின் ஆழம் குறைக்கப்பட்டு அடித்தரை உயர்த்தப்பட்டிருந்திருக்கிறது. இதைச் சரியாகக் கணித்துவிடாமல் திலீபன் பாய்ந்திருக்கிறான். தலை நேராக ஆழம் குறைந்த தரையில் மோதி அரை மயக்கத்துக்குள்ளாகிவிட்டான். உடன் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டு எந்தப் பிரச்சனையுமில்லாமல் திலீபன் வீடு திரும்பினான். ஆனால் அவனது உயிரைக் காப்பாற்றியது நான்தான் என்ற பேச்சு மட்டும் எங்கும் பரவியது.


திலீபனின் அப்பாவும், அம்மாவும் என் கைகளைப் பற்றிக் கண்ணீர் வடித்தார்கள். கையெடுத்துக் கும்பிட்டார்கள். 'எங்கள் குலதெய்வத்தைக் காப்பாற்றிய பெருந்தெய்வம் நீ' என்றார்கள். அன்றிலிருந்து எல்லாம் மாறிப் போனது. நான் திலீபனைச் சந்திப்பதில் யாருக்கும் எந்த மனத்தடையும் அதற்குப் பின்னர் இருக்கவில்லை. தன்னுடைய உயிரைக் காப்பாற்றினேன் என்ற நன்றியோ, என்னவோ? திலீபனும் என்னுடன் பழைய திலீபன் போல நட்புடன் பேச ஆரம்பித்தான். சொல்லப் போனால் இன்னும் அதிக நட்புடன் பழக ஆரம்பித்தான். பதினேழு வயதில் கல்லூரிப் படிப்பிற்காக இருவரும் வேறுவேறு திசை நோக்கிப் பயணமானோம். அதன் பின்னரும் விடுமுறை நாட்களில் நாம் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். என் காதல் அதிகரித்துக்கொண்ட்டே சென்றது. ஆனால், என் காதலைச் சொல்வதற்கு எனக்குத் தைரியம் மட்டும் வந்ததில்லை. திலீபன் என்னைக் காதலிக்கின்றானா என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் என்னைக் காதலிப்பான் என்னும் நம்பிக்கை எனக்குள் இருந்தது. காலம் மெல்ல மெலக் கரையத் தொடங்கியது. நாம் மேற்படிப்பை முடித்துப் பட்டங்களுடன் வீடுகளுக்கு மீண்டும் வந்தாகிவிட்டது. திலீபனை வரன் கேட்டுப் பல இடங்களிலிருந்து ஆட்கள் வர ஆரம்பித்தனர். அவன் பெற்றோர்களும் அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதில் தீவிரம் காட்டினர். ஆனால் எதுவும் அமையவில்லை. திலீபனே அனைத்தையும் நிராகரிப்பதாகக் கேள்விப்பட்ட போதுதான் என் மனதில் அந்த நம்பிக்கைப் பூ, பூக்க ஆரம்பித்தது. "நான் அவனை விரும்புவது போல, அவனும் என்னை விரும்புகிறானோ? அதனால்தான் இத்தனை காலமாக அனைத்தையும் நிராகரிக்கிறானா?" கேள்விகளால் நிறைந்தேன் நான். மகிழ்ச்சியில் நனைந்தேன். இனி நானே என் காதலை அவனிடம் சொல்லிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை. யார் தப்பாக நினைத்தாலும் கவலையில்லை. என் காதல் சொல்லும் நேரம் இதுதானெனத் தீர்மானித்தேன்.


இதோ! இன்று திலீபனிடம் என் காதலைச் சொல்லச் சென்று கொண்டிருக்கிறேன். உறுதியாகச் சொல்லிவிடுவது என்ற தீர்மானத்திலேயே சென்று கொண்டிருக்கிறேன். இன்று சொல்லிவிடுவதென்று நான் எடுத்த முடிவினால், என் மனம் பாரம் குறைந்தது போல ஆகியிருக்கிறது. தெளிவடைந்துமிருக்கிறது. இப்படியே சென்று அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்தபடி என் காதலைச் சொல்ல வேண்டும். ஆனால், அவன் முகத்தைப் பார்ததும் அதற்கான தைரியம் எனக்கு வருமா? சிறுவயதிலிருந்து அவனுடனே சேர்ந்து, அவன் நினைவாகவே இருந்து, அவனுக்காகவே வாழ்ந்துவரும் என்னால், அவன் முகம் வாடிவிடுவதைப் பார்க்க முடியுமா? அப்படி அவன் முகம் வாடிவிட்டால், அப்புறம் நான் உயிருடன் இருக்கத்தான் முடியுமா?


குருட்டுத் தைரியத்தில் அவனைப் பார்த்துக் காதலிப்பதாகச் சொல்லச் செல்வதாக உங்களிடம் நான் கூறிவிட்டேன். ஆனால், நான் உங்களிடம் இதுவரை கூறாத ஒன்றும் இருக்கிறது. அவன் முகத்தைப் பார்த்ததும் காதலைச் சொல்லும் என் முடிவு மாறிவிடலாம். என் காதலைச் சொல்லாமலே நான் திரும்பலாம். நான் சாகும்வரை, சொல்லப்படாத காதலாகவும் என் காதல் மாறிப் போகலாம். 'கமலக்கண்ணன்' என்னும் பெயருடன் ஆணாகப் பிறந்தவன் நான். மெல்ல மெல்லப் பெண்மையை உணர்ந்து, பதினான்கு வயதில் முழுமையான பெண்ணாகவே என்னைப் புரிந்து கொண்டு, பின்னாட்களில் பெண்ணாகவே மாறிவிட்டவள். நான் பெண்ணாக மாறிவிட்டாலும், ஆணென்னும் என் பழைய அடையாளத்தை என்னுடன் பழகியவர்களால் மனதிலிருந்து அழிக்க முடியவில்லை. நான் ஆணாகப் பிறந்திருந்தாலும், என்றும் ஆணாக வாழ்ந்ததில்லை. மனதாலும், நினைவாலும் பெண்ணாகவே வாழ்ந்து வருகிறேன். பெண்களுக்குரிய எல்லா விருப்பங்களும், தேவைகளும் எனக்குமிருக்கிறது. கமலக்கண்ணனை, 'கமலி' என்று காரணமில்லாமல் திலீபன் அழைக்கத் தொடங்கியபோதே, என் பெண்மையைப் புரிய ஆரம்பித்துவிட்டேன். திலீபனை என் பெண் மனம் அப்போதே விரும்பத் தொடங்கி விட்டது. இன்று என் காதலை நான் சொல்லிவிடலாம். அதனால் என் திலீபன் காயப்படக் கூடாது. நான் என் காதலைச் சொல்வதோ, சொல்லாமல் விடுவதோ எதுவும் நடக்கலாம். 'அட! இதோ திலீபன் வந்துவிட்டான்.


'"ஹாய் கமலி…..!"



1 comment:

  1. அருமை! ஒவ்வொரு வரிகளிலும் கமலியாய் உணர்ந்து காதலில் திளைக்கும் வேளை.... கமலி ஆண் உடல் போர்த்திய பெண் என்றவுடன் சற்றே மனம் கலங்குகிறது . ஆனாலும் கதை படித்து முடித்த பின்னும் அந்தப் பெண்மையின் காதல் மயிலிறகாய் மனதை வருடிச் செல்கிறது .....

    ReplyDelete