வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

July 15, 2015

பென்டா குவார்க்





அணு ஒன்றைப் பிரித்து, அதற்குமேலும் பிரிக்க முடியாமல், மிகச்சிறிய உபஅணுத்துகளாக எஞ்சி இருப்பவை குவார்க்குகள் (quarks) என்று சொல்லப்படுகின்றன. இதுவரை ஆறுவிதமான குணநலன்களைக்கொண்ட குவார்க்குகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவை, 1. அப்குவார்க் (upquark), 2. டவுன்குவார்க் (downquark), 3. ஷார்ம்குவார்க் (charmquark), 4. ஸ்ட்ரேஞ்ச்குவார்க் (strangequark), 5. டாப்குவார்க் (topquark), 6. பொட்டம்குவார்க் (bottomquark) என்பனவாகும். இந்த ஆறு குவார்க்குகளுக்கும் எதிர்க்குணங்களையுடைய ஆன்டிகுவார்க்குகளும் (antiquarks) உண்டு. அதாவது ஆன்டிஅப்குவார்க், ஆன்டிடவுன்குவார்க், ஆன்டிஷார்ம்குவார்க், ஆன்டிஸ்ட்ரேஞ்ச்குவார்க், ஆன்டிடாப்குவார்ல், ஆன்டிபாட்டம்குவார்க் என்பவை இவற்றில் அடங்கும்.


இந்தக் குவார்க்குகள் ஒன்று சேர்ந்துதான் பல அடிப்படை அணுத்துகள்களை உருவாக்கியிருக்கின்றன. இரண்டு அப்குவார்குகளும், ஒரு டவுன்குவார்கும் சேர்ந்து புரோட்டானை (proton) உருவாக்குகின்றன. அதுபோல, இரண்டு டவுன்குவார்க்குகளும், ஒரு அப்குவார்க்கும் சேர்ந்து ஒரு நியூட்ரானை (neutron) உருவாக்குகின்றன. இப்படி மூன்று குவார்க்குகள் ஒன்று சேர்வதை பேரியான்கள் (baryons) என்று ஒரு வகையாகப் பிரித்துவைத்திருக்கின்றனர். 


மேலே நான் குறிபிட்டிருந்த குவார்க்குகளில், ஒரு குவார்க்கும், ஒரு ஆன்டிகுவார்க்கும் ஒன்றாகச் சேர்ந்தால், அதை மேசோன்கள் (mesons) என்று வேறொரு வகையாகப் பிரித்து வைத்திருக்கின்றனர். அதாவது ஒரு மேசோனில் இரண்டு குவார்க்குகள் மட்டும் இருக்கும். 





இரண்டு குவார்குகள் ஒன்று சேர்ந்து உருவாகியவை மேசோன்கள் எனவும், மூன்று குவார்க்குகள் ஒன்று சேர்ந்து உருவாகியவை பேரியான்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதுவரை இரண்டு குவார்க்குகளும், மூன்று குவார்க்குகளும் சேர்ந்து உருவாக்கிய துகள்களை மட்டுமே அறிவியல் உலகம் கண்டுபிடித்து வைத்திருந்தது. ஆனாலும், நான்கு குவார்க்குகள் ஒன்று சேர்ந்தும், ஐந்து குவார்க்குகள் ஒன்று சேர்ந்தும் உபஅணுத்துகள்களை உருவாக்குமெனக் கோட்பாட்டு ரீதியாக அனுமானிக்கப்பட்டிருந்தது.


2014ம் ஆண்டு சுவிஸ் நாட்டில் சேர்னில் (CERN) அமைக்கப்பட்டிருக்கும் ‘ஹட்ரான் மோதியில்’ (Large Hadron Collider) செய்யப்பட்ட ஆராய்ச்சியின்போது, நான்கு குவார்க்குகளால் உருவாக்கப்பட்ட ‘டெட்ரா குவார்க்’ (tetraquark) என்னும் புதிய துகள் உத்தியோகபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 








இதன் தொடர்ச்சியாகச் சமீபத்தில் சேர்ன் ஹாட்ரான் மோதி அதிக வலு ஊட்டப்பட்டு, இரட்டைச் சக்தி அதிகரிக்கப்பட்டு இயக்கப்பட்டதில், நேற்றைய தினம் (14.07.2015) ‘பெண்டா குவார்க்’ (pentaquark) என்னும் ஐந்து குவார்க்குகளைக் கொண்ட புதிய துகளைக் கண்டுபிடித்துச் சாதனை செய்திருக்கின்றனர். மூன்று குவார்க்குகளைக் கொண்ட பேரியான் ஒன்றும், இரண்டு குவார்க்குகள் கொண்ட மேசோன் ஒன்றும் ஒன்றாக இணைந்து இந்தப் பெண்டா குவார்க்கை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். 


-ராஜ்சிவா-