வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

March 27, 2015

வெரோனிக்காவின் முக்காடு - (பகுதி 6)




'லியார்னாடோ டா வின்சி' பல ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவரின் ஒவ்வொரு ஓவியமும் இன்றைய நிலையில் விலைமதிக்க முடியாத பொக்கிசங்களாகவே கருதப்படுகின்றன. குத்துமதிப்பாய் அவற்றுக்கு ஒரு விலையை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார்களேயொழிய, இன்றிருக்கும் சந்தையில் அவை விற்பனைக்கென்று வந்தால், நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை வீசியெறிந்து வாங்கிக்கொள்ளப் பல கோடீஸ்வரர்கள் வரிசையாகக் காத்திருக்கிறார்கள். டா வின்சியால் வரையப்பட்ட ஓவியங்களில், முழுமையாக வரையப்பட்ட ஓவியங்களிருந்தாலும் முடிக்கப்படாத, முழுமையடையாத ஓவியங்களும் அதிகம் இருக்கின்றன. அந்த முடிக்கப்படாத ஓவியங்களுக்கும் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்து வாங்கத் துடிக்கிறார்கள். 'டா வின்சி' என்னும் மனிதனின் பெயருக்கு அவ்வளவு மதிப்பைக் கொடுக்கிறார்கள். அவரின் மதிப்பை நாம் இன்னும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இப்போது நான் சொல்லப் போவதைத் தெரிந்து கொண்டாலே போதும். 'லியார்னாடோ டா வின்சி', தன் வாழ்வில் நடந்தவை, கண்களால் பார்த்தவை, ஆராய்ந்தவை போன்றவற்றை ஒரு குறிப்புப் புத்தகத்தில் (Notebook) விரிவாக எழுதியும், படங்களாக வரைந்தும் வைத்திருக்கிறார். அவர் நினைக்கும், பார்க்கும் அனைத்தையும் கோட்டோவியமாக, அந்தக் குறிப்புப் புத்தகத்தில் வரைந்திருக்கிறார். அந்தக் குறிப்புப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் சிறிய பெரிய கோட்டோவியங்களாகப் பல படங்களை 'டா வின்சி' வரைந்திருக்கிறார். அப்படி அவர் வரைந்து வைத்திருந்த குறிப்புப் புத்தகமொன்றில் ஆறாயிரம் பக்கங்கள் இருக்கின்றன. லண்டனில் அது பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தக் குறிப்புப் புத்தகத்தின் இன்றைய விலை என்ன தெரியுமா?


'லியர்னாடோ டா வின்சி' எழுதிய குறிப்புப் புத்தகத்திலிருக்கும் ஒவ்வொரு பக்கமும் (சரியாகப் படியுங்கள் ஒவ்வொரு பக்கமும்) ஒரு மில்லியன் டாலர்களுக்கு அதிகமான விலையுடையது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி பார்க்கும்போது, ஆறாயிரம் பக்கங்களைக் கொண்ட அந்தக் குறிப்புப் புத்தகம் என்ன விலை வரலாம் என்பதை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள். மொத்தமாகப் பதின்மூன்றாயிரம் (13000) பக்கங்கள் கொண்ட குறிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. பல கிடைக்காமல் அழிந்துவிட்டன. ஐநூறு வருடங்களுக்கு முன்னர் 'டா வின்சி' எழுதிவிட்டுச் சென்ற குறிப்புகள், இன்றைய அறிவியலைக்கூட ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கின்றன. உடலியல், கட்டுமானவியல், கண்டுபிடிப்புகள், இயற்கை ஆகியவற்றைப் பற்றி விரிவாக அவர் ஆராய்ந்து குறித்திருப்பது ஆச்சரியங்களின் உச்சம். அந்தக் குறிப்புகளை அவர் எழுதி வைத்திருக்கும் விதம்தான் நம்மை இன்னும் ஆச்சரியத்துக்குள்ளாக்குகின்றது. அந்தக் குறிப்புகளை தன்னைத்தவிர வேறு யாரும் படித்துவிடக்கூடாது என்பதற்காக அவற்றை நிலைக்கண்ணாடியில் தோன்றும் மாற்று விம்பமாக எழுதியிருக்கிறார். சாதாரணமாக இடமிருந்து வலமாகத்தான் நாம் எழுதுகிறோம். ஆனால், 'டா வின்சி' தன் குறிப்புகளை வலமிருந்து இடமாக எழுதி வைத்திருக்கிறார். இதனாலேயே, பல ஆண்டுகளாக அவர் என்ன எழுதி வைத்திருக்கிறாரென்று கண்டுபிடிக்கப்படாமலேயிருந்தது. இதனால் மிகவும் மர்மமான ஒரு மனிதனாகப் பார்க்கப்படுகிறார் டா வின்சி. இவர் தன் படைப்புகள் ஒவ்வொன்றிலும் இதுபோன்ற உருமறைப்புகளைச் செய்துதான் படைத்திருக்கிறாரென்று பலர் நம்புகிறார்கள். அவரால் வரையப்பட்ட ஓவியங்களை, நமக்கு ஏதோ செய்திகளைச் சொல்லும் குறியீடுகளாகவே இப்போது பார்க்கின்றனர். அவரின் ஓவியங்கள் ஒவ்வொன்றிலும் அடையாளங்களையும், குறியீடுகளையும் ஒளித்து வைத்தே வரைந்திருக்கிறார் என்று சந்தேகப்படுகிறார்கள். இப்படிச் சந்தேகப்படும் ஓவியமொன்றுதான், சென்ற பகுதியில் நான் குறிப்பிட்டிருந்த 'கடைசி இராப்போசனம்' (The Last Supper) என்னும் ஓவியம். 









கடைசி இராப்போசன ஓவியத்தில் மிக அதிகமான குறியீடுகளை 'டா வின்சி' ஒளித்துவைத்து வரைந்திருக்கிறாரென்று சொல்லப்படுகின்றது. இதில் எந்த அளவுக்கு உண்மைகள் இருக்கின்றன என்று தெரியவில்லை. டா வின்சியின் ஓவியங்களில் பல, பைபிளில் சொல்லப்படும் காட்சிகளைக் குறிப்பவையாகவே இருக்கின்றன. கடைசி இராப்போசன ஓவியமும், இயேசுநாதரின் இறுதி நாளில் அவர் தன் பன்னிரண்டு சீடர்களுக்கும் விருந்து வைத்த காட்சியையே சொல்கிறது. மிகவும் தத்ரூபமாக, மிகவும் அழகாக அந்த ஓவியம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பார்க்கும்போது, கத்தோலிக்க மதத்திற்குக் கீழ்ப்படிந்த, கடவுள் நம்பிக்கையாளராகவே டா வின்சி காணப்படுவார். ஆனால், அவரின் தனிப்பட்ட வாழ்வில் செய்த செயல்கள் அனைத்தும் மதநம்பிக்கைகளுக்கு எதிரான செயல்களாகவே இருந்ததாக வரலாறு சொல்கிறது. கத்தோலிக்க மதபீடத்துக்குத் தன் குறிப்புகள் கிடைத்துவிடக் கூடாதென்பதற்காகத்தான் அவர் தலைகீழ் விம்பத்தில் எழுதினார் என்று சொல்கிறார்கள். இறந்தவர்களின் உடல்களை தன் ஆராய்ச்சிச்சாலைக்கு எடுத்துச் சென்று ஒவ்வொரு பாகங்களாக வெட்டியெடுத்து, உள்ளுடல் உறுப்புகளின் ஒவ்வொரு பாகங்களையும் அச்சுஅசலாக 'டா வின்சி' வரைந்திருக்கிறார். இறந்தவர்களென்றால், எப்போதோ இறந்தவர்களையல்ல, எந்தக் கணத்தில் ஒருவர் இறந்தாரோ, அதற்கு மறுகணத்தில் அந்த உடலைப் பெற்றுக்கொண்டு வெட்டிப் பார்த்திருக்கிறார். மனிதனின் இரத்த ஓட்டம் நின்று போவதற்கு முன்னர் அவற்றைப் பற்றி அறிவதற்கு, வெட்டியெடுத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அவருக்கிருந்திருக்கிறது. மனிதனின் இரத்த நாளைங்கள் ஒவ்வொன்றையும் காலிலிருந்து தலைவரை, அவை எப்படியெப்படியெல்லாம் செல்கின்றன என்னும் விபரங்களுடன் பல படங்களாக வரைந்திருக்கிறார். இப்படி இறந்துபோய் வெட்டப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டவர்களில் குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பினிகள் எனப் பலருண்டு. மனித இதயத்தைக் கூட இறந்து போன சில கணங்களில் வெட்டியெடுத்து அப்படியே வரைந்திருக்கிறார். உடலுறுப்புகள், எலும்புத் தொகுதிகள், தசைத் தொகுதிகள், இரத்த நரம்புகளென அனைத்தும் முழுவிபரமாக அவரின் குறிப்புப் புத்தகத்தில் காணப்படுகின்றன். மனிதன் மட்டுமல்ல, மிருகங்கள், பறவைகள்கூட இவரிடமிருந்து தப்பவில்லை.






இதுபோன்ற செயல்களெல்லாம் அந்தக் காலங்களில் கத்தோலிக்க மதபீடத்தினால் தடை செய்யப்பட்டவையாகும். இந்தச் செயல்களைச் செய்பவர்களுக்குத் தயங்காமல் மரண தண்டனையை அளித்து வந்தனர். கிருஸ்தவ மதத்திற்கே, இந்தச் செயல்கள் எதிரானவையென்று கருதினார்கள். ஆனால், ஒருபுறம் பைபிளிலுள்ள கடவுளர்களின் காட்சிகளை அழகாக வரைந்துகொண்டு, மறுபுறம் மதக் கோட்பாட்டிற்கெதிராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார் லியர்னாடோ டா வின்சி. ஆராய்ச்சிகள், அறிவியல் ஆகியவற்றில் ஈடுபட்டு மதத்துக்கெதிரான கருத்துகளைச் சொன்ன பல அறிஞர்கள் மரணத்தைச் சந்தித்த காலமது. வெளிப்படையாகவே பலர் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த 'கலிலியோ' (Galileo Galilei) கூடத் தன் கண்டுபிடிப்பை மாற்றி எழுதிவைக்கும்படி வற்புறுத்தப்பட்டார். இல்லாவிட்டால் அவரும் மரணத்தையே சந்தித்திருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட காலங்களில் 'டா வின்சி', இந்தளவுக்குப் புரட்சிகரமான ஆராய்ச்சிகளை யாருக்கும் தெரியாமல் செய்திருப்பதே பெரும் ஆச்சரியம்தான். 'இவ்வளவு மர்மமாக இயங்கிய ஒருவர், மதக்கோட்பாடுகளை மதிப்பவராக இருந்திருக்க முடியுமா? என்ற கேள்வி பலரிடமிருக்கிறது. 


மதக்கட்டுப்பாடுகளாலேயே டா வின்சி தன் ஓவியங்கள் அனைத்துக்கும் பின்னால் பல மர்மமுடிச்சுகளை குறியீடுகளாகக் கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கடைசி இராப்போசன ஓவியத்தில்கூட மேரி மக்டலேனாவை மர்மமாக டா வின்சி வரைந்திருக்கிறாரென்ற குற்றச்சாட்டை எடுத்து வைத்தார் எழுத்தாளரான டான் பிரௌன். அந்த ஓவியத்தில் இயேசுநாதருக்கு வலது பக்கத்தில் அமர்ந்திருப்பவரை 'ஜான்' என்னும் சீடரென்றே சொல்வார்கள். ஆனால், அது ஜானல்ல, மேரி மக்டலேனாதானென்று 'டான் பிரௌன்' சொல்கிறார். இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கலாம் என்று டா வின்சி வந்து சொன்னால் மட்டுமே தெரியக்கூடும். "இங்கு எதற்கு மரிய மக்டலேனாவை டா வின்சி வரைந்திருக்க வேண்டும்" என்று கேட்டால், அதற்குக் கிடைக்கும் பதில் நம் தலையையே சுற்ற வைப்பதாக இருக்கிறது. இப்போது உலகில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது, உண்மையாக இருக்குமோவென்று, கொஞ்சம் பயம் வரத்தான் செய்கிறது.


டான் பிரௌன் சொல்லும் கதை இதுதான். இயேசுநாதர், மரிய மக்டலேனாவைத் திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு 'சாரா' என்றொரு மகளும் இருந்தார், இதை இயேசுநாதரின் சில சீடர்கள் விரும்பவில்லை. அதனால், இயேசுநாதரின் பின்னர் மரிய மக்டலேனாவும், அவரது குழந்தையும் உயிராபத்துக்குள்ளானார்கள். ஆனால், இயேசுநாதரின் பரிசுத்தமான பரம்பரையைக் காப்பாற்ற, ஒரு இரகசிய இயக்கமொன்று தயாராகியது. அந்த இயக்கத்திற்குப் பெயர்தான் 'நைட் டெம்லர்' (Knight Templar). பைபிளில் குறிப்பிடப்படும் சாலமன் இராஜா அமைத்த கோவிலிலிருந்து நைட் டெம்லர்களின் கதை ஆரம்பிக்கிறது. இவர்களே 'இலுமினாட்டிகள்' (Illuminatti) என்றும், 'ஃபிரீ மேசன்கள்' (Free Masons) என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த இயக்கத்தில் ஐசாக் நியூட்டன் உட்படப் பல அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவராக லியர்னாடோ டா வின்சியும் இருந்திருக்கிறாரென்று சொல்லப்படுகிறது. இதனாலேயே 'கடைசி இராப்போசன' ஓவியத்தில் மரிய மக்டலேனாவை டா வின்சி வரைந்து வைத்திருந்தாரென்றும் சொல்லப்படுகிறது. ஃப்ரீ மேசன்களென்றாலே மர்மம்தான். ஃப்ரீ மேசன்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் தனியானதொரு புத்தகம் எழுதும் அளவுக்குச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்றும்கூட ஃப்ரீ மேசன்களே உலகை ஆட்சி செய்துவருகிறார்களென்ற 'சூழ்ச்சிக் கோட்பாடு' (Conspiracy Theory) இருக்கிறது. ஃபிரீ மேசன்கள் இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால், அவர்களொன்றும் ஒளித்து வாழ்வில்லை. வெளிப்படையாகவே தங்களை ஃப்ரீ மேசன்களென்று கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் கூடும் இடங்களையும் நாம் இலகுவாக அறிந்து கொள்ளலாம். ஆனால் அவர்களின் நடவடிக்கைகளில்தான் மர்மங்களுண்டு என்று சொல்லப்படுகிறது. இதில்கூட எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதென்று சொல்ல முடியவில்லை.



டா வின்சியின் பெயரைச் சொன்னதும் நம் அனைவரின் ஞாபகத்தில் வருவது ஒன்றுதான். அதுதான் 'மொனா லிசா' (Mona Lisa) ஓவியம். இந்த ஓவியமும் இப்போது மர்மமாகவே பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் ஓவியத்தில் காணப்படும் மொனா லிசாவின் சிரிப்பைத்தான் 'மர்மமான புன்னகை' என்று வர்ணித்தார்கள். இப்போது ஓவியமே மர்மமாகிவிட்டது. லியார்னாடோ டா வின்சியின் பெரும்பாலான ஓவியங்கள் ஏன், எப்போது, எதற்காக வரையப்பட்டது என்ற குறிப்புகளுடன் நமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்த 'மொனா லிசா' ஓவியம் மட்டும் எந்தக் குறிப்புமில்லாமல் நம்மைத் திகைக்க வைக்கிறது. "யார் இந்த மொனா லிசா?" என்ற கேள்விக்குக் கூட மழுப்பலான, சந்தேகத்துக்குரிய பதில்தான் கிடைக்கிறது. உண்மையாக அது யாருடைய ஓவியமென்று எவருக்கும் தெரியவில்லை. 'பிரான்செஸ்கோ' (Francesco del Giocondo) என்னும் வணிகர் ஒருவனின் மனைவியாக இந்த 'மொனா லிசா' இருக்கலாமென்று ஒரு கதையுண்டு. ஆனாலும் அதற்கு வேண்டிய ஆதாரங்கள் எவையுமில்லை. அந்தக் காலங்களில் இத்தாலியின் பெருநகரங்களை ஆட்சி செய்து வந்தவர்கள் வணிகர்கள்தான். அப்படியொரு பெரும் வணிகர்களில் ஒருவரான பிராஞ்செஸ்கோ தன் மனைவியை ஓவியமாக வரைந்து தரும்படி, லியார்னாடோ டா வின்சியைக் கேட்டிருந்தாரென்றும், அதற்குப் பெருந்தொகையான பணத்தைக் கொடுத்தாரென்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இதிலும் ஒரு பெரும் ஆச்சரியம் இருந்தது. 'மொனா லிசா' ஓவியத்தை 'டா வின்சி' எப்போது வரைந்தாரோ, அப்போத்திலிருந்து அவர் மரணமடையும்வரை அந்த ஓவியம் அவருடனேயே இருந்திருக்கிறது. பல இடங்களில் அவர் இடம்மாறித் தப்பி வந்தபோதும், அவருடன் கூடவே இந்த 'மொனா லிசா' ஓவியத்தையும் எடுத்துச் சென்றிருக்கிறார். இதனாலேயே 'மொனா லிசா' என்பவர் டா வின்சியின் காதலியாகத்தான் இருக்க வேண்டுமென்று சந்தேகப்படுபவர்களும் உண்டு. 'டா வின்சி' இறக்கும்வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. அவர் காதலித்த பெண்தான் இந்த மொனா லிசாவென்றும், அதனாலேயே அவர் கடைசிவரை தன்னுடன் இந்த ஓவியத்தை காதலியின் ஞாபகமாக வைத்திருந்தாரென்றும் சொல்வார்கள். ஆனால் உண்மையாக 'டா வின்சி' ஏன் இந்த ஓவியத்தைத் தன்னுடன் கடைசிவரை வைத்திருந்தாரென்று யாருக்கும் தெரியவில்லை. பெருந்தொகை கொடுத்து, வணிகர் பிரான்செஸ்கோ அதை வரையச் சொல்லியிருந்தால், அந்த ஓவியம் பிரான்செஸ்கோவிடமல்லவா இருந்திருக்க வேண்டும்? அது எப்படி டா வின்சியிடமே இருந்தது? யாரோ ஒரு பெண்ணின் ஓவியத்தை வரைந்துவிட்டு, இவர் எப்படித் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியும்?





மேற்படி காரணங்களால் 'மொனா லிசா' என்னும் பெண் நிச்சயம் டா வின்சியின் காதலியாகத்தான் இருப்பார் என்பவர்களை, நம்மால் நினைத்தே பார்க்க முடியாத காரணமொன்றைச் சொல்லி மறுக்கிறார்கள்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். டா வின்சியின் காதலியாக, 'மொனா லிசா' இருக்க முடியாதென்று அவர்கள் முன்வைக்கும் காரணம் உங்களை முகஞ்சுளிக்க வைக்கலாம். டா வின்சியும் காதலித்துத்தான் இருக்கிறார். அவர் தன் 67 வயதில் திருமணமாகாமல் இறந்தாலும், காதல் செய்துகொண்டேதான் இருந்திருக்கிறார். ஆனால், 'டா வின்சி' காதலித்தது ஒரு பெண்ணை அல்ல, ஒரு ஆண்மகனை. 'லியார்னாடோ டா வின்சி' ஒருபால் விரும்பியா (Homosexual) என்பது சரியாகத் தெரியாவிட்டாலும், அவர் ஒருபால் விரும்பிதானென்றே பலர் சந்தேகம் கொள்கின்றனர். அவரிடம் ஓவியம் கற்றுக்கொள்ள வந்த இளைஞனான 'சலை' (Salai) என்பவனுடன் அவருக்குத் தொடர்பிருந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். டா வின்சியின் ஓவியங்கள் சிலவற்றுக்கு மாடலாக இந்த சலையே நின்றிருக்கிறான். இதனால், மொனா லிசாவென்னும் காதலி, டா வின்சிக்கு இருந்திருக்க முடியாதென்று மறுக்கிறார்கள். 'அப்படியென்றால் இந்த மொனா லிசா யார்?' என்ற கேள்விக்குப் பதில் மர்மமாகவே இருக்கிறது. பாரிஸிலுள்ள 'லூவ்ரெ' (Louvre) கண்காட்சிச்சாலையில் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுவருகிறது மொனா லிசா ஓவியம். இன்று யாருமே நெருங்கி அதைக் களவாட முடியாத அளவுக்குப் பாதுகாப்புடன் 'மொனா லிசா' ஓவியம் இருந்தாலும், முன்னர் ஒருமுறை இதே லூவ்ரெ கண்காட்சிச்சாலையிலிருந்து களவாடப்பட்டிருக்கிறது. 


1911ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி பெரூக்கியா (Vincenzo Perrugia) என்பவனால் 'மொனா லிசா' ஓவியம் களவாடப்பட்டது. இத்தாலி நாட்டைச் சேர்ந்தவன் இந்தப் பெரூக்கியா. 'மொனா லிசா' ஓவியத்தைத் திருடிவிட்டு இரண்டு வருடங்களாக மறைத்து வைத்திருந்து, பின்னர் பிடிபட்டான். நல்ல வேளையாக ஓவியத்துக்கு எதுவும் நடைபெற்றிருக்கவில்லை. "ஓவியத்தை ஏன் திருடினாய்?" என்று கேட்டதற்கு, "இத்தாலியின் ஓவியம் பிரான்ஸ் நாட்டிலிருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் அதை இத்தாலிக்கே கொடுப்பதற்குத்தான் திருடினேன்" என்று பதில் சொன்னான். அவன் நாட்டுப்பற்றைச் சிலர் பாராட்டினாலும், 'அவன் விற்பனை செய்வதற்காகத்தான் திருடியிருக்கிறான். நல்ல முறையில் விற்பனைசெய்ய முடியாமல் பிடிபட்டதும், இப்படிச் சொல்கிறான்' என்றுதான் பலர் சொல்கிறார்கள். ஆனால், இவன் இந்த 'மொனா லிசா' ஓவியத்தை திருடியதும் ஒரு நல்ல விசயம் நடப்பதற்குத்தான். 'மொனா லிசா' ஓவியம் திருடப்பட்ட காலப்பகுதியில் ஒரு மனிதரால் ஒரு ஓவியமொன்று கொண்டுவந்து ஒப்படைக்கப்பட்டது. அந்த ஓவியத்தைப் பார்த்த அனைவருமே திகைப்பின் உச்சிக்குச் சென்றனர். இதுவரை அப்படியொரு ஆச்சரியத்தை அவர்கள் கண்டதே இல்லை. அந்த மனிதர் ஒப்படைத்த ஓவியத்தில் இருந்தது வேறு யாருமல்ல, அதே மொனா லிசாதான். எந்த 'மொனா லிசா' ஓவியம் திருடப்பட்டதோ அதை அப்படியே நகலெடுத்ததுபோல வேறொரு மொனா லிசாவின் ஓவியத்தை அவர் ஒப்படைத்திருந்தார். இரண்டு ஓவியங்களிலுள்ள மொனா லிசாக்கள் ஒன்றாகக் காணப்பட்டாலும், பல வித்தியாசங்கள் அவற்றுக்கிடையில் காணப்பட்டன. ஆனால், அந்த இரண்டாவது மொனா லிசாவை வரைந்தவரும் லியார்னாடோ டாவின்சிதான் என்றே நம்ப முடிந்தது. இதுவரை உலகில் ஒரேயொரு மொனா லிசா ஓவியம்தான் உண்டு என நினைத்திருந்தவர்கள் திகைப்பின் உச்சிக்கே சென்றார்கள். புதிதாக வந்த 'மொனா லிசா' சற்று இளமையாகவும் காணப்பட்டார்.

- தொடரும்


3 comments:

  1. வெரோனிக்காவின் முக்காடு-பகுதி 7 என்று வெளியிடுவீா்கள் அண்ணா....? ஆவலுடன் எதிா்பாா்த்து காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete