வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

February 13, 2016

திணிவு, எடை, நிறை

சாதாரணமாக ஒரு பொருளின் பாரத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொற்கள் திணிவு, எடை, நிறை என்பவையாகும். ஆனால், அறிவியலில் இவற்றிற்கிடையே வித்தியாசம் இருக்கிறது. ‘ஈர்ப்பலை’ (Gravitational Waves) பற்றிய என் பதிவுக்குப் பலரின் சந்தேகங்கங்கள், திணிவு, எடை, நிறை சார்ந்தே இருந்தன. ‘நட்சத்திரங்களும், கருந்துளைகளும் அதிகத் திணிவுள்ளவையாக இருப்பதால் அவை அண்டவெளியை வளைக்கின்றன. அவை ஒவ்வொன்றின் திணிவுக்கேற்ப அந்த வெளிவளைவு இருக்கும்’ என்று எழுதியிருந்தேன். இதில்தான் அதிகமானவர்களின் சந்தேகம் இருந்தது. “விண்வெளியின் காற்று இல்லை. அங்கு இருப்பது வெற்றிடம் மட்டும்தான். அங்கு சென்றால் மனிதனுக்கு கூட எடை கிடையாது. அப்படியிருக்கையில் எப்படிக் கோள்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் எடை இருக்க முடியும்?” என்று கேட்டிருந்தார்கள். நியாயமான கேள்விதான் அது. ஆனால் அதன் விடை நான் மேலே சொன்ன சொற்களின் அர்த்தங்களில்தான் இருக்கின்றது. இவற்றையெல்லாம் நீங்கள் சின்ன வயதில் பாடசாலைகளில் படித்ததுதான். ஆனாலும் மறந்திருப்பீர்கள். அதனால்தான் இந்தக் குழப்பம்.

முதலில் திணிவு, எடை, நிறை ஆகிய மூன்றும் வேறு வேறானவையா, அல்லது ஒன்றையே குறிக்கின்றனவா? என்று நாம் பார்க்கலாம்.

எடை, நிறை என்னும் இரண்டு சொற்களும் ஒன்றையே குறிப்பவை. ஆனால் ‘திணிவு’ வேறுவகையானது. எடையென்று தமிழ்நாட்டுத் தமிழர்கள் எதைக் குறிப்பிடுகிறார்களோ, அதற்கு ஈழத்தில், ‘நிறை’ என்று சொல்வார்கள். இதுதான் இந்த இரண்டு சொற்களின் வித்தியாசம். தமிழ்நாட்டின் சில இடங்களில் ‘நிறை’ என்ற சொற்பதம் பிரயோகப்படுத்தப்படலாம். அதை நீங்கள்தான் சொல்ல வெண்டும்.

‘எடை’ மற்றும் ‘நிறை’ என்னும் சொற்களுக்கு ஆங்கிலத்தில் ‘Weight’ என்று சொல்வார்கள். ஆனால், ‘திணிவு’ அப்படியல்ல, திணிவை ஆங்கிலத்தில் ‘Mass’ என்பார்கள். திரைப்படங்களில் “நான் மாஸுடா!” என்னும் டயலாக் சரியான விதத்தில் புரிந்து கொண்டுதான் பயன்படுத்துகிறார்களா என்றும் எனக்குத் தெரியவில்லை. அதையும் இயக்குனர்கள்தான் சொல்ல வேண்டும்.





ஒவ்வொரு பொருளுக்கும் ‘திணிவு’ (Mass) இருக்கிறது. இந்தத் ‘திணிவு’ அந்தப் பொருள் எங்கு இருந்தாலும் மாறாது. அது பூமியில் இருந்தாலென்ன, சந்திரனில் இருந்தாலென்ன, விண்வெளியில் இருந்தாலென்ன எங்கிருந்தாலும் அதன் ‘திணிவு’ மாறவே மாறாது.

“அது எப்படி?”

ஒரு ‘ஐதரசன்’ அணுவை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்குள் உபஅணுத்துகள்கள் இருக்கின்றன. அதில் உள்ள புரோட்டான் ஒன்றின் திணிவு 1. அதை அணுத்திணிவு என்போம். அதாவது ‘ஐதரசன்’, ஒரு அணுத்திணிவு உடையது. அது கிராம், கிலோகிராம், அவுன்ஸ் போன்ற அலகு கிடையாது. ஒன்று என்றால் ஒன்று. அவ்வளவுதான். அதுபோல ஒவ்வொரு தனிமங்களுக்கும் அணுத்திணிவுகள் உண்டு. இந்த அணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகள் உருவாகின்றன. மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்து பொருட்களும், நானும், நீங்களும், பூமியும், நட்சத்திரங்களும் ஆகிறோம். அதாவது ஒரு பொருளில் உள்ள அணுக்களின் திணிவின் கூட்டுத்தொகை அந்தப் பொருளின் மொத்தத் திணிவு ஆகிறது. இதில் குறிப்பாக புரோட்டானுக்கும், நியூட்ரானுக்கும் அணுவில் அளக்கக் கூடிய திணிவு இருக்கிறது. மற்ற உபஅணுத்துகள்களின் திணிவுகள் ரொம்பக் கம்மியென்பதால் அவற்றை நாம் தவிர்த்துவிடலாம். இதை எழுதிக் கொண்டிருக்கும் ‘ராஜ்சிவா’ ஆகிய நானும் அணுக்களால் உருவானவனே! என்னுள் எத்தனை அணுக்கள் இருக்கின்றனவோ அவ்வளவு திணிவை உடையவன். நான் சந்திரனுக்குச் சென்றாலும் இதே ராஜ்சிவாதான். என்னில் எந்த மாற்றமும் ஏற்பட மாட்டாது. அப்படி மாற்றமிருந்தால், நான் சரவணனாலவோ, செல்வமாகவோ மாறியிருப்பேன். நான் விண்வெளியில் இருந்தாலும், நட்சத்திரங்களில் இருந்தாலும், எங்கிருந்தாலும் ராஜ்சிவாதான். அதனால், என்னுடைய திணிவு எங்கும் சமமானது. அதுபோல, நான் எங்கு சென்றாலும் எனக்குத் ‘திணிவு’ இருந்துகொண்டே இருக்கும். ஆனால், எடை/நிறை அப்படியல்ல.

ஒரு பொருளின் எடை/நிறை என்பது அது எங்கு இருக்கிறதோ அதற்கேற்ப மாறுபடும். அதாவது ஒரு குறிப்பிட்ட திணிவுள்ள பொருளை ஈர்ப்புவிசை கீழ்நோக்கி இழுக்கும் போது ஏற்படுவதே எடை/நிறை எனப்படும். அதாவது, ராஜ்சிவாவின் திணிவை புவியீர்ப்பு விசையினால் பெருக்கும்போது வருவதே, ராஜ்சிவாவின் எடை/நிறை. இதே ‘ராஜ்சிவா’ சந்திரனுக்குச் சென்றால், அங்கு ஆறிலொரு மடங்கு எடையையோ/நிறையையோ கொண்டிருப்பார். காரணம் சந்திரனின் சந்திர ஈர்ப்புவிசையானது, பூமியின் புவியீர்ப்பு விசையின் 1/6 பங்காகும். இதே ‘ராஜ்சிவா’ காற்றில்லா விண்வெளியில் இருந்தால் அவருக்கு எடை/நிறை இருக்காது. காரணம் அங்கு ஈர்ப்புவிசை இல்லை. ஆனால் ஒன்றை மறக்க வேண்டாம். விண்வெளியிலும் ராஜ்சிவாவுக்குத் திணிவு இருக்கும்.

“சரி, அப்படியென்றால், ராஜ்சிவாவின் திணிவு எவ்வளவு”

பூமியில் ராஜ்சிவாவின் எடை 78 கிலோ என்றால் (நம்புங்க. இப்போது ‘ராஜ்சிவா’, எடையைக் குறைத்துவிட்டார். முன்னர் இருந்த குண்டான ‘ராஜ்சிவா’ இல்லை இப்போ), அந்த நிறையை பூமியின் புவியீர்ப்பு விசையினால் வகுத்தால் எவ்வளவு வருகிறதோ, அதுதான் ராஜ்சிவாவின் திணிவு. இதுபோல உங்கள் திணிவுகளையும் நீங்கள் கணித்துக் கொள்ளலாம். இதை இயற்பியலில் ஒரு சமன்பாட்டின் மூலம் சொல்வார்கள்

எடையை/நிறையை W என்னும் குறியீட்டாலும், திணிவை m என்னும் குறியிட்டாலும், புவியீர்ப்பை g என்னும் குறியீட்டாலும் குறிப்பிடுவார்கள்.
W=mg என்பதுதான் அந்தச் சமன்பாடு.

அதிகமானோர்களின் சந்தேகம் இதனால் தீருமென்று நம்புகிறேன். மற்றவர்களின் சந்தேகங்களுக்குப் படிப்படியாகப் பதில் தருகிறேன்.


No comments:

Post a Comment