வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

January 24, 2015

ஒரு மரத்தோப்பு


பலவித மரங்கள் ஒன்றாகக் கூட்டமாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் செழித்துப் பூத்துக் குலுங்கி வளர்ந்திருப்பதைச் 'சோலை' என்பார்கள். 'சோலை' என்று சொன்னதும் பசுமையாக, நிழல்தரும் ஏதோவொரு இடம் பட்டென உங்கள் ஞாபகத்துக்கு வந்தே தீரும். நம்மூர்களில் மாஞ்சோலைகள் நிறைந்திருந்ததை இப்போது என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடிகிறது.


எங்களூரில் மாஞ்சோலைகள் நிறைந்திருப்பது போல, பிறேசிலில் 'கஜூ’ (Cashew) மரங்கள் சோலைகளாக வளர்ந்திருக்கும். கஜூ விதைகளை விரும்பி உண்ணாதவர்களே உலகில் இல்லையெனலாம். உலகில் எந்த மரத்தின் கனிகளை எடுத்துக் கொண்டாலும், அவற்றின் விதைகள் கனிகளுக்குள்ளேயே ஒளிந்து காணப்படும். ஆனால் விதிவிலக்காக, கஜூமரத்தின் கனியின் விதை மட்டும் அதற்கு வெளியே கனியுடன் ஒட்டியபடி காணப்படும்.


இனி நாம் விசயத்துக்கு வருவோமா…...?


மேடைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் (Shows) பல கலைஞர்கள் பங்குபற்றுவார்கள். பலர் பங்குபற்றுவதுதான் ஒரு நிகழ்ச்சிக்குச் சிறப்பும்கூட. ஆனால் விதிவிலக்காகச் சில நிகழ்ச்சிகள் ஒரேயொரு தனிமனிதனால் மட்டும் நடத்தப்படும். அதை 'One man show' என்பார்கள். பல மரங்கள் ஒரு பெருநிலப்பரப்பில் சேர்ந்து வளர்ந்திருப்பதைச் சோலை என்பார்கள் என்று மேலே சொல்லியிருந்தேனல்லவா? ஆனால் விதிவிலக்காக 'One man சோலை' ஒன்றும் உலகத்தில் இருக்கிறது. அந்த ஆச்சரியத் தோப்புப் பற்றித்தான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.


ஆமாம், ஒரேயொரு மரம், பலமரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருப்பது போலச் செறிவாகவும், செழிப்பாகவும், ஒரு உதை பந்தாட்ட மைதானத்தையும் விட அதிகமான நிலப்பரப்பில் வளர்ந்திருக்கிறது. தூரத்திலிதிலிருந்தோ, மேலிருந்தோ பார்க்கும் போது நூற்றுக் கணக்கான பெருமரங்கள் அடர்ந்து வளர்ந்திருப்பதைப் போலக் காட்சி தரும். அது ஒரேயொரு மரச் சோலையென்பதை யாரும் நம்ப மாட்டார்கள். அல்லது ஒரேயொரு மரத்தோப்பு.


பிறேசில் (Brazil) நாட்டில் பிராங்கி (Pirangi) என்னுமிடத்தில் உள்ள கஜூ மரமொன்றுதான் இப்படித் தனிமரச் சோலையாக வளர்ந்திருக்கிறது. வழமையாகப் பூமிக்கு நிலைக்குத்தாகத்தான் கஜூ மரங்கள் வளரும். இந்த மரமும் அப்படித்தான் பெருத்து வளர்ந்தது. பின்னர் என்ன நினைத்ததோ தெரியவில்லை, பூமிக்குக் கிடையான நிலையில் தன் கிளைகளைப் பரப்பி வரளவிடச் செய்ய ஆரம்பித்துவிட்டது. 188ம் ஆண்டு லூயிஸ் இனாசியோ என்னும் மனிதர் நட்டுவைத்த இந்தக் கஜூ மரம், வளர ஆரம்பித்து, இன்றும் இப்போதும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இன்று அது 8000 சதுர மீட்டர் பரப்பளவில் வளர்ந்திருக்கிறது. அதாவது 70க்கும் மேற்பட்ட சராசரி கஜூ மரங்கள் வளர்ந்திருக்க வேண்டிய இடத்தில் ஒரேயொரு தனிமரம்.


இந்த ஒற்றை மரச் சோலையைச் சுற்றிப் பலர் குடியிருக்கின்றனர். சொல்லப் போனால், அதுவொரு சுற்றுலாப் பயணிகளுக்கான இடமும் ஆகிவிட்டது. பெரும்பான்மையான மக்கள் தினமும் அந்த மரத்தைப் பார்வையிட வருகிறார்கள். அதனால் சுற்றுலாவாசிகளை மையமாக வைத்து வியாபாரம் செய்யும் மக்கள், அந்த மரம் இருக்குமிடத்தைச் சுற்றியே வாழ்கின்றனர். அவர்களையெல்லாம் வீட்டைவிட்டு எழும்பிச் செல்லும்படி அரசு வலியுறுத்துகிறது. காரணம், அந்த மரம் இப்போதும் அகலமாகக் கிளைபரப்பி வளர்ந்து கொண்டேயிருக்கிறதாம். அதன் வளர்ச்சியைத் தடுக்காமல், மேலும் வளர அனுமதிப்பதற்காகவே இதை வலியுறுத்துகின்றது அரசு. மக்கள் குடியிருப்பதால், தற்சமயம் கிளைகளை வெட்டிவிட்டுக்கொண்டே இருக்கின்றனராம்.


ஒரு தனிமரம் இந்த அளவுக்குப் பெரியதாக வளர்ந்திருப்பது உலக அதிசயத்தில் ஒன்றுதான். அத்துடன், ஒற்றுமையாய் வாழ்வதுதான் பலம் என்பதைக் குறிப்பதற்காகத் தமிழில் இருக்கும் மிக அருமையான மூத்தோர் வாக்கு 'தனிமரம் தோப்பாகாது' என்பதாகும். ஆனால், அந்த வாக்கை இந்தத் தனிமரத் தோப்புப் பொய்யாக்கிவிட்டது.


'விதிவிலக்குகள் எப்போதும் விதிகளாகிவிடாது’ என்ற வாக்கும் நம்மிடையே உண்டு.