வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

August 12, 2014

நேரத்தின் பரிமாணம்




இந்தப் பதிவைப் படிப்பவர்களில் பெரும்பாண்மையானவர்கள் 25 வயதைத் தாண்டியவர்களாக இருப்பீர்கள். மேலும் சிலர் 35 வயதைத் தாண்டியவர்களாகவும், அதற்கு மேலானவர்களாகவும் இருக்கலாம். அதனால், நான் இப்போது சொல்லப் போவதை நீங்கள் ஞாபகத்தில் மீண்டும் ஒருமுறை மீட்டிக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.


நீங்கள் எட்டு வயதுச் சிறுவனாக இருக்கும் போது, பிற்பகலில் பாடசாலை விட்டு வீட்டுக்கு வருவீர்கள். வீட்டுக்கு வந்ததும், அவசர அவரசராமாக உணவை உண்டுவிட்டு மாலை நான்கு மணியளவில் சக பையன்களுடன் விளையாடுவதற்குச் செல்வீர்கள். நான்கு மணியிலிருந்து அதிகபட்சம் ஆறு மணி வரைதான் நீங்கள் விளையாடியிருப்பீர்கள். மொத்தமாக இரண்டேயிரண்டு மணி நேரமாகத்தான் அது இருந்திருக்கும். ஆனால், நீங்கள் நீண்ண்ண்ண்ட நேரமாக, பல மணி நேரங்கள் விளையாடியது போல உணர்ந்திருப்பீர்கள். இந்த அனுபவம் உங்கள் எல்லாருக்கும் நடந்திருக்கும். ஆனால் அதே இரண்டு மணி நேரம் இப்போதெல்லாம் விரைவில் நகர்ந்து விடுவதாக உணர்வீர்கள். சின்ன வயதாக இருக்கும் போது, நேரமென்பது மிக மெதுவாக நகர்வது போல இருந்திருக்கும். அதுவே வயது அதிகரிக்க அதிகரிக்க, அதாவது 60, 70 வயதுகளில், அந்த இரண்டு மணி நேரம் ஒரு விரல் சொடுக்கில் ஓடிவிடுவதாகத் தெரியும்.


இளவயதில் நேரம் நகர்வது மெதுவாகவும், வயது அதிகரிக்க வேகமாக நகர்வது என்பதும் உண்மைதானா? இல்லை அது ஒரு மாயையா? அதாவது சிறுவயதில் மெதுவாக நேரம் நகர்ந்ததாக நாம் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா?


இல்லை! நமது ஒவ்வொரு வயதிலும், நேரம் நகர்வது பற்றி ஏற்படும் உணர்வு உண்மையானதுதான். அதில் எந்த மழுப்பலோ, மாயையோ இல்லை. சிறு வயதில் நேரம் மெதுவாக நகர்வதாக உணர்வதற்கும், வயது அதிகரிக்க நேரம் விரைவாக நகர்வதாக உணர்வதற்கும் அறிவியல் ரீதியான காரணம் உண்டு. அந்தக் காரணம் கணித ரீதியானதும் கூட. அது என்ன காரணமாக இருக்கும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா..? இல்லையா? பரவாயில்லை, தொடர்ந்து படியுங்கள். காரணம் தானாய் புரிந்து போகும்.


நேரத்தின் பரிமாணத்தை, நாம் வாழும் காலத்தின் அடிப்படையை வைத்தே புரிந்து கொள்கிறோம். அதாவது நம் கையில் ஒரு கடிகாரம் இல்லாவிட்டாலும் கூட, நேரம் செல்வதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அப்படி உணர்ந்து கொள்ளும் நேரத்தின் அளவை, நாம் எவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறோம் என்ற அனுபவத்தின் அடிப்படையை வைத்தே நம் மூளை கணித்துக் கொள்கிறது. என்ன, நான் சொல்வது புரியவில்லையல்லவா? சரி, இந்த உதாரணத்தைப் பாருங்கள் புரியும்.


நீங்கள் ஐந்து வயதுப் பையனாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் வாழ்ந்த காலம் மொத்தமாக ஐந்து வருடங்கள். உங்கள் வாழ்க்கையின் அனுபவம் ஐந்து வருடங்களின் காலத்துக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. ஐந்து வயதில், ஐந்து வருடங்கள் என்பது உங்களின் முழுமையான வாழ்காலம் என்பதாக மூளை கணித்து வைத்துக் கொள்கிறது. இப்போது நான் சொல்வதைச் சரியாகக் கவனியுங்கள்.


உங்கள் ஐந்துவயதில், ஒரு வருடம் என்பது நீங்கள் வாழ்ந்த காலத்தின் ஐந்தில் ஒரு பங்கு. அதாவது வாழ்நாளின் ஐந்தில் ஒரு பங்குக் காலம் என்பது மிக நீண்டதொரு காலம். அதே நேரம் உங்களுக்கு ஐம்பது வயது என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதில் ஒரு வருடம் என்பது, நீங்கள் வாழ்ந்த காலத்தின் ஐம்பதில் ஒரு பங்கு. அதாவது ரொம்பச் சிறிய காலம். ஐம்பது வயதுள்ள ஒருவருக்கு ஒரு வருடம் செல்வது என்பது அவரது அனுபவத்தின்படி சிறிய காலமாகவும், ஐந்து வயதுள்ள ஒருவருக்கு ஒருவருடம் செல்வது பெரிய காலமாகவும் இருப்பதன் காரணம் இதுதான். ஒருவருடம் போலவே, ஒரு மணி நேரமும் கணித அளவீடுகளைப் பெறுகிறது.


இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். வயது செல்லச் செல்ல நேரம் வேகமாகச் செல்வதற்குக் காரணம் இதுதான். அதனால் வயோதிபர்களுடன் உங்கள் நேரங்களை வழமையை விட, அதிகமாகச் செலவளிக்க முயற்சி செய்யுங்கள்.


பிற்குறிப்பு: இந்தக் கணிப்பு, காதலி வரும்வரை காத்திருக்கும் போது, நேரம் மெதுவாகவும், காதலி அருகில் இருக்கும் போது, நேரம் விரைவாகவும் நகர்வதாகத் தெரியும் மாயை நிலைக்குச் செல்லாது.




No comments:

Post a Comment