வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

October 22, 2015

இயற்பியலில் நடன நாயகன்


1980ம் ஆண்டு அளவில், கப்பலில் பணிபுரிந்துவிட்டு வந்த நண்பரொருவர் மூலமாக, எனக்கு 'சொனி வாக்மான்' (Sony Walkman) ஒன்று கிடைத்தது. முதன்முதலாக அப்படியானதொரு பாடல் கேட்கும் கருவியை நான் அன்றுதான் பார்த்தேன். இசை உலகைப் புரட்டிப்போடப்போகும் கண்டுபிடிப்பாக அது இருந்தது. நண்பர் வாக்மானுடன் ஒரு காசட்டையும் சேர்த்தே எனக்குக் கொடுத்தார். பிரமிப்புடன் அதைக் காதில் மாட்டிக் கேட்டேன்.


பெண்ணின் குரல்போன்ற கீச்சுக் குரலில், 'Dont stop till you get Enough' என்னும் ஆங்கிலப் பாடல் காதில் அதிர்ந்தது. கேட்ட மறுவினாடியே அந்தக் குரல் என்னை மயக்கியது என்றே சொல்ல வேண்டும். இதுவரை நான் கேட்டேயிராத வாக்மானின் துல்லியமான இசைத்தூறலில், அந்த இளைஞனின் குரல் வழிந்தோடியது. நான் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கே சென்றேன். அயல்நாட்டுப் பொருட்களின் வணிகம், விரல் நுனியில் இருக்கும் இன்றைய காலம்போல அல்ல அந்தக் காலம். ட்ரான்ஸ்சிஸ்டர் ரேடியோதான் நாம் கைகளில் வைத்திருந்த அதிகபட்ச தொழில்நுட்பக் கருவியாக இருந்த நேரம் அது. வாக்மான் எல்லாம் ‘ஐபோன்6’ ஐவிடப் பெறுமதியானவை.


பெண்குரல்போல ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரனான அந்த இளைஞனின் பெயர், 'மைக்கேல் ஜாக்‌ஷன்' என்று தெரிந்துகொண்டேன். கறுப்பு நிறம், வெள்ளை உடை, கூடைபோன்ற தலைமுடி ஆகியவற்றுடன் ஆடியோ காசெட்டில் சிரித்தபடி காட்சியளித்தான் அவன். அன்றிலிருந்து அவன் பாடல்களை விரும்பி ரசிக்கும் பலரில் நானும் ஒருவனானேன். பின்னாட்களில் மைக்கேல் ஜாக்‌ஷன், நடனத்திலும் உலகைக் கொள்ளையடித்தது தனிக்கதை.


இப்போது நான் மைக்கேல் ஜாக்‌ஷ்னை நினைவுகொள்வதற்கு ஒரு காரணமுண்டு. மைக்கேல் ஜாக்‌ஷனின் ‘லைஃப் ஷோ’ ஒன்றின் காணொளியை நான் மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் நேற்றுப் பார்க்க நேர்ந்தது. அதன் தொடர்ச்சியாக வந்த நினைவுகளே மேலே நான் எழுதியிருப்பவை. ஆனால், மைக்கேல் ஜாக்‌ஷனைப்பற்றி நான் சொல்லும் சாதாரணமான தகவல்களில் என்ன சுவாரஷ்யம் இருக்கப்போகிறது? அதனால், அறிவியலுடன் மைக்கேல் ஜாக்‌ஷன் இணைந்துகொண்ட ஒரு அரிய தகவலை இங்கு நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டால், அது சுவாரஷ்யமாக இருக்குமல்லவா? அதுவும் ஒரு இயற்பியல் சாதனையைச் செய்தார் என்றால் ஆச்சரியமாக இருக்குமல்லவா?


"என்ன மைக்கேல் ஜாக்‌ஷன் இயற்பியலில் சாகசம் செய்தாரா? மைகேல் ஜாக்‌ஷனுக்கும் அறிவியலுக்கும் என்ன சம்மந்தம்?" என்று வியப்பு வருகிறதல்லவா?


சரி...... அது என்னவென்று நாம் இப்போ பார்க்கலாம்.




ஆம்! அனைவரும் ஆச்சரியப்படும், இயற்பியலில் நடைபெறக் கடினமான ஒரு செயலைத் தனது மேடைகளில், சாகசமாக மைக்கேல் செய்துகாட்டியதை, உலகம் முழுவதும் வியந்தது என்னவோ நிஜம்.


1992ம் வருடங்களில் மைக்கேல் ஜாக்‌ஷன் ‘Smooth Criminal’ என்னும் பாடலை மேடைகளில் அற்புதமான நடனத்துடன் பாடிக்காட்டுவார். மேடை நிகழ்ச்சிகளில் மைக்கேல் ஜாக்‌ஷன் எப்படி நடனமாடுவார் என்பதை நீங்கள் நன்றாகவே அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடலின்போதும் ‘லீன்’ (Lean) என்னும் ஒரு வித நிலையில் மைக்கேல் ஜாக்‌ஷன் திடீரென நிற்பது அனைவரையும் வியப்பின் உச்சிக்குக் கொண்டுசென்றது. அதாவது பாடலின்போது, நடனமாடிக்கொண்டிருக்கும் மைக்கேல் ஜாக்‌ஷன், யாரும் எதிர்பார்க்காதபோது, நின்ற நிலையியே முன்னோக்கி 45 பாகை கோணத்தில் நிலத்தை நோக்கிச் சாய்வார். அப்போது அவரின் உடம்பு நேராக இருக்கும். ஒரு மனிதனால் புவியீர்ப்பு சக்திக்கு எதிராகச் செயப்படவே முடியாத ஒரு நிலை அது. ஒரு அதிசயச் செயல் என்றும் சொல்லலாம். அதாவது, புவியெதிர்ப்பு (Anti Gravity) விசையுடன் மைக்கேல் ஜாக்‌ஷன் தொழில்படுவதாக பலர் நினைக்கும் வண்ணம் அது இருந்தது. இதைப் பார்த்தவர்கள் அனைவரும் மைக்கேல் ஜாக்‌ஷன் மாஜிக் கலையைக் கற்று, இப்படிச் செய்கிறாரோ என்று நினைத்தனர். சிலர், மேடையில் கண்ணுக்குத் தெரியாத கறுப்புக் கயிறுகளின் உதவியுடன் அவர் இதைச் செய்கிறார் என்று கருதினார்கள். ஆனால் யாருக்கும் மைக்கேல் ஜாக்‌ஷன் உண்மையில் என்ன செய்தார் என்பது பல காலங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால், அவர் அணியும் அழகான காலணியை ‘ஈர்ப்புவிசையெதிர்ப்புக் காலணி’ (Anti Gravity shoe) என்று அழைத்தனர்.


புவியீர்ப்புக்கு எதிரான விசையுடன் ஒருவர் செயற்படுவது இயற்பியலில் ஒரு முக்கிய நிகழ்வு. இதைச்செய்வது அறிவியலில் எந்த அளவுக்குச் கடினம் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால், மைக்கேல் ஜாக்‌ஷன் தனக்கெனப் பிரத்தியேகமாக ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கி அதைச் செய்திருக்கிறார் என்பது பின்னர்தான் தெரியவந்தது. 45 பாகைக் கோணத்தில் சாய்ந்தபடி புவியீர்ப்புக்கெதிராக நிற்கும் நிலைக்கு உதவியது, மைக்கேல் ஜாக்‌ஷன் தனக்கென உருவாக்கிய சிறப்பான காலணிதான். அவர், தனது காலணியில் செய்த ஒருவகை நுட்பமான அறிவியல் தயாரிப்பின்மூலம், இந்தச் செயலைச் செய்யக் கூடியதாக இருந்தது.




தன் காலணியின் பாதப்பகுதியின் அடிப்பாகத்தை முக்கோண வடிவில் வெட்டியெடுத்து, அந்தப் பகுதியை மிகவும் பலமான பகுதியாக மாற்றி அமைத்துக்கொண்டார். மேடையில் நடனமாடும் வேளைகளில், அந்த மேடையி பதிந்திருக்கும் பலமான ஆணியென்று அந்த முக்கோணப்பகுதியில் இறுக்கமாக பொருந்திக்கொள்ள மைக்கேல் நின்று கொள்வார். அவர் அப்படி நிற்பதற்குத் தேவையான சில நொடிகள் நேரத்திற்கு, அவர் பார்வையிலிருந்து மக்களைத் திசைதிருப்ப வேறு ஒரு நிகழ்வு அந்த மேடையில் நடைபெறும். அந்த ஆணியில் காலணி பலமாகப் பொருந்தியதும், அதன் வலிமையைப் பயன்படுத்தி மைக்கேல் கீழ்நோக்கிச் சரிவார். அவரைக் கீழே விழாதவாறு, அவரது காலணியும், மேடையில் பொருத்தப்பட்ட ஆணியும் வைத்துக் கொள்ளும். பல மேடைகளில் இதைச் சக கலைஞர்களுடன் சேர்ந்தும் செய்வார். இது சாதாரணமாகச் செய்யக் கூடிய ஒரு செயலல்ல. மிகுந்த பயிற்சி அதற்குத் தேவை. அத்துடன் அதற்கென வடியமைக்கப்படும் காலணியும் மிகவும் பலமுள்ளதாக இருக்க வேண்டும். மேடையிலுள்ள ஆணியும் குறித்த நேரத்துக்கு மட்டும் மேலே வந்து, பின்னர் கீழே செல்லக் கூடியதாக அமைக்கப்பட வேண்டும். இவையெல்லாவற்றையும் மிக நேர்த்தியாகச் செய்துகாட்டி மேடைகளில் பெரும் பாராட்டுகளைப் பெற்றார் மைக்கேல். இயற்பியல் விதிகளுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்ற பெருமையையும் பெற்றார்.




மைக்கேல் தனது லீன் நிலைக்கு ஏற்பதாகத் தயாரித்த காலணியை, தயாரித்ததோடு மட்டும் விட்டுவிடவில்லை. அதைத் தான் மட்டுமே பயன்படுத்தலாமென்பதற்காகப் பிரத்தியேகமாகக் காப்புரிமையும் (Patent) பெற்றிருந்தார்.


அந்த அற்புதமான மாபெரும் கலைஞனையும், யாரோ ஒரு கும்பல் ஏதோவொரு காரணத்துக்காகக் கொலைசெய்திருக்கிறார்கள் என்பதுதான் மிகுந்த வேதனையையளிக்கும் விசயமாகும்.


-ராஜ்சிவா-


No comments:

Post a Comment