வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

October 20, 2015

கருஞ்சூரியனைச் சந்திக்கத் தயாரா?



இதுவரை நமக்குத் தெரிந்த சூரியன், மிகப்பிரகாசமான, நெருப்பைப்போல ஒளியை உமிழும் ஒரு சூரியன் அல்லவா? இந்தச் சூரியன் கருப்பான சூரியனாக மாறுவதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? கற்பனைசெய்து பார்க்கவே பயமாக இருக்கிறதல்லவா? ஆனால், இந்தப் பயம் சில அறிவியலாளர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. “சூரியன் படிப்படியாகக் கருஞ்சூரியனாக மாறப் போகிறதா?” என்னும் கேள்வி இப்போது விஞ்ஞானிகளால் கேட்கப்பட்டு வருகிறது. ஏன் இப்படிக் கேட்கிறார்கள்? ஆம்! அதற்கு ஒரு காரணம் உண்டு.




சமீபத்தில், சூரியனில் மிகப்பெரிய கரியபள்ளங்கள் தோன்றியிருக்கின்றன. சூரியனின் வடக்குத் துருவத்திலும், தெற்குத் துருவத்திலும் ஒவ்வொன்றாக இரண்டு கருங்குழிகள்போல இவை உருவாகியிருக்கின்றன. இதைக் ‘கோரோனல் குழிகள்’ (Coronal Holes) என்பார்கள். சூரியனின் மின்காந்தப் புலங்களினூடாக அணுக்கதிர்த்துகள்கள், நொடிக்கு 500 மைகள் வேகத்தில் சூரிய மேற்பரப்பிலிருந்து வீசியெறியப்படும்போது உருவாகியிருப்பதே இந்தக் கொரோனல் குழிகள். சூரியனைப் பொறுத்தவரை இது சாதாரணமாக நடைபெறுவதுதான். ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் குழிகள் சிறிய குழிகள் அல்ல. சூரியனின் மேற்பரப்பின், பத்திலொரு பங்கு அளவுக்கு இந்தக் கருங்குழிகள் இருக்கின்றன. இவை மேலும் பெரிதாகுமா? இல்லை அப்படியே சிலகாலங்கள் இருந்து இல்லாமல் போகுமா? என்று தெரியவில்லை. சூரியனின் மேற்பரப்பின் பத்திலொரு பகுதியென்பது சாதாரண அளவு அல்ல.


சூரிய வடதுருவத்தில் தோன்றியிருக்கும் பள்ளம், சற்றே நீளமான நிலையில் 3.8 பில்லியன்கள் சதுரமைல் அளவு பெரிதாக இருக்கிறது. 3.8 பில்லியன்கள் சதுரமைல் என்பது எவ்வளவு பெரிதென்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? சரி, இந்த வடதுருவக் கரும்பள்ளத்தைவிடப் பலப்பல மடங்குகள் பெரியது, தெற்குத் துருவத்தில் தோன்றியிருக்கும் கருங்குழி. அது, 142 பில்லியன் சதுரமைல் பரப்பளவு பெரியதாக இருக்கின்றது. உங்களால் இத்தனை பெரிய நிலப்பரப்பைக் கற்பனையே பண்ணமுடியாது. இவையிரண்டும் சேர்த்து, சூரியனின் மேற்பரப்பின் பத்திலொரு பங்காக இப்போது இருக்கின்றது. இப்படியான கருங்குளிகளைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே நாஸா அவதானித்து வந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சிறிதாக இருந்து இப்பொது இவ்வளவு பெரிதாக ஆகிவிட்டிக்கிறது. இதை அவதானிப்பதற்கென்றே நாஸா தனிப்பட்டதொரு தொலைநோக்கி ஆய்வுநிலையத்தையும் வைத்திருக்கிறது. அதை 'SDO' என்பார்கள் அதாவது, Solar Dynamics Observatory.






சாதாரணமாகச் சூரியனில் இப்படிக் கரும்பள்ளங்கள் தோன்றிப் பின்னர் மறைந்து போவது வழமைதான். அப்படிப் பார்த்தால், இப்போது தோன்றியிருக்கும் பெரியகுழி மறைவதற்கு ஐந்து வருடங்களுக்கு அதிகமான காலம் எடுக்கும். ஆனால், இதுவே இன்னும் பெரியதாக மாறவும் சாத்தியமுண்டு. அப்படிப் பெரியதாக ஆகும் பட்சத்தில், பூமிக்கு இதனால் பெரிய பாதிப்புகள் உருவாகும் அபாயமும் இருக்கின்றது. இப்போதுகூட, பூமியின் காலநிலையில் மாபெரும் மாற்றங்கள் தோன்றும் என்றுதான் சொல்கிறார்கள். சூரியனிலிருந்து வரும் மின்காந்தப் புயலைச் சந்திப்பதற்கு, பூமியைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும், ‘வான் அலன் பட்டி’ (Van Allen Belt) எந்த அளவுக்கு வலிமையாகவும் வீரியமாகவும் இருக்கப் போகின்றது என்பதைப் பொறுத்து, நமக்கு ஏற்படும் அபாயத்தின் அளவும் அமையும். ‘வான் அலன் பட்டி’ என்பது, நம் பூமியைச் சுற்றிப் பூமியின் வளிமண்டலப் (அட்மாஸ்பியர்) படலத்துக்கு மேலே மூன்று பகுதிகளாகப் பிரிந்து, ஒரு 'வடை' போன்ற அமைப்பில் (அவர்கள் உதாரணத்திற்கு ‘டோனட்’ என்பார்கள். நாம் ‘வடை’ என்போம்), காந்தப்புலன்கள் நிறைந்த ஒரு பாதுகாப்புப் படையாகும். சூரியனிலிருந்தும், விண்வெளியிலிருந்தும் வரும் ஆபத்தான காஸ்மிக் கதிர்களைப் பூமியினுள் ஊடுருவவிடாமல் பாதுகாத்துக்கொண்டிருப்பவை இந்த வான் அலன் பட்டிகள்தான்.


எவ்வளவுதான் வான் அலன் பட்டியாலும் பூமியைப் பாதுகாக்க முடியும் சொல்லுங்கள்? ஒரு அளவுக்கு மேல் சூரியனினால் உமிழப்படும் சூரியப் புயல்களிலிருந்தும், கொரோனோ வீச்சுகளிலிருந்தும், அதனால் பூமியைப் பாதுகாக்க முடியாமல் போய்விடும். எனவே, இனி வரப்போகும் சில மாதங்களில் பூமி பெரிய அனர்த்தங்களைச் சந்திக்க நேரிடலாம். அதைச் சந்திக்க நீங்களும் தயாராகுங்கள்.




ஆனால், இதையே சாக்காக வைத்து, “பூமியானது மக்களால் வெளிவிடும் நச்சுக் காற்றுகளினால் மேலும் வெப்பமடைகின்றது” என்று சொல்லி, நம்மிடம் மேலும் வரியாகப் பணத்தை வசூலிக்க ஒருகூட்டம் தயாராகிக் கொண்டிருக்கும். அவர்களிடம் நாம் ஏமாறுவதை எப்படித் தடுப்பது என்பதுதான் தெரியவில்லை. இப்போதுகூட, நாம் உபயோகிக்கும் கணணியின் பிரிண்டரில் பயன்படுத்தும் மையின் நச்சுத்தன்மையால பூமி மாசடைகிறது என்றொரு புதிய புரளியைக் கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டங்களில் கணணியின் பிரிண்டர் இல்லாத வீடுகளே இல்லை என்னும் நிலையில், அவர்களுக்கு இது நல்லதொரு வாழைப்பழமாக அமைந்திருக்கிறது. கணணி வரி என்று ஒரு வரியைப் போட்டாலும் ஆச்சரியமில்லை. இது எங்கே கொண்டுபோய் முடியப் போகிறதோ தெரியவில்லை.


நம்மை அழிக்கப்போவது சூரியனல்ல. சூரியன் நம்மை அழிப்பதைவிட, நாம் வாழவே அதிகப் பயன்களைத் தந்துகொண்டிருக்கிறான். ஆனால், நம்முடனே வாழ்ந்து நம்மையே சுரண்டிக்கொண்டிருக்கும் இவர்கள்தான் நம்மை மொத்தமாகக் காலிசெய்யப் போகிறவர்கள்.



-ராஜ்சிவா-


No comments:

Post a Comment