வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

February 9, 2016

உண்மையெல்லாம் உண்மையல்ல - 2


கடந்த பதிவில் நாம் உண்மையென்று நினைக்கும் எதுவுமே உண்மையில்லையென்று எழுதியிருந்தேன். அதன்படி, நாம் உண்மையென்று நம்பும் அடுத்த பொய் இது. இதுவும் சூரியக் குடும்பம் சாந்ததுதான்.


சூரியக் குடும்பத்தில் இருக்கும் அனைத்துக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்றே நாம் நம்புகிறோம். பாடசாலைகளில் பிள்ளைகளுக்கும் கற்பித்து வருகிறோம். இயற்பியலில் நல்ல அறிவும், புரிதலும் உள்ளவர்களுக்கு இவை மிகவும் தவறான கூற்றுகளே!


சூரியனை எந்தக் கோள்களும் சுற்றுவதில்லை என்பதுதான் பெரிய உண்மை. குறிப்பாக வியாழக் கிரகம் சூரியனைச் சுற்றுவதே இல்லையென்று சொல்லலாம்.


"இது என்ன புதுக் குழப்பம்?"


என்னவெல்லாமோ நம்புகிறோம் அதுபோல இவற்றையும் நம்பிவிட்டோம். ஆனால், உண்மை வேறு வடிவிலானது.


புரிய வைக்க முயல்கிறேன்......!


நியூட்டனுக்குப் பின்னர் நாம் ஈர்ப்புவிசைபற்றித் தெரிந்து கொண்டது ஒன்று. ஐன்ஸ்டைனுக்குப் பின்னர் ஈர்ப்புவிசைபற்றித் தெரிந்து கொண்டது வேறொன்று. ஐன்ஸ்டைனின் ஈர்ப்புவிசைக் கொள்கையின்படி, திணிவு உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஈர்ப்புவிசையிருக்கும். அதன் திணிவைப் பொறுத்து, அது வெளியை வளைக்கும்.


உதாரணமாக ஒரு வேட்டியின் நான்கு மூலைகளையும் நான்குபேர், அதைத் தொய்ந்து விடாமல் இறுகப் பிடித்தால், அந்த வேட்டி, ஒரு சமதளம் போலக் காணப்படுமல்லவா? அல்லது சிறுவர்கள் குதித்து விளையாடும் ட்ரம்பொலலைனையும் (Trampoline) நீங்கள் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். இப்போ நீங்கள், "ட்ரம்பொலைன் என்றால் என்ன?" என்று என்னிடம் கேட்டால், நான் அம்பேல். அதனால், நாம் வேட்டியுடனே நின்று கொள்வோம். அது கிழிந்தாலும் பரவாயில்லை.


சமதளம்போலக் காணப்படும் வேட்டியின் மேல் டென்னிஸ் பந்து ஒன்றை விட்டால், அந்தப் பந்து இருக்குமிடத்தில் வேட்டி, சற்றுக் கீழே அமிழ்ந்து குழிபோல காணப்படுமல்லவா?


அதுபோலத்தான், சமதளமாக இருக்கும் விண்வெளியில், சூரியப் பந்து இருக்கும்போது, அது வெளியை ஆழக்குழிபோல வளைக்கும். அந்தக் குழியை நோக்கிப் பொருட்கள் இழுக்கப்படுவதையே, 'ஈர்ப்புவிசை' என்றார் ஐன்ஸ்டைன். உண்மையில் ஈர்ப்புவிசை அப்படித்தான் தொழில்படுகிறது. குறைந்தபட்சம் இப்போதுள்ள அறிவியல் அறிவுப்படி இதுதான் சரியானது. பின்னர் இதுவும் மாறலாம், யார் கண்டது?


நாம் மீண்டும் வேட்டிக்கே வரலாம். வேட்டியில் ஒரு டென்னிஸ் பந்தைப் போட்டபோது, வேட்டி அதன் திணிவுக்கேற்ப வளைந்ததல்லவா? இப்போது வேறொரு சிறிய பந்தையும் வேட்டியின் மேல் போடுவோம். இப்போது இரண்டு பந்துகளின் திணிவுக்கேற்ப வேட்டி கீழ்நோக்கி வளையும். முன்னர் ஒரு டென்னிஸ் பந்தை மட்டும் போட்டபோது, வளைந்த வேட்டியின் மையப்புள்ளி, அந்தப் பந்தின் மையத்தை நோக்கியே இருந்திருக்கும். ஆனால், இரண்டாவது பந்து வந்ததும், இரண்டின் திணிவுக்கேற்றவாறு பொது மையப்புள்ளியும் மாறும். எது அதிகத் திணிவுள்ள பந்தோ, அதற்கு மிக அருகில் பொது மையப்புள்ளி இருந்தாலும், அந்தப் பந்தின் மையத்தில், பொதுவான மையம் இருக்காது.


இப்போது, வேட்டியில் மேலும் ஒன்பது சிறிய பந்துகளைப் போடுங்கள். இப்போது வேட்டியின் மொத்த வளைவு வேறுவிதமாக மாறி, அவற்றின் மொத்தமான பொது மையப்புள்ளியும் வேறு இடத்துக்கு மாறும்.





இதுபோலத்தான் சூரியக் குடும்பமும். சூரியக் குடும்பம் என்பது சூரியன் என்னும் மிகப்பெரிய நட்சத்திரத்தையும், பல கோள்கள், உபகோள்களையும் கொண்டது. சூரியக் குடும்பம் மொத்தமும் ஒரு தனியான 'அமைப்பு' (System). இந்த அமைப்புக்கென்று மொத்தமான ஒரு திணிவு உண்டு. அந்த மொத்தத் திணிவுக்கேற்ப சூரிய அமைப்புக்கு ஒரு மையம் இருக்கிறது. அந்த மையத்தை 'பரிமையம்' (barycentre) என்கிறோம். இந்த பரிமையம் சூரியனின் மையப்புள்ளி அல்ல. அது அநேகமாகச் சூரியனுக்கு வெளியே இருக்கும். சூரியன் அதிக எடை உள்ளதாக இருப்பதால், இந்த பரிமையமும் சூரியனுக்கு அருகில்தான் இருக்கும்.


சூரியக் குடும்பத்திலுள்ள எல்லாக் கோள்களும், சூரியன் உட்பட, இந்த பரிமையத்தையே சுற்றுகின்றன. சூரியனை அல்ல. அதனால் பூமி, சூரியனைச் சுற்றிவருகின்றதென்பது உண்மையல்ல. வியாழக் கிரகம், பெரியதாகவும், அதிக எடையுள்ளதாகவும் இருப்பதால், சூரியனை அது எப்போதும் சுற்றுவதேயில்லை. சூரியக் குடும்பத்தின் கோள்கள் அடிக்கடி இடம் மாறுவதால், பாரிமையமும் மாறிக்கொண்டேயிருக்கும். சில சயங்களில். கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பரிமையம் சூரியனை ரொம்பவும் தாண்டியிருக்கும்.


இப்போது நாம் கொஞ்சம் தர்க்க ரீதியாகப் பார்த்தால், எல்லாக் கோள்களும் பூமியைச் சுற்றுகின்றன என்று சொன்னாலும் அதுவும் உண்மையாகலாம்.


இதுவரை, நான் புரிய வைத்தது நிச்சயம் உங்களுக்குப் புரிந்திருக்குமென்றே நினைக்கிறேன். உங்களுக்கு இது புரியவில்கையென்றால், புரிய வைக்க முடியாமல் போன என் தவறுதான். உங்கள் தவறு அல்ல.


'இந்த உண்மை மட்டுமல்ல, எந்த உண்மையும் உண்மை அல்ல"


1 comment:

  1. Impressed on your writings. I learnt a lot from your writings.

    ReplyDelete