வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

February 9, 2016

உண்மையெல்லாம் உண்மையல்ல - 1

நாம் இதுதான் உண்மையென்று நினைத்துக்கொண்டிருக்கும் எதுவுமே உண்மையில்லை என்பதுதான் மிகபெரிய உண்மை. 


இப்போது சொன்ன கருத்தும், சிலசமயங்களில் உண்மையில்லாமல் போய்விடலாம்.


உண்மைகள், உண்மைகளில்லை என்பதுபற்றி நான் இதற்கு முன்னரும் பல தகவல்களில் எழுதியிருக்கிறேன். அதுபோன்ற ஒன்று இப்போதும் உங்களுக்காக....


நமது பூமியானது, நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருவதாகவும், சூரியனை அது ஒரு சுற்றுச் சுற்றி மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பி வருவதற்கு 365.25 நாட்கள் எடுக்கிறது என்றும் நம்பி வருகிறோம். ஆனால் இந்தக் இவை எவையும் உண்மையில்லை என்கிறது நவீன அறிவியல்.


பூமி சூரியனைச் சுற்றுகிறதோ இல்லையோ, உங்கள் தலை இப்போ சுற்றுகிறதல்லவா?


சரி, சுற்றும் தலையை நிறுத்தலாம் வாருங்கள்.


பூமி தன்னைத்தானே மணிக்கு 1600 கிலோமீட்டர்களுக்கு அதிகமான வேகத்தில் சுற்றுவதோடு, சூரியனையும் கிட்டத்தட்ட மணிக்கு 100 000 கிலோமீட்டர்கள் வேகத்தில் சுற்றிக்கொண்டு வருகிறது. இந்தச் செயலில், சூரியன் ஒரு நிலையான இடத்தில் இருந்தால் மட்டுமே, பூமி ஒரு நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவருகிறது என்றெடுக்கலாம். ஆனால், சூரியன் நிலையாக ஒரு இடத்தில் இருப்பதில்லை. அதுவும் மணிக்கு 800 000 கிலோமீட்டர்கள் வேகத்தில் பால்வெளி மண்டலத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதிவேகம் அது. ஓடிக்கொண்டே இருக்கும் சூரியனைப் பூமி எப்படி ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்ற முடியும்? புரியாவிட்டால் இதை ஒரு உதாரணத்தின் மூலம் பார்க்கலாம்.





நீங்கள் ஒரு மைதானத்தில் மெதுவாக நேர்கோட்டில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் பலமுறைகள் சுற்றியபடி, உங்கள் மகள் ஓடி வந்துகொண்டிருக்கிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மைதானத்தைப் பொறுத்தவரை உங்கள் மகள் ஓடிவந்த பாதை, ஒரு 'சுருள்கம்பி' (Spring) வடிவத்தில் இருக்கும். இதுபோலத்தான் பூமியின் சுற்றுப்பாதையும் கம்பிச்சுருள் வடிவத்தில் இருக்குமேயல்லாமல், நீள்வட்டப்பாதையில் இருக்காது.


இந்தப் பேரண்டவெளியில், நாம் இந்த நொடியில் இருக்கும் இடத்துக்கு இனி எப்போதும் மீண்டும் வரவே மாட்டோம். நாம் மட்டுமல்ல, பூமியும், சூரியனும் அதிகம் ஏன், இந்தப் பால்வெளி மண்டலம்கூட, இந்த நொடியில் இருக்கும் இடத்திற்குத் திரும்பி வரவே போவதில்லை. அவ்வளவு விசேசம் வாய்ந்தது இந்த நொடியும், நீங்கள் இருக்கும் அமைவும். எல்லாமே அதி வேகத்தில் தங்கள் இடங்களை நீங்கி ஓடிக்கொண்டே இருக்கின்றன.


"வானத்தில் ஒவ்வொரு நாள் இரவும் பார்க்கும்போது, அதே நட்சத்திரங்களைற்றானே பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அப்படியென்றால் ஒரே இடத்தில்தானே இருக்கிறோம்" என்று இப்போது நீங்கள் யோசிக்கலாம். அது அப்படியல்ல. நீங்கள் வாழ்ந்த இவ்வளவு வருடங்களில் மட்டுமல்ல, பூமியின் பல ஆயிரம் வருடங்களில், பூமி பல கோடி கிலோமீட்டர்கள் தூரம் நகர்ந்திருந்தாலும், அண்டவெளியின் பிரமாண்டத்துடனும், நட்சத்திரங்களின் தூரங்களுடனும் ஒப்பிடும்போது, அது ஒன்றுமேயில்லை என்பதுதான் நிஜம். அண்டவெளியின் பிரமாண்டமான அமைப்புடன் ஒப்பீட்டளவில் பார்த்தால் ஒரு செமீ அளவு தூரத்தைக்கூடக் கடந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. அதனால்தான் நாம் சிறிய வயதில் பார்த்த நட்சத்திரங்கள் இன்றும் அதே இடத்தில் இருப்பதுபோலத் தெரிகிறது. நிஜத்தில் நாம் நம்பவே முடியாத தூரத்தைக் கடந்து வந்துவிட்டோம்.


என்ன புரிகிறதா?


அடுத்த தகவல் உண்மையின் நம்பகத்தன்மையை விமர்சிக்கும் வேறொரு தளத்தில் இருக்கும். இரண்டையும் ஒன்றாகத் தரவே இருந்தேன். பதிவு நீண்டுவிட்டதால்.....


No comments:

Post a Comment