வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

November 29, 2015

நிழல் செய்யும் மாயை



இயற்பியல் விதிகளின்படி ஒளியின் வேகத்தை விட அதிக வேகமாக எதுவுமே நகரமுடியாது என்பது இன்று உள்ள முடிவு. ஆனால் நான் இப்போது சொல்லப் போவதைப் படித்துப் பாருங்கள். கொஞ்சம் தலையைச் சுற்றும். கொஞ்சம் ஏமாற்றுவது போலத் தோன்றும். ஆனாலும் புரிகிறதாவென்று பாருங்கள்.

ஒளி, ஒரு பொருளில் படும்போது அந்தப் பொருளின் நிழல் நிலத்திலோ, சுவரிலோ விழுகிறது. சரி இப்படி வைத்துக் கொள்ளுங்கள். சூரிய ஒளி உங்களின் மேல் படும்போது, உங்கள் நிழல் நிலத்தில் விழுகிறது. சூரிய ஒளி உங்கள் உடலில் பட்ட அந்தக் கணத்திலேயே நிழலும் நிலத்தில் தோன்றிவிடுகிறது. சூரிய ஒளி மறையும் அந்தக் கணத்தில் நிழலும் இல்லாமல் போய்விடும். இதிலிருந்து, ‘ஒளி என்ன வேகத்தில் பயணம் செய்கிறதோ, அதே வேகத்தில் நிழலும் பயணம் செய்கிறது’ என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.




இப்போது, நான் சொல்லப் போகும் இந்தக் கேள்வி அல்லது சந்தேகம், உங்கள் மனதில் தோன்றியிருந்தால், நீங்கள் இயற்பியலில் அல்லது அறிவியலில் வல்லமையுள்ளவராக இருப்பவர் என்று அர்த்தம் கொள்ளலாம். வரவில்லையென்றாலும் பரவாயில்லை. அதுதான் இப்போது தெரிந்துவிடப் போகிறதே! அந்தக் கேள்வி இதுதான். ஃபோட்டான் என்னும் சிறு துகள்கள் பயணம் செய்வதைத்தான் நாம் ஒளி என்கிறோம். அதாவது ஒளிக்குப் பயணம் செய்வதற்குரிய துகள்கள் இருக்கின்றன. ஆனால் நிழல் என்பது ஒளியில்லாத இடம்தானே! அதாவது பயணம் செய்யப் ஃபோட்டான்களோ, வேறு எதுவோ இல்லாத ஒன்று அது. ஒன்றுமேயில்லாத ஒன்று எப்படி நகர முடியுமா? அப்படியென்றால், நிழலுக்கு எப்படி வேகம் இருக்க முடியும்?”

உண்மையைச் சொல்லுங்கள், இந்தக் கேள்வி உங்கள் மனதில் தோன்றியதா? ஆம் என்றால், உங்கள் தோளில் நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். சரி விசயத்துக்கு வரலாம். நிழலுக்கு வேகம் உண்டா என்று கேட்டால், ஒளி நகரும் வேகத்தில் நிழலும் நகர்வதை நாம் கண்கொண்டு பார்க்கிறோம். இதை ஒரு மாயையென்று நாம் சொல்லப் போகிறோமா? பலரிடம் ஒரு கருத்து உண்டு. இருட்டு என்ற ஒன்று இல்லை. ‘ஒளி இல்லாத இடம்தான் இருட்டு’ என்பார்கள். ஆனால், இந்தக் கூற்றுத் தவறானது. பிரபஞ்சத்தில் ஆரம்பத்தில் இருந்தது இருள்தான். அதன் பின்னர்தான் ஒளியே தோன்றியது. இப்போதும் கூட, பிரபஞ்சத்தின் 95 சதவீதமான பகுதி இருட்டுத்தான். மத வேதங்களும் இதையே வலியுறுத்துகின்றன. ஒளி வருவதற்கு முன்னரே இருப்பது இருட்டு என்றால், ஒளி இல்லாத இடம்தான் இருட்டு என்னும் கருத்துத் தவறுதானே! சரி, நாம் எங்கேயோ வந்துவிட்டோம்.

நுண் துகள்கள் எதுவும் இல்லாமல், ஒன்றும் நகர முடியாது என்னும் கருத்தை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டுப் பார்ப்போம். இப்போது, ஒளி நகரும் வேகத்தில்தான் நிழலும் நகருகிறது என்பது கண்களால் நாம் புரிந்து கொள்ளும் ஒரு செயலாகத் தெரிகிறது. அதாவது ஒளி ஒரு செக்கனுக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்தால், நிழலும் மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் செக்கனுக்குப் பயணம் செய்கிறது. என்ன சரிதானே!

இதிலிருந்து ஒளியைவிட, நிழல் சற்றே வேகமாகப் பயணம் செய்கிறது என்று எடுக்கலாமா? அதாவது இயற்பியல் விதி மீறப்படுகிறது. இல்லை இதுவும் மாயைதானா?

நிழலும், ஒளியும் ஒரே வேகத்தில் நகர்கின்றன அல்லவா? இயற்பியல் விதி என்ன சொல்கிறது, ஒளியின் வேகத்தை மிஞ்சி எதுவும் நகரவே முடியாது. என்றல்லவா?. நிழலும் ஒளியின் வேகத்தை மிஞ்சிவிடவில்லை. இப்போது, நான் சொல்லப் போவதைக் கவனியுங்கள். ஒளி எப்போதும் உங்கள் மேல் பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் மாறவில்லை. ஆனால், உங்கள் நிழல் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. ஒளி படும் அதே கணத்தில் நிழல் தோன்றி, அந்த நிழல் பெரிதாக வேண்டுமென்றால், அது ஒளியைவிடச் சற்றே வேகமாக நகர்ந்திருக்க வேண்டுமல்லவா? என்ன, நான் சொல்வது புரிகிறதா? உங்கள் சிறிய உருவத்தை ஒளி நிரப்பும் நேரத்தை விட, உங்கள் உருவத்தைப் போல இருமடங்கு பெரிதான நிழலை நிரப்ப, அது ஒளியைவிட வேகமாக நகர்ந்திருக்க வேண்டுமல்லவா?

-ராஜ்சிவா-


4 comments:

  1. நிழல் எவ்வாறு தோன்றுகிறது என்று பார்த்தோமானால் ,, ஒளி செல்லும் பாதையில் வைக்கப்பட்ட பொருளினால் ஒளி ஊடுருவ அனுமதிகபடுவதில்லை அதே நேரம் அந்த பொருளின் வெளிப்புறத்தின் அருகாமையில் செல்லும் ஒளி திரையில் விழும் ,, ஒளி போகாத இடம் இருளாகவும் மற்றைய இடங்கள் வெளிச்சமாகவும் திரையில் விழும் இதனால் அந்த பொருளின் வடிவம் திரையில் தோன்றுகிறது , ஆகவே நிழல் தோன்ற காரணம் பொருளின் ஓரத்துக்கு அருகாமையில் செல்லும் கதிர்கள் திரையில் அதன் வடிவத்தை ஏற்படுத்துவதால் ஆகும் .. பொருளின் ஓரங்களில் செல்லும் ஒளி இல்லாவிடில் நிழல் என்ற ஒன்று இருக்காது .. நிழல் என்பது ஒரு மின்காந்த அலை அல்ல எந்தவொரு அலைதுகளும் அல்ல ... ஒளி மின்காந்த அலை .. இரண்டையும் ஒப்பிட முடியாது ..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,

      திரு கபிலன் அவர்களே நீங்கள் கூறியதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் அதில் சிறு சந்தேகம் பொருளினுள் ஒளி புகாத போது அதன் பிம்பம் அதாவது நிழல் தோன்றுகிறதல்லவா அந்த நிழலின் அளவு பொருளின் அளவை ஒத்து இருக்க வேண்டும் மாறாக அந்த பொருளின் அளவை காட்டிலும் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கும் பொழுது என்ன நிகழ்கிறது ?

      அது மட்டும் அல்லாது ஒரு பொருளின் நிழல் மற்றோரு பொருளின் மீது விழுகிறது என்று வைத்து கொள்ளுங்கள் அவ்வாறு விழுந்த பிம்பத்தின் மீது கூட ஒளியினால் புக முடியாது ஏன் ?

      இந்த இரண்டு சூழலிலும் ஒளிக்கதிர்கள் பொருளின் நிழலில் உள்ள வெற்றிடத்தை அழுத்த முற்படுகிறது { உ தா : எவ்வாறு காற்று வெற்றிடத்தை அதிவேகமாக நிரப்புகிறது அது போன்று }

      இதே நிகழ்வு தான் நமது உடலிலும் நிகழ்கிறது - { நிழல் = இருட்டு } ஆதியும், அந்தமும் , இந்த பிரபஜத்தின் மூலக்கூறாகிய கருப்பு துளையும், நமது உடலின் சூக்கும சரீரத்தில் உள்ள கருமையம் ஆகியவை அனைத்துமே வெற்றிடமாகிய இருள் தான். இதன் பரிணாம வளர்ச்சி தான் ஒளி .

      இதை உங்களுக்குள் உற்று கவனித்தால் உண்மை விளங்கும் ..

      இதற்குரிய உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும்.

      Delete
  2. ஒளி மூலத்தில் இருந்து ஒளிக்கதிர் எல்லா திசைகளை நோக்கியும் பாய்கிறது. அவ்வாறு பாயும் ஒளிக்கதிர்களின் பாதையை தடுக்கும் (அதாவது ஒளிஊடுருவாத) பொருள் நிழலை ( பிம்பம்) உருவாக்குகிறது. அந்த நிழலின் அளவானது (Size), ஒளி மூலத்தில் இருந்து வெளிவரும் வெவ்வேறு கோணங்களில் பயணிக்கும் கதிர்களின் திசையைப் பொருத்தது. அதாவது நேரான ஒளிக்கதிரைவிட சாய்வான அல்லது பரவலான கோணத்தில் பயணிக்கும் கதிர்களினால் உருவாகும் நிழல் பரவலாக /குறுகலாக அல்லது பெரிதாக / சிறிதாக அமையும். எனவே நிழலின் அளவு என்பது ஒளி அல்லது நிழல் பயணிக்கும் வேகம் அல்ல. எவ்வளவு ஒளி தடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமையும். ஒளி தடுக்கப்படும் அளவு என்பது ஒளி மூலத்திற்கும் தடுக்கும் பொருளுக்கும் இடைப்பட்ட தூரம் மற்றும் கதிர்களின் அளவு (எண்ணிக்கை ) பொருத்தது. உதாரணமாக ஒரு அறையில் எரியும் மெழுகு வர்த்தியின் மிக அருகில் சென்று நின்றால் சுவறில் மிகப் பெரிய நிழல் தோன்றும் . காரணம் அருகில் நிற்கையில் ஒளி மூலத்தில் ( மெழுகு வர்த்தி) இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களில் அதிக எண்ணிக்கையிலான கதிர்கள் தடுக்கப்படுகின்றன. ஆனால் தொலைவில் நின்றால் தடைபடும் ஒளிக்கதிர்களின் எண்ணிக்கை அல்லது அளவு குறைவதால் நிழலின் அளவு (Size) குறைகிறது. எனவே நிழல் பயணிப்பதே இல்லை. ஒளி தடுக்கப்படுகிறது என்பதே உண்மை.

    ReplyDelete
  3. அருமையான சிந்தனை. ஆனால் இது 1 equals to 2 என்று கணக்கு புலிகள் சில பேர் நிரூபிப்பார்கள். இதில் அதுபோன்று ஒரு trick ஒளிந்துகொண்டு ஒளிர்வதுபோல் தோற்றம் தருகிறது.
    ஒரு பொருளை கணிப்பதற்கு காலம் தூரம் வேகம் பருமன் நான்கும் வேண்டும். நிழலுக்கு பருமன் உண்டா? வேகம் ஒளியை சார்ந்தது. காலமும் அவ்வாறே. தூரமும் காலமும் ஒன்றே. நிழல் விழுவதற்கு ஒளி ஒரு பொருள் மீது படவேண்டும். அவ்வாறு பார்த்தால் ஒளியையும் அது படவேண்டிய பொருளையும் சம வேகத்தில் பயனிக்கச்செய்யவேண்டும்.அப்போதுதான் உங்கள் தியரி prove ஆகும்.
    ஆனால் ஒன்னு. கட்டுரை நிழலைப் பற்றி நிறைய சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. நன்றி.

    ReplyDelete