வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

May 20, 2016

அண்டமும் குவாண்டமும் - பகுதி 2

கடந்த பகுதியில் சிலர் கேட்டிருந்த கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்காமல், நான் அடுத்துச் செல்வதில் அர்த்தமேயில்லை. குவாண்டம் இயற்பியலைப் பிரமிப்புடனும், அந்நியமாகவும் பலர் பார்ப்பதற்குக் காரணம், அதன் விளங்காத்தன்மைதான். 'இவர்கள் ஏதோ சொல்கிறார்கள். அது எனக்குப் புரியவில்லை ஆனால் பிரமிப்பாக இருக்கிறது, அதனால் அது நிச்சயம் பெரியதொரு விசயமாகத்தான் இருக்கவேண்டும்’ என்று ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு விலகிக்கொள்கிறர்கள். இனி அந்தப் பிரமிப்பும், விளக்கமின்மையும் தமிழர்களுக்குக் குறைந்தபட்சமாவது இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில், என்னால் முடிந்தளவுக்கு, குவாண்டம் இயற்பியலைத் தமிழில் சொல்லிப் புரியவைக்க முயற்சி செய்கிறேன். அதனால், படிப்பவர்களுக்கு எந்தச் சந்தேகம் ஏற்பட்டாலும், அவற்றை முதலில் சரி செய்துவிட்டு மேலே தொடரவேண்டும்.

திரு.பொன்முடி வடிவேல் அவர்கள் ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

‘பெருவெடிப்பின்போது (Big Bang) அண்டமானது பிளாங்க் நேரம் (Planck Time) என்னும் குறுகிய கணத்தில் விரிவடைந்திருந்தால், அது பிளாங்க் அளவுதான் (Planck Length) விரிவடைந்திருந்திருக்க முடியும்? பெரிய அளவில் அண்டமாக விரிவடைந்திருக்க முடியாது’ என்பதுதான் அந்தக் கேள்வி. அவரின் கேள்விக்கு அடிப்படையாக இருப்பது, ஒளியின் வேகம். அதாவது, ஒளியைவிட அதிக வேகத்தில் எதுவும் நகர முடியாதென்று இயற்பியல் சொல்கிறது. அப்படியெனில், அண்டம் ஒளியின் வேகத்தில் விரிவடைந்திருந்தால், பிளாங்க் அளவுதான் அதன் விரிவு இருக்கும்.


அவரது கேள்வி மிகச்சரியானதுதான். அதற்கான விளக்கத்தை முதலில் நாம் பார்க்கலாம். விளக்கம் சற்றே பெரிதாகத்தான் இருக்கும். ஆனாலும், நமக்கு நிறைய நேரம் இருக்கிறதே! விளக்கமாகப் பார்ப்போம்.


‘பிக்பாங்’ பெருவெடிப்பிற்கு முன்னர், அண்டம் மிகச்சிறியதொரு புள்ளியாகத்தான் இருந்தது. அந்தப் புள்ளியை, ‘ஒருமைப் புள்ளி’ (Singularity) என்பார்கள். அந்த ‘ஒருமைப் புள்ளி’ வெடித்துச் சிதறியதால் பேரண்டம் உருவாகியது. ஆனால், நிஜத்தில் அங்கு நடந்தது ஒரு வெடிப்பேயல்ல. அதைப் பெருவிரிவு (Expansion) என்பார்கள். திடீரென ஏற்பட்ட ஒரு விரிவு. அவ்வளவுதான். ஒரு பிளாங்க் நேரத்தில் அண்டமாக மாறிவிட்ட ஆச்சரிய விரிவு. அந்த விரிவு, ஒளியின் வேகத்தில் நடைபெற்றிருக்கவில்லை. அதைவிட அதி… அதி… அதிவேகத்தில் நடந்திருந்தது. சொல்லப் போனால், அதை வேகம் என்றே சொல்ல முடியாது. சிங்குலாரிட்டி என்பது, வேகம், நேரம், தூரம் என்று எதுவுமேயில்லாத சூனியக் கணம். ‘அந்த விரிவு ஏற்படுவதற்கு முன்னர் என்ன நடந்தது?” என்னும் கேள்வி இன்றும் பலரால் கேட்கப்படுகிறது. இந்தக் கேள்வி உங்களுக்கும்கூட இருக்கலாம். மனிதனால் கற்பனை செய்து பார்த்துக்கொள்ள முடியாத ஒரு நிலை.

நான் இப்போது சொல்லப் போவதை, உங்கள் அனுபவத்தில் நடந்த எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்கமல், வெற்றுக் காகிதம் போலிருந்து சிந்தித்துப் பாருங்கள்.


‘பிக்பாங்’ என்னும் பெருவிரிவு நடக்கும் கணத்துக்கு முன்னர் நேரம் என்பது கிடையாது. அது ஒரு மிகச்சிறிய புள்ளியாக இருந்ததால், அங்கு தூரமும் கிடையாது. நேரமும், தூரமும் இல்லாத இடத்தில் வேகமும் இல்லை. எப்போது வெருவிரிவு நடந்ததோ, அந்தக் கணத்திலிருந்துதான் நேரம், தூரமென்பவையே ஆரம்பமாகின. நேரம், தூரம் இல்லாமல் இருபதை உங்களால் கற்பனைசெய்து பார்க்க முடியாது. காரணம், நீங்கள் எதைக் கற்பனை செய்வதானாலும், அது உங்கள் வாழ்வில் நடந்த சம்பவம், அடைந்த அனுபவம், கண்ட காட்சிகள் மற்றும் பொருட்கள் சார்ந்தவையாகவே இருக்க முடியும். அதனால், நீங்கள் அறிந்தேயிருக்காத, நேரம், தூரம் அற்ற ஒரு நிலையைக் கற்பனை செய்யமுடியாது. இதை ஐன்ஸ்டைன் இப்படி விளக்கினார். “பூமியின் வடதுருவத்திற்கு, வடக்காக என்ன இருக்கிறது என்று கேட்டால், என்ன பதில் உங்களிடம் இருக்குமோ, அது போன்றதொரு பதில்தான் இங்கும் இருக்கும்” என்றார்.


பிக்பாங்குக்கு முன்னர் என்னவென்ற குழப்பத்திற்குப் பதிலாக வேறுசில கோட்பாடுகளும் சொல்லப்படுவதுண்டு.


‘நம் அண்டத்தில் பிக்பாங் என்ற ஒன்றே நிகழவில்லை’ என்பது அதில் ஒன்று.


‘அண்டம் உருவாகவில்லை, அது எப்போதும் இருந்துகொண்டேயிருக்கிறது’ என்பது இன்னொன்று.


‘நம் அண்டம் ஒன்றல்ல, பல. எண்ணிலடங்காத முடிவிலி எண்ணிக்கையில் அண்டங்கள் இருக்கின்றன. அதாவது, ‘ஓரண்டம்’ (Universe) என்பது இல்லை. ‘பல அண்டங்கள்’ (Multiverse) தான். பல அண்டங்களில், ஒவ்வொரு அண்டமும் நீர்க்குமிழிகள்போல அடுத்தடுத்து சேர்ந்திருக்கின்றன. அவை ’மென்சவ்வுகளினால்’ (Membrane) பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதை நீங்கள் இப்படிக் கற்பனைசெய்து பார்க்கலாம். சின்ன வயதில் சோப்பினால் செய்த குமிழிகளை உருவாக்கி விளையாடியிருப்பீர்கள் அல்லவா? அப்படி விளையாடும்போது, இரண்டு சோப் குமிழிகள் ஒன்றாகச் சேர்ந்து மெல்லிய சோப்பின் சவ்வினால் பிரிக்கப்பட்டிருக்குமல்லவா? அதுபோலக் கோடானகோடி அண்டங்கள் முடிவில்லாத் தொகையுடன் ஒட்டியிருக்கின்றன.




இதை இன்னுமொரு விதமாகப் பாருங்கள். பிக்பாங் விரிவு 13.8 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நடந்ததாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால், பிக்பாங் புள்ளியிலிருந்து அண்டத்தின் ஒரு எல்லைவரை 13.8 பில்லியன் ஒளியாண்டுகள் அளவு இருக்க வேண்டும். அண்டம், பிக்பாங் மையப் புள்ளியிலிருந்து வட்டமாக விரிந்தது என்று எடுத்துக் கொண்டால், இருபக்க எல்லைகள் 27.6 பில்லியன் ஒளியாண்டுகள் அளவாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் அண்டம் மையத்திலிருந்து ஒருபக்க எல்லைவரை 46 பில்லியன் ஒளியாண்டுகள் பெரிதாக இருக்கிறது. ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரை 92 பில்லியன் ஒளியாண்டுகள் விரிவடைந்திருக்கிறது. இந்தக் கணிப்புக்கூட, நம்மால் அதுவரைதான் பார்க்க முடிகிறது என்பதை வைத்துத்தான். அதன் விரிவு அதற்கும் மேலே. இவ்வளவு பெரியதாக அண்டம் விரிவடைந்திருக்க வேண்டுமென்றால், ஒளியின் வேகத்தைவிட மிகஅதிகமான வேகத்தில் அது விரிவடைந்திருக்க வேண்டும். அதனால்தான் விஞ்ஞானிகள், “அண்டத்தில் ஒரு படிநிலையிலும், குவாண்டத்தின் ஒரு படிநிலையிலும், இயற்பியலின் எந்த விதிகளும் பொருந்திவராது” என்பார்கள்.


பதில்களுக்கான விளக்கத்தை அடுத்த பதிவிலும் தொடர்ந்து பார்க்கலாம்.


-ராஜ்சிவா-


1 comment:

  1. very good post. really happy to read. in this great moment i have to share an information to you. there are lots of people reads your blog now. i shared the posts to them via whatsapp and via mail. all the best. continue writing. we support you alwayd

    ReplyDelete