வாசகர்களுக்கு........... நான் எழுதிய ” இறந்தபின்னும் இருக்கிறோமா?”, ”நிலவில் ஒருவன்” ஆகிய இரண்டு நூல்களும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நூல்களை வாங்க விரும்பும் வாசகர்கள் உயிர்மை பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளவும்.

content protection

March 12, 2015

நியூட்ரீனோ (Neutrino) என்னும் பிசாசு - பகுதி 6




நம்மையறியாமலே மிகவும் ஆச்சரியமான விந்தையொன்றை ஒவ்வொரு செக்கனும் நாம் சந்தித்தபடி இருந்தாலும், அதைச் சரியாக உணர்ந்துகொள்ளாமல், எந்த எதிர்வினையுமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தப் பேரண்டத்திலேயே மிகப்பழமையானதும், எந்த நொடியில் பேரண்டம் தோன்றியதோ, அந்த நொடியிலேயே தோன்றியதுமான பல நியூட்ரீனோக்களை, நாம் ஒவ்வொரு நொடியும் தொட்டுக்கொண்டிருக்கிறோம். அதாவது 13.7 பில்லியன் ஆண்டுகள் புராதனமான ஒரு துகள், இப்போது உங்கள் அருகிலேயே இருப்பது மட்டுமில்லாமல், உடலினூடாக ஊடுருவிச் சென்றுகொண்டுமிருக்கின்றன. இவ்வளவு பழமையான வேறு எதுவும் நம்முடன் தொடர்பில் இருப்பதில்லை. இது ஒரு மிகப்பெரிய ஆச்சரியமான செயல் அல்லவா? 


இயற்கையாகவே நியூட்ரீனோக்கள் பல வழிகளில் உருவாகி நம்மை வந்தடைகின்றன. அதில் ஒன்றுதான் ‘பிக்பாங்' பெருவெடிப்பின்போது உருவான நியூட்ரீனோக்கள். இன்றும் இப்போதும் அவை உங்கள் கூடவே இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல், விண்வெளியில் வெடித்துச் சிதறும் சுப்பர் நோவாக்கள், நியூட்ரான் நட்சத்திரங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றிலிருந்தும வரும் நியூட் ரீனோக்களும் பெருமளவில் நம்மை வந்தடைகின்றன. அதைவிடப் பேரளவில் நியூட்ரீனோக்களை நம்மை நோக்கி அனுப்பிக் கொண்டிருப்பது சூரியன்தான். 


"அப்படியென்றால் செயற்கையாக நாம் நியூட்ரீனோக்களை உருவாக்கவே முடியாதா?” என்று கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். “முடியும், வெகுசுலபமாக முடியும்”. ஒவ்வொரு அணுவின் கருச்சிதைவின்போதும் நியூட்ரீனோக்கள் வெளிவந்தபடியேதான் இருக்கின்றன. அணுகுண்டுகள், அணுஉலைகளில் கூட நியூட்ரீனோக்கள் உருவாகின்றன. முன்னர் நான் 'வோல்ஃகாங் பவுலி' என்னும் ஆஸ்த்திரிய விஞ்ஞானி பற்றிச் சொல்லியிருந்தேனல்லவா? அவர்தான் 1930ம் ஆண்டளவில் நியூட்ரீனோவைப் பற்றிக் கூறியிருந்தார். அவர்கூட அணுக்கருச் சிதைவொன்றின்போது வெளிவரும் எலெக்ட்ரான்களின் சக்தியை அளவிட்டபோது, அவர் எதிர்பார்த்த அளவு சக்தி அங்கே வெளிவரவில்லை. அணுச்சிதைவின்போது எலெக்ட்ரான்கள் வெளிவருவதையே 'பீட்டா டீகே’ (Beta Decay) என்பார்கள்.


இயற்பியல் விதிகளின்படி, ஒரு சக்தியை இல்லாமல் அழிக்க முடியாது. ஒரு சக்தியை இன்னுமொரு சக்தியாக மாற்ற முடியுமேயொழிய அழிக்க முடியாது. ஆனால் பவுலி செய்த ஆராய்சியில் வெளிவந்த எலெக்ட்ரான்களின் சக்தியின் அளவு, அதற்கு முன்னரிருந்த சக்தியின் அளவுக்குச் சமமாக இருக்கவில்லை. குறைவாகவே இருந்தது. அதனால்தான் ஏதோவொரு வழியாக எஞ்சிய சக்தி வெளியே போகிறது என்பதைப் புரிந்து கொண்டார் பவுலி. சந்தடியே இல்லாமல் சக்தியை வெளிக்கொண்டு சென்ற துகளுக்கு, பிசாசுத் துகளென்று பெயரிடப்பட்டது. ஆனால் பல ஆண்டு காலங்களாக அதைக் கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் திணறினார்கள்.


1950ம் ஆண்டளவில், பவுலி கூறியதை நிரூபிக்கும் விதமாக ஒரு பரிசோதனையொன்றை நடத்த ‘பிரெடெரிக் ரைனெஸ்’(Frederick Reines) என்பவர் முயற்சித்தார். அணுகுண்டு ஒன்றை வெடிக்கப்பண்ணுவதால் ஏற்படுத்தப்படும் சங்லித்தொடர் விளைவால் (Chain Reaction) உருவாகும் நியூட்ரீனோகளைக் கைப்பற்றலாமென அவர் நம்பினார். அணுகுண்டொன்று வெடிப்பதனால் உருவாகும் சக்திவெளிப்பாட்டுடன் 10000000000000 நியூட்ரீனோக்கள் ஒரு செக்கனில் வெளிவரும். இதை ஆராய்ந்து பார்க்க ரைனெஸ் முடிவுசெய்தார். அந்த ஆராய்ச்சிக்கு ‘போல்டர்கைஸ்ட் திட்டம்’ (Project Poltergeist) என்றும் பெயரிட்டார். போல்டர்கைஸ்ட் என்றால் வீட்டில் குடியிருக்கும் ஒருவகை ஆவி.


இங்கும் ரைனெஸுக்கு பிரச்சனை காத்திருந்தது. நியூட்ரீனோவைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அதற்கு நேர் மின்னேற்றமோ (+), எதிர் மின்னேற்றமோ (-) இருக்க வேண்டும். இல்லையேல் திணிவு (Mass) இருக்க வேண்டும். ஆனால் இவையிரண்டும் நியூட்ரீனோக்களுக்கு இல்லையென்ற முடிவு இருந்தது. அப்படியென்றால் எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? ஆனால் ரைனெஸ், நியூட்ரீனோவின் விசேசக் குணத்தைப்பற்றி அறிந்திருந்தார். அதாவது, மிக அரிதான சமயங்களில் எப்போதாவது நேரேற்றமுடைய (+) புரோட்டான்களுள்ள அணுக்கருவுடன் நியூட்ரீனோக்கள் மோதி, அணுக்கருவில் மாற்றம் செய்வதோடு, ஒரு எதிர் எலெக்ட்ரானையும் வெளிவிடுகிறது. இதை 'Double pulse energy' என்பார்கள். இதைவைத்து நியூட்ரீனோக்களை நேரடியாக இல்லாமல் மறைமுக வழியில், ஆஸிலோஸ்கோப் மூலமாகக் ரைனெஸ் கண்டுபிடித்தார். இது நடந்தது 14ம் தேதி ஜூன் மாதம் 1956ம் ஆண்டு. பிரெடெரிக் ரைனெஸுக்கு நியூட்ரீனோவை இனம் கண்டதற்கான இயற்பியலுக்குரிய நோபல் பரிசு 1995ம் ஆண்டு கிடைத்தது.


இப்போது நான் கொஞ்சம் சிக்கலான ஒரு விசயத்தைச் சொல்லவேண்டும். இந்தப் பேரண்டத்திலிருக்கும் அனைத்தும் உபஅணுத்துகள்களாலானவை. உபஅணுத்துகள்களின் கட்டமைப்புகளே, நம் கண்ணால் காண்பதும், காணாததுமான பொருட்களாகியிருக்கின்றன. உபஅணுத்துகள்களின் வகைகள் அண்டத்தில் ஏராளமாக இருக்கின்றன. இதில் என்ன விசேசமென்றால், ஒவ்வொரு உபஅணுத்துகளுக்கும் எதிரான துகள்கள் இருக்கின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அவற்றை எதிர்த் துகள்களென்கிறார்கள் (Anti Particles). உதாரணமாக electron இன் எதிர்த்துகளை anti electron என்பார்கள். இதுபோல, anti proton, anti neutron ஆகியவையும் உண்டு. எலெக்ட்ரானின் எதிர்த்துகளை ‘பொசிட்ரான்' (Positron) என்ற விசேசப் பெயரிலும் சொல்வார்கள். எலெக்ட்ரான் எதிர்மின்னேற்றத்தைக் (-) கொண்டது என்பது உங்களுக்குத் தெரியும். அதேபோல, பொசிட்ரான் நேர்மின்னேற்றத்தைக் (+) கொண்டது. இந்த வகையில் நியூட்ரீனோக்களுக்கும் எதிரான நியூட்ரீனோக்கள் உண்டு. 


நியூட்ரீனோக்களின் எதிர்த்துகளை anti neutrino என்பார்கள். நான் முன்னரே சொல்லியிருந்தேன், நியூட்ரீனோக்களில் எலெக்ட்ரான் நியூட்ரீனோ, மியூவான் நியூட்ரீனோ, டாவ் நியூட்ரீனோ என்னும் மூன்று வகைகள் இருக்கின்றன. இந்த மூன்று நியூட்ரீனோ வகைகளுக்கும் எதிர்த்துகள்களாக electron antineutrino, muon antineutrino, tau antineutrino என்பவை இருக்கின்றன. இதன்படி இதுவரை நமக்குத் தெரிந்த நியூட்ரீனோக்கள் ஆறு வகைகளில் பிரிக்கப்படுகின்றன. உண்மையில் இவை மூன்று வகைகளாக இருந்தாலும், அவற்றின் எதிர்த்தன்மைகளை வைத்து ஆறாகக் கருதப்படுகின்றன.


- தொடரும்


March 6, 2015

நியூட்ரீனோ (Neutrino) என்னும் பிசாசு - பகுதி 5




நியூட்ரீனோக்களைக் கைப்பற்றுவது சாத்தியமேயில்லாத ஒன்றாக இருக்கும்போது, அதை எப்படித் தமிழ்நாட்டில் ஆய்வகம் அமைத்துக் கைப்பற்றப் போகிறார்கள்? என்ற கேள்வி இப்போது நமக்கு வருகிறது. அல்ஃபா செண்டௌரி நட்சத்திரம் செல்லும் தூர அளவு ஈயத்துக்கு நாம் எங்கே போவது? ஆனாலும், நியூட்ரீனோக்களைக் கைப்பற்றுவதென்றில்லாமல், அவற்றைக் கண்டுகொள்ளச் சில வழிகள் உண்டு. அதற்கு அடர்த்தியான பாறைகளுள்ள மலைகள் வேண்டும். அதுவும் மிகப்பழமையானதும், அடர்த்தியுள்ளதுமான, ‘சார்னோக்கைட்’ (Charnockite) கனிமவகைக் கற்களையுடைய மலைகளே நியூட்ரீனோக்களைக் கண்டுகொள்ளத் தேவையானவை. அந்த வகைக் கனிமம் உள்ள மலைகளின் கீழே ஒரு கிலோமீட்டருக்கு அதிகமான ஆழத்தில் சுரங்கங்கள் அமைத்து, அங்கு நியூட்ரீனோக்களை இனம் காணும் கருவிகளைப் பொருத்த வேண்டும். "அதுசரி, மலைகள் இங்கெதற்கு, சாதாரண நிலத்தின் கீழ் ஏன் சுரங்கம் அமைக்கக் கூடாது?" என்று நீங்கள் கேட்கலாம். சொல்கிறேன்.

பூமியின் மேல்பகுதியில் நியூட்ரீனோக்கள் பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்யலாம். அதிலொன்றும் சிரமமில்லை. ஆனால், விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் காஸ்மிக் கதிர்களையும், நியூட்ரீனோக்களையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. நியூட்ரீனோக்கள் சென்று கொண்டிருக்கும்போது, அவற்றை இனம்காணும் கருவிகள், காஸ்மிக் கதிர்களையும் சேர்த்தே இனம் கண்டுகொள்கின்றன. அதனால் காஸ்மிக் கதிர்களையும், வேறு பல கதிர்களையும் முதலில் வடிகட்டிப் பிரிக்க வேண்டும். அதற்குத்தான் நமக்கு அந்தக் கனிமவகை மலைகள் தேவைப்படுகின்றன. இந்தக் கனிமவகைப் பாறைகள், நியூட்ரீனோக்களுடன் சேர்ந்து பயணம் செய்யும் காஸ்மிக் கதிர்கள் உட்பட அனைத்துக் கதிர்களையும் ஊடறுத்துச் செல்ல விடாமல் தடுத்துவிடும். நம்ம கதாநாயகன் நியூட்ரீனோதான் பெரும் வீரனாச்சே! (அதனால்தான் அவன் இவர்களுக்குத் தேவைப்படுகிறானா?). அவனை இந்த மலைகளால் தடுக்க முடியாது. அதனால், மலைகளையும் ஊடுருவிக்கொண்டு சுரங்கப்பாதைக்குள் நுழைவான். அங்கு அவனைக் கண்டுகொள்ளும் பொறிகளுடன் விஞ்ஞானிகள் காத்திருப்பார்கள். அந்தப் பொறிகள் என்ன விதமானவை என்பதைப் பின்னர் சொல்கிறேன்.

சார்னோக்கைட் வகை விசேசமான பாறைகளுள்ள மலைகள் எங்கேயிருக்கின்றன என்று தேடிப் பார்த்ததில் அது தேனி மாவட்டத்தில் இருக்கும் பொட்டிபுரம் கிராமத்தில் இருப்பதாகக் கணித்திருக்கிறார்கள். ஆனால், 'இவை தமிழ்நாட்டிலுள்ள் பொட்டிபுரத்தில்தான் இருக்கிறதா அல்லது இந்தியாவின் வேறு இடங்களிலும் இருக்கிறதா?' என்று பார்த்தால், இதுபோன்று வேறு பல மலைகள் இந்தியாவில் இருக்கின்றன என்றே தெரியவருகிறது. அப்புறம் ஏன் தேனி? மற்ற இடங்கள் ஏன் தேர்வில்லை? என்னும் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை. அது அரசியல் சார்ந்தது. அரசியல் சார்ந்து நான் எதுவும் பேசப் போவதில்லையென்று முன்னரே சொல்லியிருக்கிறேன். ஆனாலும், அரசியல் சாராமல் சில தகவல்களைச் சொல்லிவிடுகிறேன்.

ஒரு மலையின் கீழ், ஒரு கிலோமீட்டருக்கு அதிகமான ஆழத்தில் சுரங்கம் அமைத்து அங்கு நியூட்ரீனோவை கண்டுகொள்ளும் டிடெக்டர்களை அமைக்க வேண்டுமென்றால், சில ஆயிரம் தொன்களுடைய பாறைகள் வெடிவைத்து உடைத்தெறியப்பட வேண்டும். நியூட்ரீனோவைக் கண்டறியும் ஆய்வகம் ஒரு கிலோமீட்டருக்கு (அல்லது இரண்டு) அதிகமான பரப்பளவைக் கொண்டதாக இருக்க வேண்டும். இவையெல்லாம் பொட்டிபுரத்தில் சாத்தியமா, இல்லையா? என்று சத்தியமாக எனக்குத் தெரியாது. பொட்டிபுரம் என்னும் ஊரைப் பற்றியும் தெரியாது. அதிகம் ஏன், தேனி என்பதையே பாரதிராஜா பிறந்த ஊர் என்ற வகையில்தான் நான் முதலில் அறிந்து கொண்டேன்.

இந்தத் தொடரின் இரண்டாவது பகுதியில், தம்பி சதீஷ் (Sathish Boju) இட்ட கமெண்டில், பொட்டிபுரம் தன்னுடைய கிராமம் என்று சொல்லியிருந்தார். அவரிடம்தான் நான் கேட்டறிய வேண்டும்.

- தொடரும்