My goal is simple. It is a complete understanding of the universe, why it is as it is and why it exists at all - Stephan Hawking
உலகிலேயே மிகப்பிரபலமான, இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், இன்றிலிருந்து சரியாக ஆறு வருடங்களுக்கு முன்னர் ஒரு வினோதமான சம்பவம் நடைபெற்றது. அதாவது, 2009ம் ஆண்டு யூன் மாதம் 28ம் தேதியன்று அந்தச் சம்பவம் நடைபெற்றது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விழா மண்டபம் மிகவும் அழகாக, ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. உயர்தர விருந்துக்குத் தேவையான உணவுவகைகளும், குளிர்பானங்களும் அங்கே பரிமாறுவதற்கேற்பத் தயாராகியிருந்தன. ஷாம்பெய்ன் பாட்டில்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன. பல விருந்தினர்களை எதிர்பார்த்து அந்த விருந்துபசாரம் ஏற்பாடாகியிருந்தது. விருந்தில் கலந்துகொள்ளவிருக்கும் விருந்தினர்களை வரவேற்கத் தயாரான நிலையில், விருந்தை ஏற்பாடு செய்தவர் பதட்டத்துடன் காத்திருந்தார். விருந்துக்கான நேரமான மதியம் 12 மணி நெருங்கிக் கொண்டேயிருந்தது. யாரும் அதுவரை விருந்துக்கு வந்துசேரவில்லை. விருந்தை ஏற்பாடு செய்தவரின் முகத்தில் ஏமாற்ற ரேகைகள் படர்ந்துகொண்டிருந்தது. கடைசியில் 12 மணியும் ஆகியது. விருந்தில் கலந்துகொள்வதற்கு ஒருவர்கூட வரவில்லை. விருந்துக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தால்தானே யாரும் அந்த விருந்துக்கு வருவார்கள். ஆம்! இவ்வளவு தடல்புடலாக ஏற்பாடாகியிருந்த விருந்துக்கு, யாருக்கும் அழைப்புக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. அப்படியென்றால் யார்தான் விருந்துக்கு வருவார்கள்? விருந்துக்கு ஏற்பாடு செய்தவர் எப்படி விருந்தாளிகளை எதிர்பார்த்தார்? அவர்கள் வரவில்லையென்றதும் அவர் ஏன் அந்தளவுக்குப் பதட்டப்பட்டார்? அழைக்காத விருந்துக்கு வரும் வழக்கம் இங்கிலாந்தில் யாருக்குமே இருந்ததில்லை. அப்படியிருக்க, இவ்வளவு செலவளித்து விருந்தொன்றை ஏற்பாடு செய்து, யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்காமல் இருந்தது ஏன்? 'விருந்துக்கான அழைப்பிதழ் அச்சடிக்கப்படவில்லையா?' என்று பார்த்தால், அங்கும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. தேவைக்கு அதிகமாகவே அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டிருந்தன. சொல்லப் போனால், ஒன்றல்ல, இரண்டு விதங்களில் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால் யாருக்குமே அந்த அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. "அட! இது என்ன கோமாளித்தனம்?" என்றுதானே யோசிக்கிறீர்கள். "விருந்துக்கு அழைத்தவர் நிச்சயம் ஒரு முட்டாளாகத்தான் இருக்கவேண்டும்" என்றும் இப்போது நினைப்பீர்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அழைத்தவர் மிகையறிவுடைய ஒரு புத்திஜீவி. இன்றைய உலகில் முதல்தர அறிவியல் மேதையாகக் கருதப்படுபவர். அல்பேர்ட் ஐன்ஸ்டைனுக்குப் பின்னர் அவரின் இடத்தை நிரப்பக் கூடியவரென்று கருதப்படுபவர். அந்த நபர் வேறு யாருமல்ல, அவர்தான் ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking). சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, தன் கணிதச் சமன்பாடுகளால் ஒட்டுமொத்தப் பிரபஞ்சதையே அளந்து கொண்டிருப்பவர்.
"அட! ஸ்டீபன் ஹாக்கிங்கா இப்படியொரு முட்டாள்தனமான வேலையைச் செய்தார்?" என்று நினைப்போம். அவர் அந்த விருந்தை ஒரு காரணத்தை முன்னிட்டே ஏற்பாடு செய்திருந்தார். ஹாக்கிங் அந்த விருந்தைச் சாதாரண மனிதர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கவில்லை. விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் அனைவருமே எதிர்காலத்தில் வசிப்பவர்கள். அதாவது பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பூமியில் வாழ்ப்போகும் நம் எதிர்காலச் சந்ததியினர், 'காலப் பயணம்' (Time Travel) மூலமாக இறந்தகாலத்திற்கு வந்து, இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கேற்ப, விருந்து மண்டபத்தின் வாசலில் அவர்களை வரவேற்கும் விதமாகப் பெரிய பதாகையொன்றும் வைக்கப்பட்டிருந்தது. அதில் 'நல்வரவு காலப் பயணிகளே!' (Welcome Time Travellers) என்றும் எழுதப்பட்டிருந்தது. 'அப்படியென்றால் ஸ்டீபன் ஹாக்கிங் செய்தது ஒரு முழுமையான கோமாளித்தனம்தானே!' என்று நாம் நினைப்போம். ஆனால், உண்மையில் ஒரு பரிசோதனைக்காகவே ஸ்டீபன் ஹாக்கிங் அப்படியொரு விருந்தினை ஏற்பாடு செய்திருந்தார். அதனால்தான் விருந்து நடைபெறும்வரை யாருக்கும் அழைப்பிதழே கொடுக்கப்படவில்லை. எதிர்காலச் சந்ததியினர் என்றாவது ஒருநாள் இந்த அழைப்பிதழைக் கண்டுகொள்ளலாம், அப்போது அவர்கள் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருந்துக்குக் கால இயந்திரத்தினூடாக அல்லது 'புழுத்துளை' (Wormhole) ஊடாக வந்து கலந்துகொள்ளலாம். இது ஒருவிதமான பரிசோதனைதான்.


ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு சாதாரண மனிதரல்ல. மனிதனின் அறிவியல் வளர்ச்சியில், குறிப்பாகக் கணித, இயற்பியல் வரலாற்றில் ஐசாக் நியூட்டன் மிகப்பெரிய விஞ்ஞானியாக அறியப்பட்டார். அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், அல்பேர்ட் ஐன்ஸ்டைன் என்பவர் பெரும் மேதையாக உருவெடுத்தார். ஐன்ஸ்டைனுக்குப் பின்னர், இன்றைய காலகட்டங்களில் அப்படிப் பார்க்கப்படுபவர் ஸ்டீபன் ஹாக்கிங்தான். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கல்விகற்று, இயற்பியலில் டாக்டர் பட்டம்பெற்று, அங்கேயே விரிவுரையாளராகவும் கடைமையாற்றியவர். எல்லையில்லா இந்தப் பிரபஞ்சவெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் கோள்கள், நட்சத்திரங்கள், காலக்ஸிகள், கருந்துளைகள் என அனைத்துமே நான்கு அடிப்படை விசைகளினாலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன. பிரபஞ்சம் உருவாகக் காரணமாகவிருந்த ஆதிப் பெருவெடிப்பின்போது (Bigbang), இந்த நான்கு விசைகளும் ஒன்றாகி, ஒருபுள்ளியில் அமைதியாக ஒடுங்கியிருந்தன என்று ஐன்ஸ்டைன் நம்பினார். அதனடிப்படையில், இந்த நான்கு விசைகளையும் ஒரே கணிதச் சமன்பாட்டிற்குள் கொண்டுவரலாமென்றும் அவர் நம்பியிருந்தார். ஐன்ஸ்டைன் தன் இறுதிக் காலங்களை அந்தச் சமன்பாடு எதுவெனக் கண்டிபிடிக்கும் முயற்சியிலேயே செலவிட்டார். ஆனால், அதைக் கண்டுபிடிக்காமலேயே இறந்தும் போனார். அந்தச் சமன்பாட்டைத்தான், 'Theory of everything' என்பார்கள். ஐன்ஸ்டைனின் மறைவுக்குப் பின்னர் இந்தச் சமன்பாட்டைக் கண்டுபிடிப்பதற்குப் பல இயற்பியல் விஞ்ஞானிகள் முயன்றார்கள். அதில் முக்கியமானவர்களில் ஒருவர் ஸ்டீபன் ஹாக்கிங் ஆவார். அதனாலேயே சமீபத்தில் ஹாக்கிங்கின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹாலிவூட் திரைப் படத்திற்கு 'Theory of Everything' என்று பெயரிடப்பட்டிருந்தது.
பேரண்டத்தின் ஆரம்பமான பெருவெடிப்பிற்கு முன்னால், ஒரு சிறுபுள்ளியாகப் பேரண்டம் முழுவதும் ஒடுங்கியிருந்தது. அப்படிச் சிற்புள்ளியாக ஒடுங்கியிருப்பதை 'ஒருமைப் புள்ளி' (Singularity) என்று அறிவியலில் அழைக்கிறார்கள். இந்த ஒருமைப்புள்ளிபற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த போதுதான் இதுபோன்ற பல ஒருமைப்புள்ளிகள் பேரண்டமெங்கும் நிறைந்திருக்கின்றன என்பது ஹாக்கிங்கிற்கு தெரியவந்தது. அந்த ஒருமைப்புள்ளிகள், அண்டத்தின் ஆரம்பப் புள்ளி போலல்லாமல், சற்று வேறுவகையானவை. 'பிளாக் ஹோல்' (Blackhole) என்று சொல்லப்படும் கருந்துளைகளின் மையமாக, இந்த ஒருமைப்புள்ளிகள் இருப்பதை அவர் தெரிந்து கொண்டார். அதனால், கருந்துளைகள் பற்றிய ஆராய்ச்சிகளில் தனது பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டார். அப்படி அவர் செலவிட்டது வீண்போகவில்லை. 'ஹாக்கிங் கதிர்வீச்சு' (Hawking Radiation) என்னும் புரட்சிகரமான கருத்தொன்றை அறிவியலுக்குச் சமர்ப்பித்தார். அந்தக் கதிர்வீச்சுக்கான இயற்பியல் சமன்பாடொன்றையும் உருவாக்கிக் கொடுத்தார். கருந்துளையென்றாலே, தனக்கருகே செல்லும் அனைத்தையும் தன் ஒருமை மையத்தை நோக்கி இழுதுக் கொள்ளுமென்றுதான் அதுவரை பலர் நம்பியிருந்தார்கள். எதையும் வெளியே செல்லவிடாமல் இழுத்துக் கொள்ளுமளவுக்கு மிகை ஈர்ப்புச்சக்தி கொண்டது கருந்துளை. ஒளிகூட அதன் ஈர்ப்பிலிருந்து தப்பிக்கொள்ள முடியாது. ஒளியும் இழுக்கப்பட்டுவிடுவதால்தான், அது கருமையான நிறத்துடன் காணப்படுகிறது என்றும் நம்பப்பட்டு வந்தது. ஆனால் ஹாக்கிங் சொன்னது அதற்குச் சற்றே மாறாகவிருந்தது. கருந்துளையினால் அதனருகே செல்லும் அனைத்துமே உள்ளிழுக்கப்படும்போது, அவை அணுத்துகள்களாகச் சிதைவதால் ஏற்படும் பெருவெப்பதால் உருவாகும் கதிர்வீச்சைக் கருந்துளைகள் வெளிவிட்டுக்கொண்டிருக்கிறன என்று ஹாக்கிங் கண்டுபிடித்தார். ஆரம்பத்தில் இதைப் பல விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. 'ஒளியையே வெளியேவிடாமல் இழுத்துவைக்கும் கருந்துளைகள், எப்படிக் கதிர்வீச்சை வெளிவிடமுடியும்?' என்ற சந்தேகம் அவர்களுக்கிருந்தது. ஆனால் ஹாக்கிங்கின் கோட்பாட்டைப் பின்னர் பலரும் ஏற்றுக் கொண்டனர். சமீபத்தில்கூட, 'கருந்துளைகள் கருமை நிறத்துடன் இருக்க மாட்டாது, அவை சாம்பல் நிறம் கொண்டவை' என்று வேறொரு புரட்சிகரமான கருத்தையும் ஹாக்கிங் வெளியிட்டிருக்கிறார்.

இயற்பியலிலும், வானியலிலும் நம்பவே முடியாத முடிவுகளை முன்னிறுத்திப் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டார் ஹாங்கிங். அவற்றில் முக்கியமான புத்தகங்களாகக் கருதப்படுபவை 'பெரும் வடிவமைப்பு' (The Grand Design), 'காலத்தின் வரலாற்றுச் சுருக்கம்' (A Brief History of Time) என்னும் இரண்டு புத்தகங்களுமாகும். 1988ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 'காலத்தின் வரலாற்றுச் சுருக்கம்' என்பது, இதுவரை பத்து மில்லியன் புத்தகங்களுக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் வெளியாகும் 'சண்டே டைம்ஸ்' இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ச்சியாக, 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம். இவரின் புத்தகங்களைப் படிக்கும்போது, ஆச்சரியத்தில் நம் மனம் நிறைந்து போய்விடும். அவ்வளவு ஆச்சரியங்களை நமக்குக் கொடுத்த ஸ்டீபன் ஹாக்கிங், நிஜத்திலும் ஆச்சரியமானதொரு மனிதராகவே காணப்படுகிறார். தன் உடற்பாகங்கள் எதையுமே அசைக்க முடியாத நிலயில், ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு இவையனைத்தையும் சாதித்துக் காட்டியிருக்கும் ஒரே மனிதர் ஸ்டீபன் ஹாக்கிங் மட்டும்தான். பல்கலைக் கழகத்தில் கல்விகற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு வினோதமான நோயினால் பாதிக்கப்பட்டு, படிப்படியாக உடலுறுப்புகளின் அசைவுகளை இழந்துவந்தார் ஹாக்கிங். இறுதியில் அவரது கண் இமையையும், புருவத்தையும் மட்டுமே அசைக்கக் கூடிய நபராக முடங்கிப் போனார். முடங்கிப் போனது அவரது உடலுறுப்புகள் மட்டும்தான். ஆனால் அவரது மூளையோ சிந்தனை செய்வதில் விரிவடைந்துகொண்டே சென்றது. அவரது வற்றாத சிந்தனையினால் இன்றும் பல ஆராய்ச்சிகளைக் கண்டுபிடித்து, வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். அவர் சிந்திப்பதையும், கண்டுபிடிப்பதையும் நம்முடன் பகிர்ந்து கொள்வதற்கென்று பிரத்தியேகமாய் ஒரு கணணியை உருவாக்கியிருக்கிறார்கள். தனது கண், புருவ அசைவுகளால் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை அந்தக் கணணி ஒலிவடிவமாகவே வெளிக்கொண்டு வருகிறது.
'Amyotrophic Lateral Sclerosis' என்றும், சுருக்கமாக 'ALS' என்றும் அழைக்கப்படும் ஒருவித உடலியல் பக்கவாத நோயினால் (Muscular dystrophy) ஸ்டீபன் ஹாக்கிங் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நோயை, 'லூ கேரிக் நோய்' (Lou Gehrig's disease) என்றும் சொல்வார்கள். 1923 முதல் 1939ம் ஆண்டு காலம்வரையில் அமெரிக்காவில் மிக மிகப்பிரபலமான பேஸ்பால் வீரராக இருந்தவர் லூ கேரிக். 1939ம் ஆண்டு அவர் இந்த உடலியல் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். அடுத்த இரண்டு வருடங்களில் அவரின் சகல உடற்பாகங்களும் செயலிழந்து இறந்து போனார். அமெரிக்காவில் மிகப்பிரபலமாக இருந்த ஒருவர் அப்படியொரு நோயினால் இறந்து போனது முழு அமெரிக்காவையே கவலைக்குள்ளாக்கியது. இதனாலேயே முதன்முதலாக அந்த நோய்பற்றி உலகம் முழுவதும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அதனால், லூ கெரிக்கின் பெயரினாலும் இந்த நோய் அழைக்கப்படுகிறது. ஸ்டீபன் ஹாக்கிங்கையும் அவரது 21 வயதில் இந்த நோய் தாக்கியது. அடுத்த இரண்டு வருடங்களில் அவர் இறந்துவிடுவாரென்று டாக்டர்களால் அறிவுறுத்தப்பட்டார் ஹாக்கிங். ஆனால், அவற்றையெல்லாம் தன் மனோபலத்தின் மூலம் வென்று, 73 வயதுகள் கடந்து, இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் மனம் தளர்ந்து போன நாட்களும் உண்டு.
வாழ்க்கையில் வெற்றிகண்ட மனிதர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதே மனிதன் சில காலங்களின் பின்னர் தோல்வியுற்றதையும் அறிந்திருப்பீர்கள். ஆனால் ஒரே சமயத்தில் யாரும் அடைய முடியாத மாபெரும் வெற்றியையும், மிக மோசமான தோல்வியையும் காணமுடியாது. அப்படி ஒரே சமயத்தில் இரண்டையும் அனுபவித்த நபர் ஸ்டீபன் ஹாக்கிங் மட்டுமாகவே இருக்க முடியும். 1980ம் ஆண்டு முதல்1985ம் ஆண்டு வரையுள்ள காலங்களில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. இங்கிலாந்திலிருந்து வேறு பல நாடுகளுக்கு அறிவியல் உரையாற்ற இவரை அழைக்கத் தொடங்கினர். அந்தக் காலகட்டங்களில்தான் தனது 'A Brief History of Time' புத்தகத்தை எழுதவும் ஆரம்பித்தார். கல்லூரிக் காலங்களில் அவரைக் காதலித்து, அவருக்கு உடலியல் பக்கவாத நோய் இருக்கின்றது என்று தெரிந்தும், அவரையே திருமணம் செய்து வாழ்ந்துவந்த 'ஜேன்' (Jane), இன்னுமொரு நபருடன் நெருங்கிய நட்பாக இருக்கிறார் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் அறிந்து கொண்டது இந்தக் காலங்களில்தான். 1965ம் ஆண்டில் ஜேனைத் திருமணம் செய்து, மூன்று பிள்ளைகளுக்கு அப்பாவும் ஆகியிருந்தார் ஹாக்கிங். தன் உடல் மோசமான நிலையில் இருந்தாலும், மனைவி, பிள்ளைகளென மகிழ்ச்சியுடனே வாழ்ந்துவந்த ஹாக்கிங்கிங்கை, 'மனைவி இன்னொரு நபருடன் தொடர்பாக இருக்கிறார்' என்ற செய்தி தலைகீழாய்ப் புரட்டிப் போட்டது. தன் சோகத்தைக் கூட வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல், ஜடம் போல உள்ளுக்குள் உடைந்துகொண்டிருந்தார். தனிமையின் விரக்தி அன்றுதான் அவரைத் துரத்த ஆரம்பித்தது. 1985ம் ஆண்டு, ஒரு அறிவியல் மாநாட்டுக்குச் சென்றிருந்த வேளையில் மயக்கமடைந்து வீழ்ந்துவிடுகிறார் ஹாக்கிங். "அவரைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அவரது தொண்டையில் ஆபரேசன் மூலம் நிரந்தரமாகத் துளையிட வேண்டுமெனவும், அதன்பின்னர் ஹாக்கிங்கால் பேசவே முடியாது போய்விடும்" என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அதுவரை சிரமப்பட்டாவது பேசிவந்த ஹாக்கிங்கிற்கு இரண்டாவது பேரிடியாக அது இறங்குகிறது. விரக்தியின் உச்சிக்கே செல்கிறார். அப்போதுதான் முதன்முதலாக ஹாக்கிங் தற்கொலை முயற்சிக்கு முயல்கிறார். வெற்றியின் உச்சியில் இருந்த மாபெரும் மனிதனொருவன் தற்கொலைக்கு முயற்சித்தார் என்ற செய்தி, மக்களால் நினைத்தே பார்க்க முடியாதவொன்றாக இருந்தது. அதுவும் அறிவியல் உலகிற்கு கிடைத்த ஒரு சுப்பர் ஸ்டார், அப்படியொரு நிலைக்குப் போவாரென்று யாராலும் நம்ப முடியவில்லை. அதை நினைத்து அனைவரும் மனம் கலங்கினர். தான் தற்கொலைக்கு முயன்றதாகப் பகிரங்கமாக ஹாக்கிங்கே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
கைகளையும், கால்களையும், உடலையும் அசைக்க முடியாத ஒருவரினால் எப்படித் தற்கொலை செய்யமுடியும்? அவரால் செய்ய முடிந்ததெல்லாம் தன் மூச்சை தானே அடக்கிக் கொள்வது மட்டும்தான். அதைத்தான் செய்து தற்கொலைக்கு முயன்றார் ஹாக்கிங். தன் மூச்சை அடக்கியபடி, அப்படியே இருந்தார் ஹாக்கிங். ஆனால் அவரது மூளை அதற்கு இடம்கொடுக்கவில்லை. அவரையும் மீறி உடைத்துக்கொண்டு வெளிவந்தது மூச்சு. தன் இஷ்டத்துக்குத் தற்கொலைகூடச் செய்ய முடியவில்லையே என்ற தனது நிலையை நினைத்தும், தனது தனிமையை நினைத்தும் தனக்குள்ளே அழ ஆரம்பித்தார் அவர். 1990ம் ஆண்டு அவரது மனைவி ஜேன் அவரைவிட்டுப் பிரிந்து சென்றார். அந்த நேரத்தில் அவருக்குத் தாதியாகப் பணிசெய்ய வந்திருந்த எலீனாவைத் (Elaine) திருமணம் செய்தார் ஹாக்கிங். அதன்பின்னர் தனிமை விரக்திநிலையிலிருந்து ஹாக்கிங் மெல்ல மெல்ல விடுவிக்கப்பட்டாரென்றுதான் சொல்ல வேண்டும். எலீனாவுடன் மொத்தமாகப் பதினொரு ஆண்டுகள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார் ஹாக்கிங். அந்த உறவும் 2006ம் ஆண்டு முடிவு நிலைக்கு வந்து, முறிந்து போனது. அதன்பின்னர் இன்றுவரை தனிமையிலேயே தன்வாழ்க்கையைத் தொடர்ந்துவந்த ஹாக்கிங், சமீபத்தில் பிபிசிக்குக் (BBC) கொடுத்த பேட்டியில் மீண்டும் தற்கொலை செய்வதுபற்றிப் பேசியது, மக்களை அவர்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அந்தப் பேட்டியினாலேயே அவரைப்பற்றிக் கட்டுரை எழுத வேண்டுமென்ற அவசியம் ஏற்பட்டது. அப்படி அவர் என்னதான் பிபிசிக்குச் சொல்லியிருந்தார் தெரியுமா?

"என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலையில், அடுத்தவருக்குப் பாரமாக இருக்கும்பட்சத்தில், அவர்களின் உதவியுடன் நான் தற்கொலை செய்வதுபற்றிப் பரிசீலிப்பேன்" என்றி பிபிசிக்குக் கொடுத்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் ஹாக்கிங். இன்றைய அறிவியல் உலகில் அதிமுக்கிய நபராகக் கருதப்படும் ஒருவர், இப்படிப் பொதுவெளியில் வெளிப்படையாகப் பேட்டியளித்தது பலரை நெகிழ வைத்திருக்கிறது. எவ்வளவுதான் சாதனைசெய்திருந்தாலும், உடல்நலம் குன்றிய நிலையில் தன் இயலாமையைச் சுட்டிக்காட்டும் வண்ணம் அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பவை கண்கலங்கவைக்கும் நிகழ்வாகவேயிருந்தது. அறிவியலின் பல சிக்கல்களை இவர் தீர்த்து வைப்பார் என்று நம்பியிருக்கும் வேளையில், தனது மரணம்பற்றி அவர் பேசியது மிகமுக்கியமான செய்தியாகப் பலரால் பார்க்கப்படுகிறது. ஸ்டீபன் ஹாக்கிங் என்னும் மாமேதையை நாம் இழப்போமானால், அறிவியலில் அவரின் இடத்தை நிரப்புவதற்கு எவருமே இல்லாமல் போய்விடும். ஒரு சக்கர நாற்காலியில் அசையமுடியாமல் அமர்ந்திருக்கும் ஒருவர், தன் கண்ணசைவினால் மட்டும் இவ்வளவு சாதனைகளைச் செய்திருக்கிறாரென்றால், அவர் ஒரு சாதாரண மனித நிலையிலிருப்பவரல்ல. நம்பவே முடியாத கணிதச் சமன்பாடுகளையெல்லாம் இந்த நிலையிலேயே வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர் 21ம் நூற்றாண்டின் மாபெரும் அதிசயம். அதுமட்டுமல்ல, மனித இனத்துக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிசமும்கூட. அப்படிப்பட்ட ஒருவர் இறந்துபோவதைக் கற்பனை செய்து பார்க்கும்போதே, பலரின் மனங்கள் கலங்கியதில் எந்த ஆச்சரியமும் இருக்க முடியாது.
வாழ்க்கையில் வெறுமையடைந்து, எதுவுமே செய்ய முடியாமல், அடுத்தவர் தயவுடனே வாழ்வேண்டிய நிலையில், தற்கொலைசெய்ய ஒருவர் விரும்பும்போது, அதற்கும் இன்னுமொருவரின் உதவியே அவருக்குத் தேவைப்படுமாயின், அந்த மனிதன் மிகவும் பரிதாபமானவன் என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப்பட்டவர்களால் வாழ்க்கையில் வலியறிதலைத் தவிர, வேறு எதுவுமே செய்ய முடியாது என்று முடிவாகிவிட்டால், அவர்களை ஏன் கருணைக்கொலை செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்ற குரல் உலக நாடுகளில் பல இடங்களில் கேட்கத் தொடங்கிவிட்டன. இப்படிப்பட்டவர்களைக் கருணைக்கொலை செய்யலாமெனச் சட்டரீதியாகப் பல நாடுகள் அனுமதித்துக் கொண்டுமிருகின்றன. ஆனால், ஒருவனின் உயிரை எடுத்துக்கொள்ளக் கடவுளுக்கு மட்டும்தான் உரிமை உண்டு, வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது. அந்த மனிதனுக்கே தன்னை மாய்த்துக்கொள்ள உரிமை கிடையாது என்ற எதிர்க் குரல்களும் எழாமலில்லை. இதில் எது சரி, எது தவறு என்ற தீர்ப்புச் சொல்லும் நிலையில் நானும் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட நிலைமை ஒரு மனிதனுக்கு வருமானால் அதுவே கொடுமையின் உச்சம் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். உடல் வலியோ, மனவலியோ அவரவர் மட்டுமே உணர முடியும். ஒருவரின் வலியுடன் ஒப்பிட்டு அடுத்தவரின் வலியை எடைபோடவே முடியாது. வலிதாங்கும் மனமும், வலிமையும் மனிதனுக்கு மனிதன் வேறானதாகும். யாரும் ஒரு உயிர் போவதை விரும்புவதில்லை. அது என்ன காரணமாக இருந்தாலும். ஆனால் இதுபோன்ற நிர்ப்பந்தங்களுக்குள்ளாகும் மனிதர்களின் சமீபத்தில் எப்போதும் உடனிருந்து, குறைந்தபட்சம் அவர்களின் தனிமையைப் போக்க ஒவ்வொருவராலும் முடியும். தனிமையே பல தற்கொலை எண்ணங்களுக்கு வித்துகளையிடுகிறது. நிராகரிப்பைப் போல ஒரு மனிதனுக்குக் கொடுக்கும் பெருந்தண்டனை உலகில் வேறெதுவும் கிடையாது. பொதுவெளியில் பகிரங்கமாக, ஒரு மாபெரும் மனிதனே, "என்னைத் தற்கொலைக்கு அனுமதித்துக் கொன்றுவிடுங்கள்" என்று சொல்லுமளவுக்கு சூழ்நிலை உருவாகியிருப்பது, மனித சமுதாயமே வெட்கப்பட வேண்டிய துயரம்.
பிபிசியின் அந்தப் பேட்டியின்போது, "என்னுடன் பேசுவதற்கே பலர் பயப்படுகிறார்கள்" என்று ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லியிருந்தது, இன்னும் காற்றலைகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.